விஸ்வரூபம் 2 பிரச்சினையே தீரல.. அதுக்குள்ள ‘விஸ்வரூபம் 3’ பற்றி கமல் என்ன சொல்கிறார் தெரியுமா?
Recommended Video

சென்னை: விஸ்வரூபம் 3-ம் பாகத்தை எடுப்பது பற்றி சிந்திக்கவில்லை என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அரசியல் வேலைகள் ஒருபுறம் இருக்க, சினிமா, பிக்பாஸ் சீசன் 2 என கலைத்துறையிலும் தன் பங்களிப்பை அவர் ஆற்றி வருகிறார்.
இந்நிலையில் கமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள விஸ்வரூபம் - 2 படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. தற்போது கமல், அப்படத்தின் புரோமோசன் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கு செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பாலசந்தரின் யுக்தி:
நடிகர்களை தேர்வு செய்வது, அவர்களை உருவாக்குவது என்று இரண்டு விதத்தை சினிமாவில் பார்க்கலாம். பாலசந்தர் நடிகர்களை உருவாக்கினார். மண் பொம்மைகளைகூட தேவதைகளாக மாற்றினார். அவருடையை தொழில் யுக்தி எனக்கு பிடிக்கும். சினிமாவை நேசிப்பவர்களால் மட்டும்தான் அவர் மாதிரி இருக்க முடியும்.

பயிற்சி தேவை:
கேரவனில் தங்குவது, மேக்கப் போடுவதெல்லாம் நடிப்பு இல்லை. நடிப்பு பயிற்சி எடுக்க வேண்டும். டைரக்டர் எதிர்பார்க்கும் நடிப்பை கொடுக்க வேண்டும்.

விஸ்வரூபம் 2:
இந்திய சினிமா உலக தரத்துக்கு உயர்ந்து இருக்கிறது. திறமையான கலைஞர்கள் இங்கு இருக்கிறார்கள். விஸ்வரூபம்-2 படமும் உலக தரத்திலான படமாக இருக்கும்.

நம்பிக்கை:
முதல் பாகத்தின் கதை வெளிநாட்டில் நடந்தது. இரண்டாம் பாகம் இந்தியாவில் நடக்கிற கதை. சில பிரச்சினைகளால் இந்த படம் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது. முதல் பாகம் படத்துக்கு எதிர்ப்புகள் வந்தன. இரண்டாம் பாகத்துக்கு சர்ச்சைகள் ஏற்படாது என்று நம்புகிறேன். இந்த தலைமுறையினருக்கும் ஏற்ற படமாக இது இருக்கும்.

பெருமை:
சினிமாவுக்கான ஆயுள் 3 வாரங்கள்தான். பிறகு அந்த படத்தை மறந்து விடுவார்கள். ஆனால் விஸ்வரூபம் முதல் பாகத்தை ரசிகர்கள் இப்போதும் ஞாபகம் வைத்து இருப்பது பெருமையாக இருக்கிறது. விஸ்வரூபம் 3-ம் பாகத்தை எடுப்பது பற்றி சிந்திக்கவில்லை.

இது தான் காரணம்:
திரைப்படங்களுக்கு தணிக்கை குழு தேவை இல்லை என்பது எனது கருத்து. இந்த கோரிக்கையை ஏற்கனவே வற்புறுத்தியும் நிறைவேறவில்லை. எனக்கு பணம், புகழ் எல்லாவற்றையும் மக்கள் கொடுத்தனர். அவர்களுக்காக உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன்'' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











