கோச்சடையானில் என்னைப் புறக்கணிக்கவில்லை! - கேஎஸ் ரவிக்குமார்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. கோச்சடையானில் என்னைப் புறக்கணிக்கவும் இல்லை, என்று இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ள கோச்சடையான் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்குநர் மேற்பார்வைக்குப் பொறுப்பேற்று, அதை முடித்தும் கொடுத்தவர் கே எஸ் ரவிக்குமார்.

ரவிக்குமார் பேட்டி
இந்த நிலையில் படத்தின் விளம்பரங்களில் தன்னைப் புறக்கணிப்பதாக இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் குற்றம்சாட்டியதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டது. மேலும் கேஎஸ் ரவிக்குமாரே இதைக் கூறியதாக பேட்டியும் வெளியிட்டது.
இந்த நிலையில், சங்கராபுரம் படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்ற இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

புறக்கணிப்பா?
அவர் கூறுகையில், "கோச்சடையான்' படத்தில் என்னை புறக்கணிப்பதாகவும், விளம்பரங்களில் என்னுடைய பெயரை சிறிய எழுத்தில் போடுவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த செய்தியில் உண்மையில்லை.

ரஜினியுடன் பேசிக் கொண்டிருந்தேன்
‘கோச்சடையான்' படத்தில் என்னை புறக்கணிப்பதாக வந்த செய்தியை கேள்விப்பட்டு எனக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் என்னிடம் போன் போட்டு விசாரித்தார். நான் அப்போது ரஜினி அவர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். உடனே, நான் நண்பரிடம் இந்த செய்தி குறித்து நான் பதில் சொன்னால் நன்றாக இருக்காது கூறி, ரஜினியிடம் என்னுடைய போனை கொடுத்துவிட்டேன். ரஜினியின் குரலைக் கேட்டவுடன் என் நண்பர் என்னசெய்வதென்று தெரியாமல், மழுப்பி பேசிவிட்டு போனை கட் செய்துவிட்டார்.

தவறான செய்தி
‘கோச்சடையான்' படத்தில் என்னைப் புறக்கணிப்பதாக வெளிவரும் செய்திகள் அனைத்தும் தவறானவையே. ஒரு படத்தில் வேலை செய்ததற்கு எவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டுமோ அந்த மரியாதையெல்லாம் எனக்கு கொடுத்தார்கள். தற்போது இப்படத்தின் டப்பிங் எல்லாம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது," என்றார்.


Click it and Unblock the Notifications











