தளபதி 67 வில்லன் ரேஸில் இருந்து விலகும் பிருத்விராஜ்… சீனில் வந்த பிரேமம் ஹீரோ..?
சென்னை: விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67' படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.
தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் நடிக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 67 அப்டேட்
விஜய் தற்போது 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். வம்ஷி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் சிங்கிள் நவம்பர் 5ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரிசு படத்தை முடித்துவிட்டு உடனடியாக தளபதி 67-ல் நடிக்கவுள்ளார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படம் குறித்து அடுத்தடுத்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனாலும் அபிஸியல் அப்டேட் எல்லாமே டிசம்பரில் தான் வரும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் கூறியிருந்தார்.

வில்லன் ரேஸில் 6 பேர்
'தளபதி 67'ல் விஜய்க்கு வில்லனாக 6 பேர் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதன்படி முதற்கட்டமாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் பிருத்விராஜ், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்டன. இதில், மன்சூர் அலிகான் நடிப்பதை அவரே டிவிட்டரில் அறிவித்திருந்தார். சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின், பிருத்விராஜ் நடிப்பது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், தளபதி 67ல் தற்போது பிருத்விராஜ் நடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பிரேமம் ஹீரோவுக்கு சான்ஸ்
பிருத்விராஜ் தற்போது மலையாளத்தில் ஹீரோவாக சில படங்களில் கமிட் ஆகியுள்ள நிலையில், சலார் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் இந்தப் படத்தில் பிருத்விராஜ் வில்லனாக நடிப்பதை, படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதனால், கால்ஷீட் பிரச்சினை காரணமாக தளபதி 67 படத்தில் பிருத்விராஜ் நடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்குப் பதிலாக நிவின் பாலியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

சூப்பர் கூட்டணி தான்
நேரம், பிரேமம் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலமானவர் நிவின் பாலி மலையாளத்திலும் அவரின் படங்களுக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இந்நிலையில், தளபதி 67ல் நிவின் பாலியை வில்லனாக களமிறக்கினால், விஜய்க்கு செம்ம டஃப்பாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் அண்ட் டீம் முடிவு செய்துள்ளார்களாம். அதனால், கண்டிப்பாக நிவின் பாலி விஜய்க்கு வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. டிசம்பரில் தளபதி 67 படம் குறித்து அபிஸியல் அப்டேட் வெளியாகும் போது, நிவின் பாலி நடிப்பது பற்றியும் தெரிய வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











