வெறும் 29 வயசு தான் ஆகுது.. காஞ்சனா பட நடிகையின் சகோதரரும் கொரோனாவுக்கு பலி.. சோகத்தில் ரசிகர்கள்
மும்பை: காஞ்சனா 3 பட நடிகையும் பிக் பாஸ் 14 போட்டியாளருமான நடிகை நிக்கி டம்போலியின் அண்ணன் கொரோனா பாதிப்பு காரணமாக பலியாகி உள்ளார்.
வெறும் 29 வயதே ஆகும் அவருக்கு ஏகப்பட்ட நோய்கள் இருந்ததாகவும், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பும் ஏற்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக நடிகை நிக்கி டம்போலி சோகத்துடன் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நடிகை பியா பாஜ்பாயின் அண்ணனும் கொரோனாவுக்கு பலியான நிலையில், நடிகை நிக்கி டம்போலியின் அண்ணனும் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

அண்ணன் மரணம்
தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படத்தில் நாயகியாக நடித்த நிக்கி டம்போலியின் அண்ணன் ஜட்டின் டம்போலி கொரோனா பரவல் காரணமாக இன்று காலை உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 29. சகோதரர் மறைவால் மனமுடைந்து போன நிக்கி டம்போலி மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்று உன் பெயர்
கடவுள் இன்று உன் பெயரை அழைப்பார் என்று நாங்கள் நினைக்கவில்லை. வாழ்ந்த போது எந்த அளவுக்கு உன்னை நேசித்தோமோ, அதே அளவுக்கே நீ இல்லாத போதும் உன்னை நேசிக்கிறோம். உனது இழப்பு எங்கள் இதயங்களை சுக்கு நூறாக உடைத்து உள்ளது. உன் அன்பு எப்போதுமே எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

மீண்டும் இணைவோம்
மேலும், நீ இன்று எங்களுடன் இல்லாத நிலையில், நமது குடும்ப சங்கிலி அறுந்து விட்டது. கடவுள் ஒவ்வொரு நாளும் நம் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் அழைப்பார். மீண்டும் நாம் ஒன்றாக இணைவோம் என மிகவும் உருக்கமாக நடிகை நிக்கி டம்போலி பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் பலரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளது.

ரசிகர்கள் ஆறுதல்
காஞ்சனா 3 மற்றும் இந்தி பிக் பாஸ் சீசன் 14ன் போட்டியாளரான நிக்கி டம்போலியின் சகோதரர் உயிரிழந்த செய்தி அறிந்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல்களை கூறி வருகின்றனர். இந்தியாவில் தொடர்ந்து கொரோனாவுக்கு ஏகப்பட்ட பிரபலங்களும், அவர்களது உறவினர்களும் உயிரிழக்கும் சோகங்கள் தொடர் கதை ஆகி வருகின்றன.

பியா பாஜ்பாய் சகோதரர்
நடிகை பியா பாஜ்பாயின் அண்ணனும் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். இயக்குநர் வெங்கட் பிரபுவின் கோவா படத்தில் பியா பாஜ்பாய் நடித்த நிலையில், அவரது சகோதரர் மறைவுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். பியா பாஜ்பாயின் சகோதரரை தொடர்ந்து நிக்கி டம்போலியின் சகோதரரும் கொரோனா மற்றும் இணை நோய்களால் உயிரிழந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











