தமிழ், தெலுங்கில் உருவாகும் படம்.. ராணா, சாய் பல்லவியுடன் இணைந்த நிவேதா பெத்துராஜ்!
சென்னை: ராணா நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தில் இணைந்திருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.
தமிழில், ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகர் ராணா.
பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம், இந்தியா முழுவதும் பிரபலமான ராணா, இந்தி
படங்களிலும் நடித்து வருகிறார்.

பிரபு சாலமன்
இவர், இப்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகியுள்ள காடன் படத்தில் நடித்துள்ளார். இதை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் 'விரதபர்வம்' என்ற படத்தில் நடித்து வருகிறார் ராணா. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில், அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

சாய் பல்லவி
அவர் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். வேணு உடுகுலா இயக்கும் இந்தப் படத்தில் நந்திதா தாஸ், பிரியாமணி, நவீன் சந்திரா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். பிரியாமணி நக்சலைட்டாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் காட்டுப் பகுதியில் நடந்து வந்தது.

நிவேதா பெத்துராஜ்
கொரோனாவால் தடைபட்டிருந்த இதன் ஷூட்டிங் கடந்த மாதம் மீண்டும் தொடங்கியது. இந்தப் படத்தில் இப்போது இணைந்திருக்கிறார், நடிகை நிவேதா பெத்துராஜ். அவர் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில், கடைசிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

என்ன கேரக்டர்
அதன் ஷூட்டிங்கில் இணைந்துள்ள நிவேதா பெத்துராஜ், என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பதை படக்குழு தெரிவிக்கவில்லை. தமிழில், ஒருநாள் கூத்து, பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு பிடிச்சவன் உட்பட சில படங்களில் நடித்த நிவேதா, தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

தெலுங்கு ரீமேக்
தெலுங்கில், கடைசியாக அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரம்லோ படத்தில் நடித்திருந்தார். அடுத்து தமிழில் ஹிட்டான அருண் விஜய்யின் தடம் தெலுங்கில் ரெட் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் நடித்துள்ள நிவேதா, இன்னும் சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











