ஆஷிஷ் வித்யார்த்திய வில்லனா தான பார்த்திருக்கீங்க.. ஊக்கமளிக்கும் பேச்சாளரா பார்த்திருக்கீங்களா?
சென்னை: 1962ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி கேரளாவின் கன்னூரில் பிறந்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 1986ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஆனந்த் எனும் படத்தில் அறிமுகமான இவர், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், ஒடியா, ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் நடித்துள்ளார்.

மிரட்டல் வில்லன்
கன்னட மொழியில் அறிமுகமான ஆஷிஷ் வித்யார்த்தி, எண்ணற்ற இந்தி படங்களில் நடித்து முடித்து விட்டு, கடந்த 2001ம் ஆண்டு சியான் விக்ரம், லைலா நடிப்பில் வெளியான தரணியின் தில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ‘வெட்டு' ஷங்கர் எனும் மிரட்டல் வில்லனாக அறிமுகமானார். தொடர்ந்து ரஜினியின் பாபா, விஜய்யின் பகவதி, அர்ஜுனின் ஏழுமலை உள்ளிட்ட பல படங்களில் மெர்சல் காட்டினார்.

சிறந்த நடிப்பு
ஆரம்பத்தில் வில்லனாக மிரட்டி வந்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி பின்னர், குணசித்ர வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். பகவதி, தமிழன் படத்தில் விஜய்க்கு எதிராக வில்லன் வேடத்தில் நடித்து வந்த ஆஷிஷ் வித்யார்த்தி 2004ம் ஆண்டு கில்லி படத்தில் அப்பா ரோலில் நடித்து பட்டையை கிளப்பினார். தனுஷின் உத்தமபுத்திரன் படத்திலும் கலக்கலாக நடித்திருப்பார்.

நிஜத்தில் ஹீரோ
நம்பியார் முதல் டேனியல் பாலாஜி வரை சினிமாவில் வில்லனாக இருக்கும் பலர் நிஜத்தில் ஹீரோக்களை காட்டிலும் நல்ல மனம் கொண்டவர்களாகவும் பக்திமான்களாகவும் திகழ்ந்து வருகின்றனர். சினிமாவில் மிரட்டல் வில்லனாக காட்சி அளிக்கும் ஆஷிஷ் வித்யார்த்தி நிஜத்தில் பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் பேச்சாளராக திகழ்ந்து வருகிறார்.

தனி வெப்சைட்
மேலும், தனது பெயரில் https://www.ashishvidyarthi.com/ என்ற ஒரு வெப்சைட்டையும் நடத்தி மோட்டிவேஷனல் கருத்துக்களை மக்களிடையே கொண்டு செல்லும் நற்பணியையும் செய்து வருகிறார். ஆஷிஷ் வித்யார்த்தியை சிறப்பு அழைப்பாளராக பல கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களும் அழைத்து ஊக்கமளிக்கும் பேச்சுக்களை அவ்வப்போது வழங்க செய்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











