சூப்பர் ஸ்டார் பட்டமா... அய்யா சாமி ஆளைவிடுங்க... அந்த ஆட்டத்துக்கு நான் வரல! - சிவகார்த்திகேயன்
ஒரு மேடை கிடைத்தால் போதும்... அந்த மேடையில் நாயகனை வகை தொகையின்றி புகழ்ந்து தள்ளி, கிறங்க வைத்து காலி பண்ணுவதில் சினிமாக்காரர்கள் தேர்ந்தவர்கள்.
ஆனால் இவர்களிடம் சிக்காமல் கவனமாக இருக்கும் பிரபலங்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன்.
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள படம் 'அதாகப்பட்டது மகாஜனங்களே'. இதில் கதாநாயகியாக ரேஷ்மா ரத்தோர் நடித்துள்ளார். கருணாகரன், பாண்டியராஜன், மனோபாலா, ஆடுகளம் நரேன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஆர்.இன்ப சேகர் டைரக்டு செய்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். சிவ ரமேஷ்குமார் தயாரித்துள்ளார்.

ட்ரைலர் ரிலீஸ்
இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர்கள் எஸ்.வி.சேகர், சிவகார்த்திகேயன், பொன்வண்ணன், டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், பேரரசு, பிரபு சாலமன், விஜய், சுராஜ், அறிவழகன், துரை செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.

இளைய சூப்பர் ஸ்டார்
தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசும்போது, "சிவகார்த்திகேயன் படங்களுக்கு குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு உள்ளது. அவர் தமிழ் பட உலகின் இளைய சூப்பர் ஸ்டார்," என்றார். பிடி செல்வகுமார் விஜய்யின் மேனேஜராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் வி சேகர்
நடிகர் எஸ்.வி.சேகர் பேசும்போது, "சிவகார்த்திகேயனை இளைய சூப்பர் ஸ்டார் என்று கூறுவதால் ரஜினிகாந்த் கோபித்துக்கொள்ள மாட்டார். சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் சிவகார்த்திகேயன் வளர்ந்து இருக்கிறார்," என்றார். தொடர்ந்து பேசிய பலரும் சிவகார்த்திகேயனை இளைய சூப்பர் ஸ்டார் என்றே அழைத்தனர்.

வேணாம் சாமி
இதையெல்லாம் கேட்டு, மேடையில் நெளிந்தபடி உட்கார்ந்திருந்த சிவகார்த்திகேயன் மைக் பிடித்தார்.
"எனக்கு எந்த பட்டமும் வேண்டாம். பட்டங்களில் எனக்கு விருப்பம் இல்லை. பட்டங்கள் பெயரை வாயால் சொல்வதற்கு கூட நான் தயாராக இல்லை. தயவு செய்து எனக்கு பட்டப் பெயர் சூட்டி அழைக்க வேண்டாம். கடைசிவரை மக்களுக்கு பிடித்த மாதிரி நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசையாக இருக்கிறது.

என் வேலையை மட்டும் செய்கிறேன்
எனது நடிப்பு பற்றி விமர்சனங்கள் வரும்போது திருத்திக்கொள்வேன். எனது வாழ்க்கை எப்படி இருந்தது. இந்த இடத்துக்கு எப்படி வந்தேன் என்பதையெல்லாம் மனதில் வைத்து இருக்கிறேன். எனக்கு என்று ஒரு பாதை வைத்துக்கொண்டு அதில் எனக்கு கொடுத்த வேலையை செய்கிறேன். அது போதும்.

டான்ஸ் வரல
சினிமாவில் பொதுவாக 30, 40 வயதுவரைதான் வலுவாக காலூன்றி நிற்க முடியும். ஆனால் தம்பி ராமையா அந்த வயதையும் தாண்டி நிறைய படங்களில் நடித்து வருவதற்கு அவரது விடா முயற்சியும், உழைப்பும்தான் காரணம். சினிமா துறையில் சுய ஒழுக்கத்தோடு இருந்தால் முன்னேறலாம். ‘மனம் கொத்திப் பறவை' படத்தில் எனக்கு டான்ஸே வரவில்லை. ‘பாடல் நன்றாகத்தானே இருக்கிறது நீ ஏன் நடனம் என்ற பெயரில் உடற்பயிற்சி செய்கிறாய்' என்று கேலி செய்தனர். இப்போது ஓரளவு நடனம் ஆடக் கற்று இருக்கிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











