"பத்மாவத் படத்தை தடை செய்ய முடியாது" - மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்!
Recommended Video

டெல்லி : சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உருவாகியிருக்கும் படம் 'பத்மாவத்'.
பல எதிர்ப்புகளைச் சந்தித்து வரும் பத்மாவத் திரைப்படத்தை திரையிட அனுமதிக்கப்பட்ட உத்தரவில் திருத்தம் செய்யும்படி ராஜஸ்தான், மத்திய பிரதேச அரசுகள் மேல்முறையீடு செய்தன.
பத்மாவத் படத்தை மறு ஆய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்.

பத்மாவத்
'பத்மாவதி' திரைப்படத்தில், வரலாற்று நிகழ்வுகளையும், பத்மாவதி பற்றியும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த ராஜபுத்திர சமூகத்தினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

போராட்டம்
பல மாநிலங்களில் வன்முறை பரவியது. மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இந்தப் படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் படத்தின் பெயரை, 'பத்மாவத்' என மாற்றி, சில காட்சிகளை நீக்கி, படத்தை வெளியிட, அனுமதி வழங்கப்பட்டது.

தடை நீக்கம்
'பத்மாவத்' படத்துக்கு சில மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, படத்தின் தயாரிப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், படத்தை திரையிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

அனுமதியில் மாற்றம் செய்யக் கோரிக்கை
இதை எதிர்த்து, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசுகள், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. அந்த மனுவில், பத்மாவத் திரைப்படத்தை திரையிட அனுமதிக்கப்பட்ட உத்தரவில் திருத்தம் செய்யும்படி கோரப்பட்டது.

வழக்கு தள்ளுபடி
இந்த மனுவை இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. படத்தை மறு ஆய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதனால் பத்மாவத் படம் எந்தத் தடையுமின்றி இந்தியா முழுக்க ரிலீஸாகிறது.

தொடரும் எதிர்ப்புக் குரல்
அதேசமயம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் இப்படத்தை திரையிட தொடர்ந்து எதிர்ப்பு குரல் வந்து கொண்டு இருக்கிறது. சில இடங்களில் தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதனால் பத்மாவத் படம் ரிலீஸாகும் தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











