கடைசி வரை காத்திருந்தும் புதுசாக ஒன்றுமே சொல்லலையே கமல் ஹாஸன்!
Recommended Video

தமிழக மக்களும், தமிழக அரசியல் கட்சிகளும் கமலஹாசன் தனது பிறந்த நாளையொட்டி முக்கியமான முடிவை அறிவிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். கடந்த பல நாட்களாக ஊடகங்களும் கமல் பற்றிய செய்திகளுக்கே முதலிடம் கொடுத்து வந்தன.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை தி.நகரில் பத்திரிகையாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. நேரம் தவறாமையும், நிர்வாக ஒழுங்கும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அரசியல்வாதிகளுக்கு ட்விட்டரில் போதனை செய்து வந்த கமல் ஹாசன் இரண்டு மணி நேரம் தாமதமாகவே பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்தார்.

தமிழக மக்கள் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ளவும், அப் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் தனது நற்பணி மன்றம் செயலி ஒன்றை தயார் செய்துள்ளனர். அது சம்பந்தமாக பணிகள் முழுமையடையாததால் இப்போதைக்கு இதற்கு மேல் கூற முடியாது. முழுமையாக சொன்னால் வேறு யாராவது காப்பி அடித்து விடுவார்கள் என்று குழப்பத் தொடங்கினார் கமல் ஹாசன்.
அரசியல் கட்சி தொடங்குவது உறுதி அதற்கான ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன. அரசியல் அறிஞர்கள், அனுபவசாலிகளுடன் இணைந்து இந்தப் பணிகள் நடந்து வருகின்றன. கட்சிப் பெயர் இப்போதைக்கு முக்கியம் இல்லை... செயல்பாடுதான் முக்கியம் என்றார் கமல்ஹாசன்.
தமிழகம் முழுவதும் மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சினைகளை அறிந்து கொள்ள இருக்கிறேன். அந்த பிரயாணம் முடியும் தருவாயில் கட்சி பெயர் அறிவிக்கப்படலாம் என பூடகமாக தெரிவித்த கமல் தவறு செய்த மற்றும் பழைய அரசியல்வாதிகளுக்கும் தனது அமைப்பில் இடமில்லை, வாய்ப்பு தரமாட்டேன் என ரஜினி சொன்னதை ரிபீட் அடித்தார்.
தேர்தல் களத்தில் புதியவர்களுக்கே வாய்ப்பு என்பது கமல் கொடுத்த இன்னொரு வாக்குறுதி. வாய்ப்பு கொடுக்கப்படும் புதியவர்கள் தவறு செய்தால் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவார்கள். அவ்வாறு செய்யாததால் தான் நாடு நாசமாகி கொண்டிருக்கிறது என்றார் அழுத்தமாக.
இந்து தீவிரவாதம் பற்றி பேசியதற்காக வெளி மாநிவங்களில் கமல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பற்றிய கேள்விக்கு அதனை சட்டப்படி சந்திப்பேன் என்றார்.
ஆனால் கடைசி வரை எந்த புதிய விஷயத்தையுமே கமல் அறிவிக்கவில்லை. செய்தியாளர்களும் அதுகுறித்து 15க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்டும், கடந்த சில மாதங்களாக அவர் பிக் பாஸிலும் ட்விட்டரிலும் பேசியதையே திரும்பச் சொல்லி கூட்டத்தைக் கலைத்தார்.


Click it and Unblock the Notifications











