விஜய் சேதுபதி படத்துக்குப் பிறகு தமிழில் மீண்டும் மெகா குடும்பத்து நடிகை..ட்விட்டரில் தகவல்!
சென்னை: விஜய் சேதுபதி படத்தை அடுத்து தமிழில் மேலும் ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார், பெரிய குடும்பத்து நடிகை.
விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், நிஹரிகா கோனிடெலா.
இவர் தெலுங்கு சினிமாவின் பெரிய குடும்பத்துப் பெண். அதாவது, மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி, நாகபாவுவின் மகள்.

நாகபாபு மகள்
தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நாகபாபு, தமிழில், வேட்டை, விழித்திரு, இந்திரஜித் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அவர் மகள் நிஹரிகா, நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஒக்க மனசு மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர், நிஹரிகா.

தயாரிப்பு நிறுவனம்
அடுத்து ஹேப்பி வெட்டிங், சூர்யகாந்தம், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். 'பிங்க் எலிபேன்ட் பிக்சர்ஸ்' எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். கடந்த 2016 ம் ஆண்டு இவர் தயாரித்து நடித்த முடபாப்பு ஆவக்காய் வெப்சீரிஸ் அவரது திறமையை டோலிவுட் சினிமாவுக்கு அறியப்படுத்தியது.

தமிழில் மீண்டும்
வெப் சீரிஸ் மீது நிஹாரிகாவிற்கு இருக்கும் ஆர்வம், தொடர்ந்து அவரை பல வெப்சீரிஸ்களை தயாரித்து நடிக்கவும் வைத்துள்ளது. நன்னா கூச்சி, மேட் ஹவுஸ் ஆகிய வெப்சீரிஸ்களையும் தயாரித்து நடித்துள்ளார். இந்நிலையில், இவர் இப்போது தமிழில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார். இதை ட்விட்டரில் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

லியோன் ஜேம்ஸ்
இந்தப் படத்தின் ஷூட்டிங்கை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார். ஸ்வாதினி இயக்குகிறார். கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார். நடிகை நிஹரிகாவுக்கும் பிரபாஸுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக சமீபத்தில் வதந்திகள் வெளியாயின. அதை அவர் மறுத்திருந்தார்.


Click it and Unblock the Notifications











