சிவகார்த்திகேயன் பாவம்.. விஜய்யுடன் போட்டி ஜாலியாகத்தான் இருக்கு.. பிரபல நடிகர் இப்படி சொல்றாரே
சென்னை: ஜனநாயகன் படமும், பராசக்தி படமும் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸாவதால் இரண்டு படங்களுக்கும் போட்டி என்ற நிலைமை உருவாகியிருக்கிறது. துப்பாக்கி கொடுத்த விஜய்யையே சிவகார்த்திகேயன் எதிர்க்கிறாரா; இதெல்லாம் நல்லதுக்கு இல்லை என்றும் தளபதி ரசிகர்கள் கோதாவில் குதித்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி பிரபல நடிகர் ஜீவா ரவி சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் எஸ்கே ரசிகர்களிடமும், விஜய் ரசிகர்களிடமும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோல் செய்திருந்தார். அந்த சீனில் அவரிடம் விஜய் துப்பாக்கியை கொடுப்பது மாதிரி வெங்கட் பிரபு காட்சி வைக்க; தமிழ் சினிமாவையும் தனக்கு பிறகு சிவகார்த்திகேயன்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என விஜய் சொல்லிவிட்டதாக ரசிகர்கள் கூற ஆரம்பித்தார்கள். அப்போதிருந்தே எஸ்கேதான் அடுத்த தளபதி என்றெல்லாம் அடித்து சொல்ல தொடங்கினார்கள்.
மறுத்த சிவா: அவர்தான் அடுத்த விஜய் என்று சொன்னதை சிவாவுக்கு எதிர் தரப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை. விஜய் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் கூறினார்கள். அதையேத்தான் சிவகார்த்திகேயனும் சொன்னார். ஒரு விழாவில் பேசிய அவர், 'என்னை அடுத்த தளபதி என்று சொல்கிறார்கள். அதெல்லாம் இல்லை. விஜய்யின் இடம் விஜய்யுடையதுதான்' என்கிற ரீதியில் பேசியிருந்தார். இதன் காரணமாக இந்த விவகாரம் ஓய்ந்துவிடும் என்றுதான் பலரும் நினைத்தார்கள்.

ஜனநாயகன் Vs பராசக்தி: ஆனால் 2026ஆம் ஆண்டு பொங்கலுக்கு ஜனவரி ஒன்பதாம் தேதி ஜனநாயகன் படமும், ஜனவரி பத்தாம் தேதி பராசக்தி படமும் வருகின்றன. இதன் காரணமாக அடுத்த வருட தொடக்கமே தமிழ் சினிமாவில் பெரிய போட்டி உருவாகியிருக்கிறது. இதில் சிவா வெல்வாரா இல்லை விஜய் வெல்வாரா என்ற கேள்வியெல்லாம் ஒருபுறம் இருக்க; விஜய்யை எப்படி சிவா எதிர்க்கலாம் என்று தளபதி ரசிகர்கள் வாள் சுழற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். விஜய்யின் கடைசி பட வசூலை பாதியாக குறைப்பதற்கான சதிதான் இந்த போட்டி என்றும் அடித்து சொல்கிறார்கள்.
சிவாதான் காரணமா?: அதுமட்டுமின்றி விஜய்யோடு மோதி தான் பெரிய ஆள் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்த சிவகார்த்திகேயன்தான் இந்தப் போட்டியை வேண்டுமென்றே உருவாக்கினார். அவர் கொடுத்த நெருக்கடியால்தான் பட தயாரிப்பு நிறுவனம் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பது எஸ்கேவை எதிர்ப்பவர்களின் கருத்து. ஆனால் இது போட்டியெல்லாம் இல்லை; வியாபாரத்தின் காரணமாகத்தான் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகன் ரிலீஸ் ஆனால் இரண்டு வாரங்கள் அந்தப் படத்தைத்தான் தியேட்டரில் திரையிடுவோம். நீங்கள் வேண்டுமானால் 14ஆம் தேதிக்கு பதிலாக 26ஆம் தேதி வாருங்கள் என தாங்கள் சொன்னதாகவும்; அது ஒத்து வராது என சொல்லிதான் பத்தாம் தேதிக்கு பராசக்தியை ரிலீஸ் செய்கிறார்கள். இதில் போட்டியெல்லாம் எதுவும் இல்லை என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியமும் விளக்கியிருந்தார்.
ஜீவா ரவி பேட்டி: இந்நிலையில் பிரபல நடிகரும், தவெகவை சேர்ந்தவருமான ஜீவா ரவி இந்த விவகாரம் பற்றி பேசுகையில், "ஜனநாயகன் படத்தோடு பராசக்தி வருவாது எங்களுக்கு ஜாலியாகத்தான் இருக்கிறது. ஏன் என்றால் ஜனநாயகன் படத்தைத்தான் எல்லோரும் பார்ப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சிவகார்த்திகேயனை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அவரது பெயர் இதில் தேவையில்லாமல் இழுக்கப்படுகிறது. அவர் அப்படிப்பட்ட ஆள் இல்லை. நல்ல மரியாதையான ஆள். அவருக்கும் இதற்கும் சம்பந்தமே கிடையாது. இரண்டு தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் பிரச்னை இது. ஆனாலும் இதில் ஒரு அரசியல் இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











