twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கவிதை காதலன் கமல்ஹாசன்.. பிறந்த நாள் வாழ்த்துகள் உத்தமவில்லனே!

    |

    சென்னை: நடிப்பு கலையில் உலக நடிகர்களை விஞ்சும் அளவிற்கு எண்ணற்ற வேஷங்கள் போட்டு, போட்ட வேஷங்களுக்கு நீதி செய்த நாயகன் உலக நாயகன்.

    பரமக்குடியில் பிறந்து 5 வயதிலே களத்தூர் கண்ணம்மாவில் தோன்றி, 65 வயதிலும் பிக்பாஸாக கலக்கி வரும் கமல்ஹாசனின் 65வது பிறந்த நாள் விழாவை உலகமே கொண்டாடி வருகிறது. நாங்களும் வாழ்த்துகிறோம். ஹேப்பி பர்த்டே கமல் சாரே!

    Not only Acting, also a legendary Poet, Happy Birthday Kamal Haasan

    நடிப்பில் மட்டும் தான் நாயகன் இவரோ? தமிழ் மேல் கொண்ட காதலால், கவிதையிலும் ஆழம் கண்ட இந்த உத்தம வில்லன் எழுதிய சில்மிஷம் நிறைந்த வார்த்தைகள் கொண்ட கவிதைகளின் அழகிய தொகுப்பை இங்கு காணலாம்.

    நான் நானாய் வாழ்வதில்!

    திரைப்படம் பேசினால்

    அரசியல் தெரியாதோ என்பீர்!

    அரசியல் பேசினால்

    ஆறடி தள்ளி நிற்பீர்!

    மொழிப்பற்று கொண்டால்

    ஆங்கிலம் புரியாதோ என்பீர்!

    ஆங்கிலம் பேசினால்

    படித்த திமிர் என்பீர்!

    பகுத்தறிவு பேசினால்

    கடவுள் பிடிக்காதா என்பீர்!

    கடவுள் நம்பிக்கை கொண்டால்

    கர்னாடகம் என்பீர்!

    சகோதரத்துவம் சொன்னால்

    நீங்கள் கம்யூனிஸ்டா என்பீர்!

    ஜனநாயகம் பேசினால் நாட்டின்

    இறையாண்மைக்கு எதிரானது என்பீர்!

    காதல் பிடிக்காதென்றால்

    ஆண்மையில் ஐயம் கொள்வீர்!

    காமம் பற்றி பேசினால்

    காதுகளைப் பொத்திக்கொள்வீர்!

    மெய்ஞ்ஞானம் பேசினால்

    விஞ்ஞானம் அறியீரோ என்பீர்!

    விஞ்ஞானம் பேசினால்

    விலகித் தள்ளி நிற்பீர்!

    ஓடி ஓடி உழைத்தாலும்

    பணத்தாசை பிடித்தவன்!

    பொருள் வேண்டாமென்றாலும்

    பிழைக்கத் தெரியாதவான்!

    எதிர்த்துப் பேசினால்

    அதிகப்பிரசங்கி!

    பேசாமலிருந்தால்

    கல்லுளிமங்கன்!

    எத்தனை கடினம் இவ்வுலகில்

    நான் நானாய் வாழ்வதில்..!

    ப்ரதிபிம்பம் பழங்கனவு,

    மறந்த என் மழலையின் மறுகுழைவு,

    மகளே!

    மகளே!

    உனக்கு என் மூக்கு என் நாக்கு!

    என் தாய் பாடித் தூங்க வைத்த தாலாட்டு,

    தின முனக்காய் நான் படிப்பேன் என் குரலில்,

    பாசத்தில் எனைப் பெற்றோர் செய்த தவறெல்லாம்

    தவறாமல் நான் செய்வேன்,

    என் ரத்தம் எனது சதை எனக் கூவி,

    உன் சித்தம் உன் போக்கை இகழ்ந்திடுவேன்,

    உன் போக்கு இதுதான் என நீ மறுக்க,

    உடைந்த மனதுடனே மூப்பெய்வேன்,

    என் அப்பனைப் போல்!

    அன்று - சாய் நாற்காலியில் வரப்போகும்

    கவிதைகளை இன்றே நான் எழுதிவிட்டால்

    அன்று - நான் பேசலாம் உன்னோடு,

    எழுதி விட்டேன்.

    வா - பேச!

    என தனது மகளுக்காக நடிகர் கமல்ஹாசன் இந்த கவிதையை எழுதியுள்ளார்.

