2025இல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள்.. கூலி முதல் S.K 23 வரை மொத்த லிஸ்ட் இதோ!
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான ஆண்டாக அமையவேண்டும் எனும் எண்ணத்தில்தான் அனைவரும், ஒரு ஆண்டைத் தொடங்குகின்றார்கள். ஆனால் அனைவருக்கும் ஒவ்வொரு ஆண்டும் நினைத்ததைப்போல் அமைவதில்லை. அப்படித்தான் கடந்த ஆண்டு அமைந்தது. 241 படங்கள் தமிழில் ரிலீஸ் ஆகி, அதில் வெறும் 18 படங்கள் மட்டுமே பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது என்றால், தமிழ் திரைத்துறை தொடர்ந்து நஷ்டத்தை நோக்கித்தான் சென்று கொண்டு உள்ளது. இதில், கடந்த ஆண்டில் மட்டும் ரூபாய் 1,000 கோடிகள் நஷ்டம் என ஒரு புள்ளிவிபரம் சொல்லுகின்றது. இப்படியான நிலையில் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் லிஸ்ட்டை இந்தத் தொகுப்பில் காணலாம்.
கூலி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், படம், இந்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என்பதில் மட்டும் சந்தேகம் வேண்டாம். அதேபோல், படம் ஜூலை மாதத்திற்கு முன்னர் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூவில் இடம் பெறுவதாக கூறப்படுகின்றது. அதேபோல் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் 2 படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனாலும், ஜெயிலர் 2 படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.

தக் லைஃப்: மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். இந்தப் படம் கமல்ஹாசனின் 234வது படம். படத்தை ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல் கமல்ஹாசனின், இந்தியன் 3 படமும் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.

தளபதி 69: ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 69. இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படாததால், படத்தினை தளபதி 69 என்று அழைத்து வருகின்றார்கள். படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வார்களா?, அல்லது அக்டோபரில் இடைப்பட்ட நாளில் ரிலீஸ் செய்வார்களா என்ற கேள்வி உள்ளது. இந்தப் படம் விஜய்யின் திரை வாழ்க்கையில் கடைசி படம்.

குட் பேட் அக்லி, விடாமுயற்சி: அஜித் நடிப்பில் இந்த ஆண்டில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவது உறுதி. இதில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்ட, விடாமுயற்சி படம் பொங்கல் ரேஸில் இருந்து வெளியேறியுள்ளது. இதுமட்டும் இல்லாமல், விடாமுயற்சி படத்தினால், பொங்கலுக்கு வர திட்டமிடப்பட்ட, குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போயுள்ளது. எப்படியும் இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகவுள்ளது மட்டும் உறுதி.

வீர தீர சூரன்: விக்ரம், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வீர தீர சூரன் பாகம் 2. இந்தப் படத்தினை அருண் குமார் இயக்கியுள்ளார். விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாத காரணத்தால், இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது. இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

S.K 23: இன்னும் பெயர் சூட்டப்படாத படமான சிவகார்த்திகேயனின் 23வது படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாக இருக்கின்றது. படத்தை ஏர்.ஆர். முருகதாஸ் இயக்குகின்றார். இந்தப் படம் கட்டாயம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகவுள்ள படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக உள்ளது. மேலும் இது துப்பாக்கி படத்தின் கதைக்களத்தோடு இணைந்து பயணிக்கும் படமாகவும் இருக்கும் என்ற பேச்சும் திரையுலகில் அடிபடுகின்றது.

இந்தப் படங்கள் மட்டும் இல்லாமல், சூர்யாவின் ரெட்ரோ, கார்த்தியின் சர்தார் 2, தனுஷின் குபேரா மற்றும் அவரே இயக்கி நடித்துள்ள இட்லி கடை, இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமும் மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது. பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள அருண் விஜய்யின் வணங்கான், இயக்குநர் ஷங்கரின் கேம் சேஞ்சர் போன்ற படங்கள் மீதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications











