ஜன நாயகன் லீக் ஆனதற்கும் CBFCக்கும் சம்மந்தமே இல்லை.. யாரை கை நீட்டி இருக்காங்கனு பாருங்க!
டெல்லி: விஜய் நடித்து ஹெச். வினோத் இயக்கி ரிலீஸ்க்கு தயாராக இருந்த படம் ஜன நாயகன். கே.வி. என் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் மமிதா பைஜு, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படம் சில தினங்களுக்கு முன்னர் முழுப் படமும் ஹெச்.டி தரத்தில் இணையத்தில் லீக் ஆனது. இது படக்குழுவினர், திரையுலகைச் சேர்ந்தவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இப்படி இருக்கும்போது சிலர் படக்குழு தரப்பில் இருந்து தான் படத்தை அரசியல் நோக்கத்துடன் லீக் செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் விஜய் தரப்பில் இருந்து திமுக மற்றும் பாஜகவின் கூட்டுச் சதி என்று கூறப்படுகிறது. மேலும் மத்திய திரைப்பட சான்றிதழ் மையத்தில் இருந்து தான் லீக் செய்யப்பட்டுள்ளது என்றும் சில விஜய் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருவதைப் பார்க்க முடிகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக மத்திய திரைப்பட சான்றிதழ் மையம் தெரிவித்துள்ள விளக்கம் பலரது கேள்விகளுக்கு பதிலாக மாறி உள்ளது. அதாவது, " மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திலிருந்து (CBFC) தமிழ்த் திரைப்படமான "ஜன நாயகன்" கசிந்ததாகக் கூறும் செய்திகள் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை.
தயாரிப்பாளர்: சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்துத் திரையரங்குத், திரைப்படங்களுக்கும் பாதுகாப்பான KDM (Key Delivery Message) முறையைப் பின்பற்றுவதாக CBFC தெளிவுபடுத்தியுள்ளது. படத்தைப் பார்ப்பதற்கான பிரிண்ட் KDM என்ற கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது, மேலும் KDM ஆனது படத்தின் தயாரிப்பாளர்/திரைப்படத் தயாரிப்பாளரிடமே முழுமையாக இருக்கும். அது முழுக்க முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். சரியான KDM இல்லாமல், திரைப்படத்தை அணுகவோ பார்க்கவோ முடியாது.

ஒப்படைப்பு: "ஜன நாயகன்" திரைப்படத்தின் டிஜிட்டல் சினிமா தொகுப்பு (DCP), மார்ச் 17 அன்று மும்பையில் உரிய ஒப்புதலுடன் விண்ணப்பதாரரிடம் ஒப்படைக்கப்பட்டது, அது அன்று முதல் அவர்களிடமே உள்ளது" என்று தெரிவித்துள்ளனர். CBFC தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த விளக்கத்தின் மூலம், ஜன நாயகன் படத்தின் லீக் விவகாரத்திற்கும் CBFCக்கும் தொடர்பு இல்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.
தொடர்பு இல்லை: அதாவது லீக் ஆகி இருப்பது முழு ஹெச்.டி பிரிண்ட். CBFC தரப்பில் படம் பார்த்தாலும் அவர்களும் பெரிய திரையில் தான் பார்ப்பார்கள். மேலும் அதன் பாஸ்வேர்டான KDM தயாரிப்பாளரிடம் தான் இருக்கும். இப்படி இருக்கையில் இந்த படத்தின் லீக் விவகாரத்திற்கும் CBFCக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது.


Click it and Unblock the Notifications











