யாராலும் விஜய்யை தடுக்க முடியாது… புஷ்பா ஹீரோ அல்லு அர்ஜுன் சைட்ல இருந்து இப்படி ஒரு ஆதரவா?
சென்னை: விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகுமா ஆகாதா என்ற குழப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ள முடிவால், வாரிசு படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்த பிரச்சினையில் விஜய்க்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகில் இருந்து பலரும் குரல் கொடுத்துள்ள நிலையில், இப்போது டோலிவுட்டில் இருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது.

சொன்னப்படி ரிலீஸாகுமா வாரிசு?
பீஸ்ட்டை தொடர்ந்து விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படம், பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், சங்கராந்தி போன்ற பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளது. இதனால் வாரிசு திரைப்படத்துக்கு ஆந்திரா, தெலங்கானாவில் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

விஜய் தீவிர ஆலோசனை
வாரிசு தெலுங்கில் வாரசுடு என்ற டைட்டிலில் வெளியாகவுள்ளது. நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியுள்ளது இதனால் விஜய் அவசர அவசரமாக தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில், மாவட்ட செயலாளர்கள் உட்பட முக்கியமான நிர்வாகிகள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

தெலுங்கு திரையுலகில் விஜய்க்கு ஆதரவு
மேலும், ஏராளமான விஜய் ரசிகர்கள் பனையூர் பகுதியில் குவிந்துள்ளனர். அதேபோல், விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் குவிந்துள்ள ரசிகர்களுக்கு விஜய் பிரியாணி விருந்து கொடுத்து வருகிறார். வாரிசு வெளியீட்டு பிரச்சினை பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த முக்கியமான பிரபலம் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த், விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தெலுங்குத் திரையுலகம் டப்பிங் படங்களின் வெளியீட்டுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது குறித்து கேட்கப்பட்ட போது, "அப்படியொரு விஷயம் சாத்தியமே இல்லை, அது ஒருபோதும் நடக்காது. விஜய்யின் வாரிசு ரிலீஸாவதை யாராலும் தடுக்க முடியாது?" எனக் கூறியுள்ளார்.

புதிய நம்பிக்கையில் விஜய்
வாரிசு ரிலீஸ் பிரச்சினைக்கு எதிராக சீமான், இயக்குநர்கள் லிங்குசாமி, பேரரசு, சுசீந்திரன் உள்ளிட்டோர் குரல் கொடுத்துள்ளனர். மேலும், விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள அவர்கள், வாரிசு எந்த பிரச்சினைகளும் இல்லாமல் வெளியாக வேண்டும், இல்லையென்றால், தமிழ்நாட்டில் தெலுங்குப் படங்களை வெளியிட முடியாமல் நாங்களும் நடவடிக்கை எடுப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், வாரிசு கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என அல்லு அரவிந்த் கூறியதைக் கேட்டு விஜய்யும் அவரது ரசிகர்களும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











