அடக்கடவுளே.. இந்தியன் 2வுக்கு ஏற்பட்டதை போலவே.. பேரிழப்பை சந்தித்த சர்தார் 2 படக்குழு.. என்ன ஆச்சு?
சென்னை: இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் வெளியான சர்தார் திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு தீபாவளிக்கு தியேட்டர்களில் வெளியானது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2ம் பாகம் உருவாகி வரும் நிலையில், பிரசாத் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், அங்கே நடைபெற்று வந்த ஸ்டன்ட் காட்சியில் ஸ்டன்ட் மேன் ஏழுமலை என்பவர் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தது தமிழ் சினிமாவை மீண்டும் மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆக்ஷன் படங்கள் எடுக்கும் போது உரிய பாதுகாப்பு அம்சங்களை சண்டை பயிற்சி இயக்குநர்கள் முடிந்த வரை கடைபிடிக்க வேண்டியது அவசியம். ஆனால், சிலர் மெத்தனமாக செயல்படும் நிலையில், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெற்று விடுகின்றன. இந்தியன் 2 படத்துக்கும் இதே போல ஒரு சம்பவம் நிகழ்ந்து தான் பல ஆண்டுகள் அந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
3 உயிர்களை காவு வாங்கிய விபத்து: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், ஜெகன், சமுத்திரகனி, நெடுமுடி வேணு, விவேக், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ம் தேதி ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது ராட்சத கிரேன் அறுந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குநர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கமலுக்கு சம்மன்: அதுதொடர்பாக மார்ச் மாதம் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பபட்டு விளக்கம் கேட்கப்பட்டது. வேப்பேரியில் உள்ள காவல்துறை அலுவலகத்திற்கு சென்று கமல்ஹாசன் விளக்கம் அளித்தார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க லைகாவையும் நிர்பந்தம் செய்தார். அதன் பின்னர் வெடித்த சர்ச்சை தான் இந்தியன் 2 படம் அப்படியே படப்பிடிப்பு நடத்த முடியாமல் நிறுத்தப்பட காரணம் என்றும் கொரோனா காலம் வந்த நிலையில், படப்பிடிப்பு தொடர முடியாத நிலை ஏற்பட்டது என்றும் கூறுகின்றனர்.
கவலையில் கார்த்தி: மெய்யழகன், வா வாத்தியார் என 2 படங்களில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. மெய்யழகன் படத்தை 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கியுள்ளார். வா வாத்தியார் படத்தை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். அந்த படத்தில் கார்த்தி ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். அடுத்ததாக சர்தார் 2 படத்தில் நடித்து வரும் கார்த்திக்கு இந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்தார் 2 ஷூட்டிங்கிலும் அதே கதி: பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பத்திலேயே இதுபோன்ற உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்திருப்பது, சென்னையில் படப்பிடிப்பு நடத்தும் போது மிகவும் மெத்தனப் போக்கில் படக்குழுவினர் செயல்படுகின்றனரா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது. கங்குவா ஷூட்டிங்கின் போதும் கேமரா விழுந்து சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஷோல்டரில் விழாமல் தலையில் விழுந்திருந்தால் பெரிய பிரச்சனையாகி இருக்கும் என்கின்றனர். எந்தவொரு பாதுகாப்பும் இன்றி 20 அடி உயரத்தில் ஏழுமலையை நிற்க வைத்தது ஏன் என்றும் அவர் கீழே விழுந்து உயிரிழந்த நிலையில், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஸ்டன்ட் கலைஞர்களின் உயிர்களுக்கு உரிய பாதுகாப்புடன் படப்பிடிப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் சினிமா கலைஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications