The Kerala Story: தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய முடியாது.. கலாச்சார அமைச்சர் சாஜி செரியன் உறுதி!
திருவனந்தபுரம்: கேரளாவில் இந்துப் பெண்களை இஸ்லாமியர்கள் திட்டமிட்டே மதமாற்றம் செய்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தீவிரவாதிகளாக மாற்றி வருகின்றனர் என்கிற கருத்தில் உருவாக உள்ள தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றன.
மதச்சார்பற்ற மாநிலமாக திகழ்ந்து வரும் கேரளாவின் அமைதியை சீர்குலைக்கவே இதுபோன்ற படங்களை பாஜகவினரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சேர்ந்து உருவாக்கி வருவதாக குற்றச்சாட்டுக்களை இஸ்லாமிய அமைப்புகள் முன் வைத்துள்ளன.
இந்நிலையில், கேரளாவின் கலாச்சாரத் துறை அமைச்சர் சாஜி செரியன் இந்த படத்துக்கு தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

காஷ்மீர் ஃபைல்ஸை தொடர்ந்து கேரளா ஸ்டோரி: விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் காஷ்மீரில் இஸ்லாமியர்களால் இந்துக்களுக்கு அநீதி நடந்ததாக படம் எடுத்திருந்தனர். காஷ்மீர் பண்டிதர்களை இஸ்லாமியர்கள் கொன்று குவித்ததாக படம் இருந்த நிலையில், அந்த படத்துக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பின.
பாலிவுட்டில் காஷ்மீர் ஃபைல்ஸுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் அந்த படம் வசூல் வேட்டையை நடத்தியது. இந்நிலையில், அதே போன்ற ஒரு படமாக தி கேரளா ஸ்டோரி உருவாகி உள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
தி கேரளா ஸ்டோரி ட்ரெய்லர்: சுதிப்தோ சென் இயக்கத்தில் பாலிவுட் நடிகை அதா ஷர்மா, வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த சித்தி இத்னானி நடிப்பில் உருவாகி உள்ள தி கேரளா ஸ்டோரி படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.
அந்த ட்ரெய்லரில் பர்தா அணிந்தால் பலாத்காரம் செய்ய மாட்டார்கள் என்றும் அல்லா தான் உலகத்திலேயே சிறந்த கடவுள் என்றும் இந்து பெண்களான அதா ஷர்மா மற்றும் சித்தி இத்னானியை அவர்களின் தோழியாக பழகும் இஸ்லாமிய பெண் ஒருவர் பேசிப் பேசியே மதமாற்றம் செய்து இஸ்லாமிய இளைஞர்களை திருமணம் செய்ய வைத்து நாடு கடத்தி தீவிரவாதிகளாக மாற்ற முயற்சிக்கின்றனர் என்கிற கதையை படமாக்கி உள்ளனர்.

தடை விதிக்க கிளம்பிய போராட்டங்கள்: கேரளாவின் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த தலைவர்கள் பலரும் இந்த படத்தை தடை விதிக்க வேண்டும் என்றும் கேரளாவில் இதுபோன்ற நிகழ்வுகளே நடைபெறவில்லை. இந்து மற்றும் இஸ்லாம் மதத்தினர் நட்புடன் இருப்பது பிடிக்காமல் இப்படி படம் எடுத்து பிரிவினை உண்டாக்குகின்றனர் என முறையிட்டுள்ளனர்.
இந்த படம் வெளியானால் ஏகப்பட்ட பாதிப்புகளும், தேவையில்லாத சண்டைகளும் வெடிக்கும் என்றும் கூறியுள்ளனர்.
தடை செய்ய முடியாது எனக்கூறிய அமைச்சர்: இந்நிலையில், அவர்களின் கோரிக்கையை நிராகரித்த கேரளாவின் கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் மத்திய தணிக்கைத் துறையால் சான்று வழங்கப்பட்ட ஒரு படத்தை தடை செய்வது இயலாத காரியம் என்றும் அதையும் மீறி தடை செய்தால் வலதுசாரி சிந்தனைகளுக்கு எதிரான படங்களையும் தடை செய்ய அவர்கள் முறையிடுவார்கள் என்றும் கருத்து சுதந்திரத்திற்கு தடையாக இருக்க முடியாது என்றும் கூறி இஸ்லாமிய தலைவர்களின் கோரிக்கையை அமைச்சர் நிராகரித்துள்ளார். வரும் மே 5ம் தேதி தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக இந்த படம் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications