twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாமாகப் படம்பார்த்து வளர்ந்த காலம் - மண்தரைக் கொட்டாய் நினைவுகள்

    By Shankar
    |

    -கவிஞர் மகுடேசுவரன்

    என்னுடைய இளமைக் காலமானது சின்னஞ்சிறிய கிராமத்தோடு தொடர்புடையது. அந்தக் கிராமத்தில் நன்செய் நிலங்கள் என்று எவையுமில்லை. சுற்றிலும் இருந்த நிலங்கள் புன்செய்யாக இருந்தன. மழை பொழியும்போது மட்டும் சோளத்தட்டு பயிரிடுவார்கள். முன்னொரு காலத்தில் அவ்வூரைச் சுற்றி நன்செய் நிலங்களே இருந்தன என்பதற்குச் சான்றாக ஊரைச் சுற்றிலும் ஏராளமான கிணறுகள் இருந்தன. அக்கிணறுகளில் ஓரிரண்டைத் தவிர பிற தூர்ந்துவிட்டன. இன்னும் தூர்ந்துபோகாத கிணறுகளில் கொஞ்சம் தண்ணீர் இருக்கும். கயிறுபோட்டுத் தண்ணீர் 'சேந்துவதற்குத்' தெம்புள்ளவர்கள் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம். திருப்பூர் என்னும் சிறு நகரத்திலிருந்து நான்கு கிலோமீட்டர்கள் தள்ளி இருந்தது அவ்வூர்.

    Nostalgia on Touring Talkies days

    திருப்பூர்க்கும் நாங்கள் குடியிருந்த பகுதிக்கும் நடுவில் கூடாரத் திரையரங்கம் ஒன்று இருந்தது. 'தமிழ்நாடு திரையரங்கம்' என்று அதற்குப் பெயர். 'டெண்டுக் கொட்டாய்' என்று நாங்கள் சொல்வோம். அதன் கூரையைக் கல்நார்த் தகடுகளால் வேய்ந்திருந்தார்கள். ஆனால், தரை வகுப்பில் மணல் கொட்டியிருக்கும். நடுவகுப்பில் சாய்மானத்திற்கு வழியில்லாத நீளிருக்கைகள். உயர் வகுப்பாக இரும்பினாலான மடக்கு நாற்காலிகள். ஆண் பெண் வகுப்புகளைப் பிரிக்க நடுவில் இடுப்பளவுச் சுவர். இடைவேளையில் தட்டுக்கூடையில் தின்பண்டங்கள் விற்கும் சிறுவர்கள். நாடோறும் இரண்டு இரவுக் காட்சிகள். சனி ஞாயிறு தவிர்த்த நாள்களில் பகற்காட்சி இல்லை. திருப்பூர்க்கும் எங்கள் கிராமத்துக்கும் நடுவிலிருந்த தென்னம்பாளையத்தில் வாரச்சந்தை நடக்கும். அந்தச் சந்தைக்கு மாவட்டத்தின் பற்பல பகுதிகளிலிருந்தும் கால்நடை வணிகர்கள் வருவார்கள். திங்கட்கிழமை இரண்டாவது ஆட்டம் பார்த்துவிட்டு மூன்று மணிக்குச் சந்தைக்குச் சென்றால் நேரம் சரியாக இருக்கும். அவர்களுக்காகவே திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நான்கு நாள்களுக்கு எம்ஜிஆர், சிவாஜி படங்கள் போடப்படும். விக்கிரமாதித்யன், காத்தவராயன், விவசாயி, தங்கப் பதுமை என்று அவர்களுக்கென்றே பல படங்கள் இருந்தன. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கு அண்மைக்காலப் படங்களைத் திரையிடுவார்கள். இந்தத் திரைநிரல் மாறியதே இல்லை.

    நுழைவுச் சீட்டுகளின் விலை எழுபத்தைந்து பைசா, ஒன்றேகால் உரூபாய், இரண்டு உரூபாய். மிதிவண்டிக்கு முப்பது பைசா. மணிமாறனும், சுப்பராயனும் திருப்பூர்ச் சட்டமன்ற உறுப்பினர்களாக விளங்கிய எண்பதுகளின் பிற்பாதி அது. ஒரு சிறுவனாக என்னுடைய திரைப்படச் சுவைப்புக்குத் தொடர்ந்து தீனியிட்டது தமிழ்நாடு டெண்டுக் கொட்டாய்தான். அந்த ஒற்றைக் கொட்டாயில் நான் இருநூறு படங்கள் பார்த்திருப்பேன். பள்ளிச் சிறுவனைப் படம் பார்ப்பதற்குத் தனியாக அனுப்ப மாட்டார்கள், இல்லையா ? எனக்கு அந்தத் தடையில்லை. வீட்டுக்கு அருகிலேயே இருந்த கொட்டாய் என்பதால் நான் எப்போது வேண்டுமானாலும் போய்க்கொள்ளலாம். "நேத்து எங்கடா போனே...? ஆளைக் காணோமே. மொதாட்டத்துக்குப் போயிட்டியா ? படம் நல்லாருந்துச்சா ?" என்றுதான் கேட்பார்கள். அத்தோடு சரி. ஒன்றேகால் உரூபாய் கையில் தேறினால் படத்துக்குப் போயிவிடுவேன்.

    Nostalgia on Touring Talkies days

    டெண்டுக்கொட்டாய் என்றதும் மட்டமாக நினைத்துவிடாதீர்கள். அகல்திரைப்படங்கள் திரையிடுமளவுக்கு நன்கு அகன்ற திரை. வீரபாண்டிய கட்டபொம்மனை அகல்திரைப்படமாக அங்கே பார்த்தேன். தரமான திரையீட்டுக்கருவி (புரொஜக்டர்) நிறுவியிருந்தார்கள். கண்களில் ஒற்றிக்கொள்ளும்படியான அழுத்தமான படங்கள் விழும். 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் 'தேன்பூவே பூவே வா...' பாடலுக்குத் திரையில் விழுந்த நிறங்களுக்குச் சொக்கியது நினைவிருக்கிறது. ஒலியமைப்புகள் கணீர் என்று இருக்கும். சகலகலாவல்லவனில் 'இளமை இதோ இதோவுக்கும்...' முரட்டுக் காளையில் 'பொதுவாக என்மனசு தங்கத்துக்கும்...' மேற்கூரை கிழியும்படி சீழ்க்கையடித்தார்கள். இரவுக்காட்சிதானே, கதவுகளைத் திறந்து வைத்துவிடுவார்கள். தென்றல் நம்மைத் தீண்டித் தழுவி வருடிக்கொடுத்துவிட்டு வெளியே போகும். தீபாவளி, பொங்கல், சித்திரை முதல்நாள், ஆடிப்பதினெட்டு ஆகிய நாள்களில் எள்விழ இடமிருக்காது. கொட்டாயின் பக்கவாட்டுச் சுவர்மீது ஏறிக் குந்தியபடியெல்லாம் படம் பார்ப்பார்கள்.

    குளத்துப்பாளையம் என்னும் அந்தக் கிராமம் தன் முகமழிந்து முற்றாக மறைந்து நகர்மயமாகி திருப்பூர் மாநகராட்சிக்குள் வந்துவிட்டது. தொண்ணூறுகளின் முற்பகுதியில் அந்தக் கொட்டாயின் திரையீடு நிறுத்தப்பட்டது. தமிழ்நாடு திரையரங்கம் என்னும் அந்தக் கொட்டாயைத் தகர்த்தழித்து, அதே நிலத்தில் புத்தம் புதிதாய் இரட்டைத் திரையரங்குகள் கட்டிவிட்டார்கள். எனக்குத் தமிழ்நாடு திரையரங்கம் என்றால் அந்தப் பழைய கொட்டாய்தான். புதிய திரையரங்கம் கட்டப்பட்டு இருபதாண்டுகள் ஆயிற்று, சொன்னால் நம்பமாட்டீர்கள், இன்று வரை புதிய திரையரங்குக்குள் நான் நுழைந்ததேயில்லை. என் நினைவுகளின் ஆழத்தில் தமிழ்நாடு திரையரங்கம் என்றால் அந்தப் பழைய கல்நார் வேய்ந்த 'மண்தரை, மரப்பெஞ்சுக்' கொட்டகைதான்.

    இருநூறு படங்கள் பார்த்திருப்பேன் என்று சொன்னேன் இல்லையா, அவ்விருநூறு படங்களும் வெறும் படங்கள் மட்டுமேயில்லை. ஒவ்வொரு படத்தோடும் என் அன்றைய நினைவுகள் ஒட்டியிருக்கின்றன. ஒரு படத்தைக் காண்பதற்குச் செய்த முயற்சிகள், அந்தச் சிறுபணத்தைத் திரட்டுவதற்குப் பட்ட பாடுகள், உடன் காண வந்த நண்பர்கள் உறவினர்கள், அவர்களுடன் பேசிய பொழுதுகள், படத்தைப் பார்ப்பதற்கு முன்பிருந்த நான், படத்தைப் பார்த்த பிறகு எனக்குள் ஏற்பட்ட மாற்றங்கள், அந்நாளின் இன்ப துன்பங்கள் என எல்லாவற்றோடும் தொடர்புடையவை அந்நினைவுகள். அவற்றை நான் மாசுபடுத்திக்கொள்ளமாட்டேன். அந்நினைவுகளில் ஒரு காலத்தின் வரலாற்றுத் தரவுகளும் வாழ்க்கைச் சுவடுகளும் பொதிந்திருக்கின்றன. அவற்றை எப்படியேனும் நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நான் எழுத விரும்பும் பேரிலக்கியமொன்று அதில் மறைந்திருப்பது எனக்குத் தெரியும். அந்நினைவுகளை ஊடுபாவாக்கித்தான் அவற்றை எழுதி முடிக்க வேண்டும். எழுத்தளார் ஒருவர் தம் கிழப்பருவத்தில் தாம் கல்வி கற்று வளர்ந்த மேல்நிலைப்பள்ளித் திடலுக்குக் காலைநடை செல்வதற்கு மறுத்துவிட்டாராம். அந்தப் பள்ளியோடு தமக்குள்ள இளமை நினைவுகள் இன்றைய புதிய காட்சிகளால் அழிந்துவிடும் என்றாராம். என் நிலைப்பாடும் அஃதே.

    Nostalgia on Touring Talkies days

    இன்றைக்கு ஒரு திரைப்படத்தைத் தொலைக்காட்சியில் பார்க்கிறோம். கைப்பேசியில் பார்க்கிறோம். கணினியில் பார்க்கிறோம். எல்லாம் கைக்கெட்டும் தொலைவில் நமக்குக் கிடைக்கின்றன. ஒரு திரைப்படத்தைத் திரையில் காணும்வரை அன்று நமக்குள் நிலவிய இனிமையான 'எதிர்பார்ப்பு' காணாமல் போய்விட்டதே!

    Read more about: touring talkies
    English summary
    Poet Magudeswaran's nostalgia on his childhood days, mostly he spent in a Touring Talkies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X