twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது - தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத்

    By Staff
    |

    Ajith
    சென்னை: எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் தவறாக எதுவும் பேசவில்லை. தேவைப்பட்டால் நடிப்புத் தொழிலைவிட்டே விலகுகிறேன்... மீண்டும் ரேஸுக்குப் போகிறேன்," என்று அதிரடியாக கூறி விட்டார் நடிகர் அஜீத் குமார்.

    முதல்வர் கருணாநிதியை அஜீத் சந்திப்பதற்கு முன்பு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு ஒரு சிறப்புப் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது..

    "முதல்வருக்கு நடந்த விழா மேடையில் நான் பேசியது எழுதித் தயாரிக்கப்பட்ட பேச்சல்ல. அந்த நேரத்தில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசினேன். என் இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த பேச்சு அது. அதில் எந்தத் தவறும் இல்லை. உண்மைகளைப் பேசினேன்... என்ன நடந்ததோ, அதைத்தான் சொன்னேன்.

    நடிகர்களை, விளையாட்டு வீரர்களை உருவாக்கியது சமூகம்தானே... அவர்களுக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா?

    நடிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் மட்டும்தான் சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும் என்பதே விவாதத்துக்குரிய ஒன்று. ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. ஆனால் அரசியல் என்று வரும்போது, நடிகர்கள் விசேஷ கவனம் பெறுகிறார்கள். பல சமையல்காரர்கள் சேர்ந்து விருந்தைக் கெடுத்த மாதிரி ஆகிவிடுகிறது. என்னைப் பொறுத்தவரை, அரசியல் விவகாரத்தை அரசியல்வாதிகளும் அதற்கான கட்சிகளும் பார்த்துக் கொள்ளட்டும். எனக்கு இந்த அரசியல் முறை மீது நம்பிக்கை உண்டு. நடிகர்களுடன் அரசியல் தலைவர்கள் சுமுகமாக இருந்தாலே போதும்.

    ஏன் இங்கு ஒரு நடிகரால் சுதந்திரமாக கருத்து சொல்ல முடிவதில்லை?

    இங்கே எல்லா பிரச்சினைகளைப் பற்றி பேசவும், தீர்க்கவும் நடிகர்கள் வேண்டும் என்கிறது ஒரு கூட்டம். அதேநேரம் நடிகனுக்கு சமூகப் பிரச்சினைகளில் என்ன வேலை... அவன் வேலையை மட்டும் பார்க்கட்டும் என்று கேட்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது. இதற்கு இடையில் மாட்டிக் கொண்டு விழிப்பது நாங்கள்தான்.

    யாராவது ஒரு நடிகர் பெரிய முயற்சி செய்து அரசியலுக்குள் நுழைந்தால் உடனே அவரைத் தடுக்கப் பார்க்கிறார்கள், தாறுமாறாகத் திட்டுகிறார்கள். ஒரு நடிகன் வாழும் மாநிலத்தின் அரசியலில் பங்கெடுக்கக் கூடாது என்று சொல்பவர்களுக்கு, அவனை சமூகப் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டும் என்று சொல்லவும் எந்த உரிமையும் இல்லை. இதில் அவனது பிறப்பு, இனம் போன்றவை குறித்த கேள்வி எதற்கு வருகிறது? ஒரு நடிகர் பல லட்சம் மக்கள் மனதில் இடம் பிடித்த பிறகும், அந்த மக்கள் அவனது பேச்சைக் கேட்டு பின்னால் வரத் தயாராக உள்ள நிலையிலும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சிலர் எதிர்ப்பு காட்டுவது என்ன நியாயம்?

    பிறப்பு, இனம்தான் பிரச்சினையாக்கப்படுகிறதா இங்கே?

    அது இங்கு மட்டுமல்ல... எல்லா இடத்திலும்தான். ஒரு சினிமா ரசிகன் டிக்கெட் வாங்கி படம் பார்க்கச் செல்லும்போது அல்லது கிரிக்கெட் பார்க்க செல்லும்போது, தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பார்க்கும் ரசிகன் என்ன ஜாதி, மதம், நிறம், இனம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. அதுதான் கலையின் சிறப்பு. அந்தக் கலைதான் இந்த மொத்த தேசத்தையும் ஒரு கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆனால் திரைக்கு வெளியே அதே கலைக்கு ஜாதி, இன வர்ணம் பூசுகிறார்கள். எந்த நடிகரின் ரசிகர் கூட்டத்தை எடுத்துக் கொண்டாலும், அவர்கள் குறிப்பிட்ட இனம், மொழிக்கு மட்டும் சொந்தக்காரராக இருக்க மாட்டார்கள். விளையாட்டு, சினிமா போன்ற கலையால் மட்டுமே ஒன்றுபட்டிருப்பதைப் பார்க்கலாம்.

    நக்சல் இயக்கத்தவராக, மனித வெடிகுண்டு போன்ற பாத்திரங்களில் நடிப்பீர்களா?

    கடந்த சில நாட்களாக நடப்பதைப் பார்க்கும்போது, எனக்கு மீண்டும் காமிராவுக்கு முன்னால் நிற்கவே பிடிக்கவில்லை. ஒரு நடிகனுக்கு இங்கே படைப்புச் சுதந்திரமே இல்லை. ஒரு நடிகன் திரையில் புகைப்பிடிப்பது போன்ற காட்சியில் நடித்தால் அது இளம் தலைமுறையை பாதிக்கும் என்கிறார்கள். ஆனால் அதே நடிகன் அரசியலுக்குள் நுழைந்து இளம் தலைமுறையை தன்வசப்படுத்த முயற்சித்தால், 'நடிகனுக்கு இங்கே என்ன வேலை?' என்கிறார்கள்.

    ஆனால் நீங்கள் 50 வது படம் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளீர்களே...

    உண்மைதான். தயாநிதி அழகிரி தயாரிக்கும் படம் இது. கண்டிப்பாக பண்ணணும்தான். ஆனால், எப்போது எனது பிறப்பும், இனம் குறித்த கேள்விகளும் இங்கே எழுந்துவிட்டதோ, இனி நடிக்கணுமா என்றுதான் தோன்றுகிறது. மீண்டும் எனது பார்முலா 2 கார் பந்தயங்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தரவே நான் விரும்புகிறேன்.

    பார்முலா 2 பிரிவில் எனது நுழைவு அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஐரோப்பாவில் ஏப்ரல் - அக்டோபர் மாதங்களில் மோட்டார் ரேஸ் நடத்தும் 10 நாடுகளில் 8-ல் என்னால் நிச்சயம் பங்கேற்க முடியும்.

    நாட்டின் 10 முன்னணி ரேஸ் வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதில் இந்த மாநிலம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக் இருவரும் இப்போது பார்முலா 1 பந்தயங்களில் பங்கேற்பவர்கள். அர்மான் இப்ராகிம், பர்திவா சுரேஷ்வரன், நான், அஸ்வின் சுந்தர் போன்றவர்கள் வேறு பிரிவுகளில் பங்கேற்கும் தகுதி நிலையை அடைந்தவர்கள். பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளோம்.

    பைக் ரேஸிலும் நிறைய வீரர்கள் உள்ளார்கள் இங்கு. இதற்கு நல்ல ஸ்பான்ஸர்ஷிப்பும் கிடைக்கிறது. எதிர்காலத்தில் வெளிநாடுகளில் உள்ளது போல, ஸ்ட்ரீட் மோட்டார் ஸ்போர்ட் போட்டிகளை நடத்தவும் திட்டமிருக்கிறது..."

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X