கார்த்திக்கும், சூர்யாவுக்கும் டாட்டாவா?.. கூலி படத்துக்கு பிறகு இந்த ஹீரோவை இயக்குகிறாரா லோகேஷ்?
சென்னை: லியோ படத்திற்கு பிறகு மீண்டும் எல்சியூ மீது லோகேஷ் கனகராஜுக்கே நாட்டம் வருமா என்பது சந்தேகம் தான் என்கின்றனர். ரஜினிகாந்தை வைத்து ஸ்டாண்ட் அலோன் படமாக கூலி படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடுவார் என்கின்றனர்.
மே மாதமே கூலி படம் வெளியாகலாம் என்றும் ஆயுத பூஜை, தீபாவளிக்கு தள்ளிப்போகவும் வாய்ப்பு உள்ளதாகவும் ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமன்னா ஜெயிலர் படத்தில் ஆட்டம் போட்டது போல கூலி படத்தில் பூஜா ஹெக்டேவும் ஆட்டம் போட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் லோகேஷ் கனகராஜே இப்படி மாறிவிட்டாரா அல்லது ரஜினிகாந்தின் அழுத்தம் காரணமா? என விமர்சனங்களும் குவிய ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில், கூலி படத்தை முடித்த கையோடு கைதி, ரோலக்ஸ் பக்கம் லோகேஷ் கனகராஜ் திரும்புவார் என கார்த்தி, சூர்யா ரசிகர்கள் காத்திருக்க அவரோ பிரபாஸ் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.
மாநகரம் டு கூலி: மாநகரம் படத்தில் சந்தீப் கிஷன், ரெஜினா கசாண்ட்ரா, ஸ்ரீ உள்ளிட்ட நடிகர்களை வைத்து தரமான படத்தை கொடுத்து இயக்குநராக மாறியவர் தான் லோகேஷ் கனகராஜ். அந்த படத்திற்கு பிறகு மன்சூர் அலி கானை வைத்து கைதி படத்தை இயக்க நினைத்துக் கொண்டிருந்தவருக்கு கார்த்தி மூலம் ஜாக்பாட் அடிக்க விஜய்யின் பிகில் படத்துக்கே செம போட்டியாக மாறியது. அதை பார்த்த விஜய் மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பை வாரி வழங்கினார். கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்க, மீண்டும் விஜய்யுடன் இணைந்து எல்சியூவை பெரிதாக்க லியோ படத்தை இயக்கினார். கடைசியாக ரஜினிகாந்த், நாகார்ஜுனா, அமீர்கான், உபேந்திரா, பூஜா ஹெக்டே, ஸ்ருதி ஹாசன் என மல்டி ஸ்டாரர்களை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார்.

பிரபாஸ் படம்: ரஜினிகாந்தின் கூலி படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜின் மார்க்கெட் இன்னமும் உயரும் என்பதை அறிந்து பிரபாஸ் தனது அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜை செய்ய சொல்லி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கைதி 2, ரோலக்ஸுக்கு டாட்டாவா?: அமீர்கானை வைத்து இரும்புக் கை மாயாவி படத்தையும் லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகின. கைதி 2 மற்றும் ரோலக்ஸ் படங்களை லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை முடித்து இயக்குவாரா என்பது சந்தேகம் தான் என்றும் அப்படியே இயக்கினாலும் அந்த அளவுக்கு ஹைப் இருக்குமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. ஆனால், கைதி 2, ரோலக்ஸ் படங்களை முடித்து விட்டுத்தான் பிரபாஸ் பக்கம் லோகேஷ் போவார் என்றும் கூறுகின்றனர். எப்படி இருந்தும் கூலி படம் முடிந்தவுடன் தான் லோகேஷ் கனகராஜின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகும் என்பது உறுதி.

1000 கோடி அடிக்குமா?: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டியன், கெளதம் மேனன், மிஷ்கின், சாண்டி, பிரியா ஆனந்த் நடித்த லியோ திரைப்படம் 1000 கோடி அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு 600 கோடி வரை வசூல் செய்தது. இந்நிலையில், ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் 1000 கோடி வசூலை கடக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ரஜினிகாந்தின் வேட்டையன் படம் பெரிய வசூல் வேட்டையை நிகழ்த்தாத நிலையில், கூலி படம் வெளியானால் தான் அதற்கு வாய்ப்பிருக்குமா? இல்லையா? என்பதை பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











