சினிமா மாறுது... புதுப் படங்கள் இனி தியேட்டரை மட்டும் இனி நம்பி இருக்காது! Exclusive
விஸ்வரூபம் படம் வெளியாகும்போது கமல் ஹாஸன் வீசிய ஒரு அஸ்திரம் தந்த அதிர்ச்சி இன்று வரை தியேட்டர்காரர்களுக்கு மறந்திருக்காது.
'என் படத்தை முதலில் டிடிஎச்சில் வெளியிடுவேன். அடுத்த நாள் தியேட்டருக்கு தருவேன். சினிமா இனி தியேட்டர்களை மட்டும் நம்பி இயங்காது'... 5 ஆண்டுகளுக்கு முன்பு கமல் சொன்னது இது.

அன்றைக்கு வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்த தியேட்டர்காரர்கள் படத்தை தியேட்டரில்தான் வெளியிட வேண்டும் என அடம் பிடித்தனர். அதன் பிறகு ஏகப்பட்ட அரசியலுக்குப் பிறகு தியேட்டரில் மட்டுமே அந்தப் படம் வெளியானது.
ஆனால் இனி அப்படி எல்லாம் தியேட்டர்காரர்கள் அடம் பிடிக்க முடியாது. மாற்று தளங்கள் கிடைத்துவிட்டன படங்களை வெளியிட. இப்போது இணைய தளங்களில் வெளியிடுவதே போதும் என சில தயாரிப்பாளர்கள் முடிவு செய்து, சத்தமின்றி அதைச் செய்யவும் ஆரம்பித்துள்ளனர்.
சில சமயங்களில் என்று ஒரு படம். பிரகாஷ் ராஜ் ஹீரோ. இளையராஜா இசை. ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். 74வது கோல்டன் குளோப் விருதின் இறுதிச் சுற்றுவரை போன படம். ஆனால் பட்ஜெட்படி சின்னப் படம். இந்தப் படத்தை தியேட்டரில் வெளியிடாமல், நேரடியாக நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் மற்றும் ஹாட்ஸ்டாரில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர் தயாரிப்பாளர்கள்.
ஐசரி கணேஷ், இயக்குநர் விஜய், பிரபு தேவா மூவரும் இணைந்து தயாரித்துள்ள படம் இது.
"இது ஒரு தொடக்கம்தான். இந்த மாதிரி ரிலீசில் எந்த சிக்கலும் இல்லை. முதல் முயற்சி வெற்றிப் பெற்றுவிட்டால், பிறகு சின்னப் படங்கள் தியேட்டர்களுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எடுத்த வேகத்தில் வெளியிட்டு விட்டு அடுத்த வேலைப் பார்க்கலாம்," என்கிறார் இயக்குநர் விஜய்.
இதை தியேட்டர்காரர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்? எதிர்ப்பு ஏதும் கிளம்புமா? பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications











