எம்ஜிஆர் மாதிரி எல்லாரும் ஆகிட முடியாது.. விஜய் அரசியல் வருகை குறித்து கே. ராஜன் பேச்சு!
சென்னை: நடிகர் விஜய் புதிதாக அரசியல் கட்சியை உருவாக்கிய நிலையில், தொடர்ந்து பலரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவிலேயே விரைவில் விஜய் கட்சி தொடங்க இருப்பதை அறிவித்திருந்தார். மேலும் சமீபத்தில், செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு விஜய்க்கு தனது வாழ்த்துக்களை ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
சரத்குமார், மாஸ்டர் மகேந்திரன் என பலரும் நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் கே ராஜன், அரசியல் வருகை குறித்து பேசியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கட்சி தொடங்கிய விஜய்: பத்தாண்டுகளுக்கு முன்பு அரசியலில் பெரிய ஆர்வம் இல்லாமல் இருந்து வந்த நடிகர் விஜய் தற்போது புதிதாக தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி இருக்கிறார். அரசியலில் மக்களுக்கான மாற்றம் வரவேண்டும் என்றும் சாதி மத வேறுபாடு காரணமாக பிரிவினை வாதங்கள் இருக்கக்கூடாது உள்ளிட்ட விஷயங்களை முன்னிறுத்தி தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்.
இன்னும் இரண்டு படங்கள்: வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வரும் விஜய் தொடர்ந்து பாண்டிச்சேரியில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக தளபதி 69 படத்தின் விஜய் நடிக்கப் போவதாக கூறுகின்றனர். அந்த படத்தை இயக்கப் போவது யார் என்கிற கேள்விகளும், கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன் என இயக்குநர்களின் பெயர்களும் அடிபட்டு வருகின்றன. விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
எம்ஜிஆர் மாதிரி வர முடியாது: தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து முதலமைச்சராக மாறியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அவரைப்போல அரசியலில் பெரிதாக சாதிக்க வேண்டும் என பல நடிகர்கள் அரசியல் களத்தில் இதற்கு முன் குதித்து தோல்வியை சந்தித்துள்ளனர். சிவாஜி, விஜயகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களே முதலமைச்சராக ஆக முடியவில்லை. அந்த வரிசையில் தற்போது நடிகர் விஜய் எம்ஜிஆரைப் போலவே சினிமாவில் இருந்து அரசியலுக்கு செல்லும் நிலையும் முதலமைச்சர் நாற்காலியில் அமர்வாரா என்பது சந்தேகம்தான் என தயாரிப்பதற்கு ராஜன் சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழாவில் பேசியுள்ளார்.
அரசியலுக்காக பாடுபட்டவர் எம்ஜிஆர்: முதலில் காங்கிரஸ் கட்சியில் எம்ஜிஆர் இருந்தார். அதன் பின்னர், திமுகவில் இணைந்து தீவிரமாக உழைத்தார். மக்களை தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருந்தவர் எம்ஜிஆர். அதிமுக எனும் கட்சி ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் கடுமையாக உழைத்ததன் பலனாகவே அவருக்கு முதலமைச்சர் நாற்காலி கிடைத்தது. அவர் அளவுக்கு அரசியலில் அதன் பின்னர் எந்த ஒரு நடிகரும் 10% முயற்சியைக் கூட போடவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை என பேசியுள்ளார்.
விஜய்க்கு வாழ்த்து: சினிமாவில் இருந்து அரசியலுக்கு செல்லும் நடிகர் விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்கள். அம்பேத்கரை படிங்க, காமராஜரை படிங்க என சொல்றீங்க நல்ல விஷயம். அதேபோல அண்ணாவை படிங்க, கலைஞரை படிங்க, எம்ஜிஆரை படிங்க அப்பதான் உங்களுக்கு அரசியல் தெளிவு பிறக்கும். நீங்க மக்களுடன் எந்த அளவுக்கு இறங்கி வந்து பழகுறீங்களோ அப்போதான் மக்கள் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள்.
புஸ்ஸி ஆனந்த் உழைத்தால் போதாது: ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சி புரிந்து வருகிறார். உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறார். அவர்களை தாண்டி வளர வேண்டும் என்றால் அதற்காக நீங்கள் தான் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். புஸ்ஸி ஆனந்த் மட்டும் உழைத்தால் போதாது என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











