சண்டை கோழிங்க ரெண்டும் சமாதானம் ஆகிடுச்சே.. விருது வென்ற டாப்சியை பாராட்டிய கங்கனா ரனாவத்!
மும்பை: பாலிவுட்டில் டாப்சிக்கும் கங்கனா ரனாவத்துக்கும் இடையே நடைபெற்ற வார்த்தை மோதல்கள் முடிந்து தற்போது ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
தப்பட் படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருதை பெற்ற டாப்சி, நடிகை கங்கனாவிற்கு நன்றி தெரிவித்து இருந்தார்.
அந்த வீடியோவை ரசிகர் ஒருவர் கங்கனாவுக்கு டேக் செய்ய, அதை பார்த்த கங்கனா நடிகை டாப்சியை வாயாற புகழ்ந்துள்ளது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை கிளப்பி இருக்கிறது.

வாய்ப்பை பறிக்கிறார்
பாலிவுட்டில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு வந்து கொண்டிருந்த பட வாய்ப்புகளை தட்டிப் பறித்து வருகிறார் டாப்சி என்கிற குற்றச்சாட்டை நேரடியாகவும், மறைமுகமாகவும் நடிகை கங்கனா ரனாவத் வைத்து வந்தார். டாப்சி மற்றும் கங்கனாவுக்கு இடையே பனிப் போர் ஒன்று நிலவி வந்தது.

சண்டை கோழிகள்
சமூக வலைதளங்களில் இவர் ஒருவருக்கு ஆதரவு தெரிவித்தால், அதற்கு மாறாக அவர் எதிர்ப்பு தெரிவிப்பதும், அவர் ஆதரவு தெரிவிக்கும் நபருக்கு இவர் எதிர்ப்பு தெரிவிப்பதுமாக இருவரும் சண்டை கோழிகளாக திரிந்து வந்த நிலையில், தற்போது பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு இருவரிடையே மிகப்பெரிய மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.

சிறந்த நடிகை
இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான தப்பட் திரைப்படம் நடிகை டாப்சிக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருதை சமீபத்தில் பெற்றுத் தந்தது. பலர் முன்னால் கன்னத்தில் அறையும் கணவனுக்கு எதிராக விவாகரத்து வழக்கு தொடர்ந்து ஆணுக்கு பெண் அடிமையில்லை என்பதை உணர்த்தி மிரட்டி இருந்தார் டாப்சி.

கங்கனாவுக்கு நன்றி
சமீபத்தில் நடைபெற்ற பிலிம்ஃபேர் விருது விழாவில் விருது பெற்ற நடிகை டாப்சி, செய்தியாளர்களிடம் பேசும் போது, உமன் சென்ட்ரிக் படங்களுக்கான புதிய எல்லைகளை உருவாக்கிய நடிகை கங்கனா ரனாவத்துக்கு இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ரசிகர் செய்த வேலை
அந்த வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர், நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் பக்கத்துக்கு அதனை டேக் செய்தார். அந்த வீடியோவை பார்த்த நடிகை கங்கனா ரனாவத், உடனடியாக நடிகை டாப்சியை புகழ்ந்து பதிவிட்டுள்ள ட்வீட் தான் தற்போது பாலிவுட்டில் டிரெண்டாகி வருகிறது.

நீங்கள் தான் தகுதியானவர்
ரொம்ப நன்றி டாப்சி, விமல் எலாய்ச்சி பிலிம்ஃபேர் விருதுக்கு நீங்கள் மிகவும் தகுதியானவர். உங்களை விட வேறு யாரும் அந்த விருதுக்கு தகுதியானவர் இல்லை என்றும் மனதார பாராட்டியுள்ளார். சிறந்த நடிகைக்கான பிரிவில் பங்கா படத்தில் நடித்த கங்கனா ரனாவத்தும், சப்பாக் படத்தில் நடித்த தீபிகா படுகோனேவும், சகுந்தலா தேவி படத்தில் நடித்த வித்யா பாலனும் போட்டி போட்டது குறிப்பிடத்தக்கது.

கங்கனாவுக்கு தேசிய விருது
பாலிவுட்டில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பால் வெளுத்து வாங்கி வருகிறார் நடிகை கங்கனா ரனாவத். பங்கா படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருது கிடைக்கவில்லை என்றாலும், பங்கா மற்றும் மணிகர்ணிகா படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கங்கனா ரனாவத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











