மாரி செல்வராஜை பார்த்தாலே எனக்கு பயம்.. வாழை பாடல் வெளியீட்டு விழாவில் திவ்யா துரைசாமி பளிச்!
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள 'வாழை' திரைப்படம் விரைவில் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், நேற்று அந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில், இயக்குநர் பா. ரஞ்சித், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.
மாரி செல்வராஜ் முதன் முதலில் வெறும் 50 லட்சம் இருந்தால் போதும் இந்த படத்தை இயக்கி இயக்குநராக தமிழ் சினிமாவில் கால் பதித்து விடலாம் என நினைத்ததாக கூறினார். ஆனால், அதன் பின்னர், அவசரப்பட்டு இந்தப் படத்தை எடுக்கக் கூடாது என முடிவெடுத்த அவர், காலம் வருவதற்காக காத்திருந்து தற்போது இந்த படத்தை கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறினார்.

இந்நிலையில், நிகழ்ச்சியில் அந்த படத்தில் நடித்த நடிகைகள் நிகிலா விமல் மற்றும் திவ்யா துரைசாமி பேசிய பேச்சுக்கள் பலரையும் கவர்ந்தன.
நிகிலா விமல் பேச்சு: "அழகிய லைலா" என மலையாள திரையுலகம் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் நிகிலா விமலின் அழகை ரசித்துக் கொண்டாடி வருகின்றனர். குருவாயூர் அம்பலநடையில் படம் வெளியானதில் இருந்தே நிகிலா விமல் மீண்டும் டிரெண்டாகி வருகிறார். மாரி செல்வராஜின் வாழை படத்தில் நடித்துள்ள நிகிலா விமல் நிச்சயம் இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்றும் தனது வாழ்நாளில் மறக்க முடியாத படமாக இருக்கும் என்றும் கூறினார்.

திவ்யா துரைசாமிக்கு பயம்: டெஸ்லா குயின் என ரசிகர்களால் அழைக்கப்படும் திவ்யா துரைசாமி இந்த ஆண்டு பா. ரஞ்சித் தயாரிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் படத்தில் பாண்டியராஜன் மகன் பிருத்விக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்து வாழை படத்திலும் இவர் நடித்துள்ள நிலையில், மேடையேறி பேசிய திவ்யா துரைசாமி, மாரி செல்வராஜ் சாரை பார்த்தாலே எனக்கு பயம் என்றார்.
மனைவியிடம் தான் கேட்பேன்: ஷூட்டிங்கில் ஃபயர் மாதிரி இருப்பார் மாரி செல்வராஜ் சார். நடித்து முடித்த பின்னர் அவரை பார்க்கக் கூட மாட்டேன் அவ்வளவு பயமாக இருக்கும். இந்த படத்துக்காக அவர் என்னை அழைக்கும் போது, நிஜமாகவே அவர் தான் அழைக்கிறாரா? அல்லது வேறு யாராவது கலாய்க்கிறாங்களான்னு நினைச்சேன். ஷூட்டிங்கில் ஷாட் முடிந்த பின்னர் கேமராமேன் தேனி ஈஸ்வர் சாரிடம் தான் நல்லா நடிச்சேனான்னு கேட்பேன். அதன் பின்னர், மாரி செல்வராஜ் சார் மனைவியிடமும் கேட்பேன். கடைசி வரை மாரி செல்வராஜிடம் அதைப்பற்றி கேட்டதே கிடையாது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தற்கு நன்றி கூட சொல்லல, அந்தளவுக்கு பயந்துட்டு இருந்தேன். இப்போ தேங்க்ஸ் சொல்லிக்கிறேன் என்றார்.

வாழை ரிலீஸ் தேதி: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள வாழை படம் குழந்தைகளுக்கான படமாக இருக்கும் என மாரி செல்வராஜ் கூறினார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வருகிறது. கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாமன்னன் வெற்றிக்குப் பிறகு மாரி செல்வராஜின் படம் அடுத்த மாதம் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











