நகைக்கடை திறப்பு விழா.. அரசு வாகனத்தில் வந்த நிதி அகர்வால்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: முன்னா மைக்கேல் ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய நிதி அகர்வால், தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த எந்த படமும் பெயர் சொல்லும் அளவிற்கு இல்லாததால், கோலிவுட்டில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த இவர், டோலிவுட்டில் பிஸியாக நடித்து வரும் இவர், நகைக்கடை திறப்பு விழாவிற்கு அரசு வாகனத்தில் வந்தது சர்ச்சைக்குள்ளான நிலையில் அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
பளபளக்கும் உடம்பு, பார்த்தவுடன் உச்சு கொட்டவைக்கும் அழகு என ஒட்டுமொத்த அழகுக்கும் சொந்தக்காரியாக இருக்கிறார் நடிகை நிதி அகர்வால். இவர் தமிழில், பூமி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து, ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார், இந்த படம் வசூல் ரீதியாக தோல்வி என சொல்லப்பட்டாலும், இந்த படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற மாங்கல்யம் மாங்கல்யம் தந்துனானே என்ற பாடல் ஹிட்டடித்தது.

நடிகை நிதி அகர்வால்: அதன் பின், இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் கலகத்தலைவன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமும் இவருக்கு பெயரை பெற்றுத்தரவில்லை. இதனால், டோலிவுட் பக்கம் சென்ற நிதி அகர்வால் நடித்த படம் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் பவன் கல்யாணின் ஹரிஹர வீரமல்லு மற்றும் பிரபாஸின் தி ராஜா சாப் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் வெற்றி பெற்றால் இந்த நடிகை உச்சத்திற்கே சென்றுவிடுவார் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமில்லாமல், தங்களுடைய படத்தில் நிதி அகர்வாலைத்தான் ஹீரோயினாக போடவேண்டும் என்று இரண்டு இளம் ஹீரோக்கள் தயாரிப்பாளரை டார்ச்சர் செய்து வருவதாகவும் சொல்லப்படகிறது.
அரசு வாகனத்தை பயன்படுத்தவில்லை: இந்நிலையில்,பீமாவரத்தில் உள்ள ஒரு நகைக் கடை திறப்பு விழாவில் பங்கேற்க நிதி அகர்வால், அரசு வாகனத்தைப் பயன்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியதை அடுத்து, நிதி அகர்வால் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், பீமாவரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக, உள்ளூர் ஏற்பாட்டாளர்கள் ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். நான் அரசு வாகனத்தை கேட்கவும் இல்லை, தேர்வு செய்யவும் இல்லை. பயணத்திற்காக, உள்ளூர் ஏற்பாட்டாளர்கள் அந்த வாகனத்தை ஏற்பாடு செய்தார்கள்.
ஆனால், ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவது தனது கவனத்திற்கு வந்ததால், நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.
எல்லாம் பொய்: அரசு அதிகாரிகள் யாரும் எனக்கு வாகனம் அனுப்பவில்லை. இணையத்தில் பரவும் பொய்யான செய்தியில் உண்மை இல்லை. அவை ஆதாரமற்றவை. என்னைப் பற்றியும், அரசு வாகனம் பற்றியும் தவறான முறையில் பரப்பப்படும் தகவல்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தான் பயணித்த வாகனத்திற்கும் அரசு அதிகாரிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என்னை நேசிப்பவர்களுக்கு உண்மை தெரியும். இருப்பினும், தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும்போது, அதற்குப் பதிலளிப்பது என் கடமை என்பதால் நான் இதற்கு விளக்கம் அளித்து இருக்கிறேன் என நடிகை நிதி அகர்வால் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்


Click it and Unblock the Notifications











