பரப்புரைக்கு வராத விஜய்.. பொம்மையை வைத்து வித்தை காண்பித்த வேட்பாளர்.. ஆர்.கே.நகர் ஃபார்முலாவில் தவெக
திருச்சி: தமிழக வெற்றிக் கழகம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே இருக்கும் நிலையில்; அக்கட்சியின் பரப்புரை முகாமில் எந்த உற்சாகமும் இல்லை. இன்று சென்னையில் நடக்கவிருந்த பரப்புரை கூட்டத்தையும் ரத்து செய்திருக்கிறது. தங்கள் தலைவர் இப்படி இருக்கிறாரே என நொந்திருக்கிறார்கள் கட்சியினர். இது ஒருபக்கம் இருக்க திருவெறும்பூர் தவெக வேட்பாளர் விஜய் பொம்மையை வைத்து பரப்புரை மேற்கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவிருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்தபடியே அனைத்து தொகுதிகளிலும் தனித்தே களமிறங்குகிறது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். திமுகவின் வெயிட்டான தலைகளை எதிர்த்து விஜய் களம் காண்பார் என அவரது கட்சியினர் கனவு கண்டுகொண்டிருக்க; அவரோ விவரமாக திருச்சி கிழக்கிலும், பெரம்பூரிலும் களமிறங்குவதற்கு வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். ஒரு தொகுதி மிஸ் ஆனாலும் இன்னொரு தொகுதி சக்சஸ் ஆகும் என்பது அவர் கணக்கு.

பரப்புரை விவகாரம்: குறைந்தபட்சம் ஐந்து எம்.எல்.ஏக்களையாவது சட்டப்பேரவைக்கு அனுப்பிட வேண்டும் என்று தவெகவினர் துடிக்கிறார்கள். ஆனால் தவெக முகாமில் பரப்புரை விஷயம் அவ்வளவு மகிழ்ச்சி கொடுப்பதாக இல்லை. வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பெரம்பூரிலிருந்து தனது பரப்புரையை தொடங்கிய விஜய் அங்கே சில நிமிடங்கள் பேசினார். தொடர்ந்து கொளத்தூரில் அதைவிடவும் குறைவான நேரத்திலேயே தனது பேச்சை முடித்துக்கொண்டார். அதனையடுத்து திருச்சி கிழக்கு தொகுதியிலும் பரப்புரையை செய்தார்.
ஒரே ஸ்க்ரிப்ட்: ஏற்கனவே கொஞ்ச நேரம்தான் பரப்புரையை அவர் செய்கிறர் என்கிற விமர்சனங்களும், கிண்டல்களும் எழுந்துவிட்டன. அதைவிட கொடுமையாக அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான ஸ்பீச்சைத்தான் கொடுக்கிறார். 'வசதியான வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டு வந்திருக்கிறேன். அனைத்து வலிகளையும் தாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன். தயவு செய்து ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள்' என கேட்கிறார். அவரது ஒரே மாதிரியான பேச்சும் தொண்டர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது. நாம் என்ன செய்வோம் என்பதை சொல்லி வாக்கு கேட்டால் ரீச் இன்னும் நன்றாக இருக்குமே என்பது அவர்களது எண்ணம்.
பரப்புரைக்கு லீவு: இப்படி அவரது பரப்புரை பாணியில் சுணக்கம் இருக்கும் நிலையில்; கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆன கதையாக, பரப்புரைக்கே விடுமுறை எடுக்க ஆரம்பித்திருக்கிறார். இன்று சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடிகர் விஜய் பேசுவதாக இருந்தது. ஆனால் அந்தக் கட்சியே தாமாக முன் வந்து பரப்புரையை ரத்து செய்திருக்கிறது. ஒரு மணி நேரம் பரப்புரைக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. ஏனோ தெரியவில்லை பரப்புரையை ரத்து செய்திருக்கிறார்கள். ஏற்கனவே தி.நகர், வில்லிவாக்கம் தொகுதிகளிலும் இதே நிலைமைதான் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் பொம்மையை வைத்து பரப்புரை: இந்நிலையில் இன்னும் சென்னை பகுதியிலேயே பரப்புரையை முடிக்காத விஜய்; கண்டிப்பாக திருவெறும்பூர் தொகுதிக்கு வருவார் என்று எதிர்பார்ப்பதெல்லாம் கனவுதான் முடிவெடுத்தார் போல அந்தத் தொகுதியின் தவெக வேட்பாளர். அதாவது, விஜய்யின் பொம்மையை வைத்து அதன் அருகில் கை கூப்பி நின்று வாக்குகளை சேகரிக்க தொடங்கிவிட்டார் விஜயகுமார். இதை பார்த்த பலரும் அவரது பரிதாப நிலைமையை நினைத்து நொந்துகொள்கிறார்கள்.
இப்படி ஒரு தலைவர் இருந்தால் எப்படி தேர்தலில் வெல்ல முடியும் என சகட்டுமேனிக்கு விஜய்யை விளாசிவருகிறார்கள். முன்னதாக ஜெயலலிதா இறந்த சமயத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்தது. அப்போது இப்போதைய அமமுக தலைவர் டிடிவி தினகரன் ஜெயலலிதாவின் பொம்மையை வைத்து வாக்கு கேட்டது நினைவுகூரத்தக்கது. தற்போது தவெகவும் அதே ஃபார்முலாவை பின்பற்றியிருக்கிறது.


Click it and Unblock the Notifications















