ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா.. இதெல்லாம் கொண்டு போனா வெளியில் தான் நிக்கணும்.. கடும் கெடுபிடி!
சென்னை: விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் அடுத்த மாதம் 9ந் தேதி வெளியாக உள்ளது. கோலிவுட் வட்டாரம் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக 'ஜனநாயகன்' திரைப்படம் உள்ள நிலையில், மலேஷியாவில் நாளை கோலாகலமாக இசைவெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு கடுமையான கெடுபிடிகள் விதித்துள்ளது.
தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி நடிகர் விஜய், சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறார். அரசியலில் முழுவீச்சில் ஈடுபடுவதற்கு ஏதுவாக, சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தார். தளபதியின் கடைசி படமாக ஜனநாயகன் படம் உருவாகி உள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜனநாயகன்: நாளை 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புகீத் ஜலில் மைதானத்தில் நடைபெற உள்ளது. விழாவில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதால், இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு மலேசியா அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மலேசியா காவல்துறையினர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படக்குழுவினருக்கு பல கட்டுப்பாடுகளை போட்டுள்ளது. அரசியல் தொடர்பாக பேசக்கூடாது என விஜய்க்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அனுமதி இல்லை: கட்சி கொடி, துண்டு, உடை, பேட்ஜ், டீ ஷர்ட் உள்ளிட்ட அரசியல் கட்சி சம்பந்தமான எந்த பொருட்களுடனும் இசை வெளியீட்டு விழாவிற்கு வரக்கூடாது. அப்படி அணிந்து வந்தால் அனுமதி இல்லையென நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இசைவெளியீட்டுவிழா, பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவே இருக்க வேண்டும். இதில், அரசியல் சார்ந்த விஷயங்கள் இருக்கக்கூடாது என காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனை மீறி இசைவெளியீட்டு விழாவிற்கு வந்தால் அவர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கடுமையாக நிபந்தனைகளை விதித்துள்ளனர். ஜனநாயகன் இசைவெளியீட்டு விழாவால் மலேஷியா தற்போது திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. முன்னதாக விமானத்தின் மூலம் மலேசியா சென்ற புஸ்ஸி ஆனந்திற்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