    Not only Acting, also a legendary Poet, Happy Birthday Kamal Haasan

    மன்மதன் அம்பு கவிதை

    கண்ணோடு கண்ணை கலந்தாளென்றால்

    களங்கம் உள்ளவள் எச்சரிக்கை

    உடனே கையுடன் கைக்கோர்த்தாளா ?

    ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை

    ஆடை களைகையில் கூடுதல் பேசினால்

    அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை

    கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்

    காதலாய் மாறலாம் எச்சரிக்கை

    கவிதை இலக்கியம் பேசினளாயின்

    காசை மதியாள் எச்சரிக்கை

    உன்னுடன் இருப்பது சுகமேன்றாளா

    உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை

    அறுவடை கொள்முதல் என்றே காமம்

    அமைவது பொதுவே நலமாகக்கொள்

    கூட்டல் ஒன்றே குறி என்றானபின்

    கழிவது காமம் மட்டும் எனக்கொள்

    உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர் ?

    யோசிக்காமல் வருவதை எதிர்கொள்!

    முன்னும் பின்னும் ஆட்டும் சகடை

    ஆணும் பெண்ணும் அதுவே எனக்கொள்

    காமம் எனப்படும் பண்டை செயலில்

    காதல் கலவாது காத்துக்கொள்

    இப்பெண்ணுரைக்கு எதிராய் ஆணுறை ஒன்றை

    ஏற்ற துணியும் அணி சேர்த்துக்கொள்

    இயற்ற துணியும் அணி செர்த்துக்கனுமா?

    துணிவே அணியும் துணை என்றானபின்

    அணியொன்று எதற்கு? தனியே வருவேன்

    கலவி செய்கையில் காதில் பேசி

    கனிவாய் மெலிதாய் கழுத்தைகவ்வும்

    வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்

    குழந்தை வாயை முகர்ந்தது போல

    கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்

    காம கழிவுகள் கழுவும் வேளையும்

    கூட நின்றவன் உதவிட வேண்டும்

    சமையலின் போதும் உதவிட வேண்டும்

    சாய்ந்து நெகிழ்ந்திட திண்தோள் வேண்டும்

    மோதி கோபம் தீர்க்க வசதியாய்

    பாறை பதத்தில் நெஞ்சும் வேண்டும்

    அதற்கு பின்னால் துடிக்கும் இதயமும்

    அது ரத்தம் பாய்ச்சி நெகிழ்த்திய சிந்தையும்

    மூளை மடிப்புகள் அதிகம் உள்ள

    மேதாவிலாச மண்டையும் வேண்டும்

    வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென

    வழங்கி புழங்கிட பணமும் வேண்டும்

    நேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும்

    எனக்கென சுதந்திரம் கேட்கும் வேளையில்

    பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்

    இப்படி கணவன் வரவேண்டும் என நான்

    ஒன்பது நாட்கள் நோன்பு இருந்தேன்

    வரந்தருவாள் என் வரலக்ஷ்மி என

    கடும் நோன்பு முடிந்தும் தேடிப்போனேன்

    த்ரிஷா: தேடி எங்க போனா அந்த பொண்ணு

    கமல்: பீச்சுக்குதான்

    பொடி நடை போட்டே இடை மெலியவென

    கடற்கரை தோறும் காலையும் மாலையும்

    தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்

    முற்றும் துறந்து மங்கையரோடு

    அம்மண துறவிகள் கூடிட கண்டேன்

    த்ரிஷா: எங்க? TV' லையோ ?

    கமல்: ஷ்ஷ்ஷ்...

    மூத்த அக்காள் கணவனுக்கு

    முக்கால் தகுதிகள் இருந்தும் கூட

    அக்காளில்லா வேளையிலே அவன்

    சக்காளத்தி வேண்டும் என்றான்

    எக்குலமானால் என்ன என்று

    வேற்று மதம் வரை தேடிப் பார்த்தேன்

    வரவர புருஷ லக்ஷணம் உள்ளவர்

    திருமண சந்தையில் மிகமிக குறைவு

    வரம்தர கேட்ட வரலக்ஷ்மி உனக்கு

    வீட்டுகாரர் அமைந்தது எப்படி?

    நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது ?

    உறங்கி கொண்டே இருக்கும் உந்தன்

    அரங்கநாதன் ஆள் எப்படி?

    பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும்

    வாஸ்தவமாக நடப்பது உண்டோ?

    இதுவும் உதுவும் அதுவும் செய்யும்
    இனிய கணவர் யார்க்கும் உண்டோ?

    உனக்கேனுமது அமையபெற்றால்

    உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்

    நீ அதுபோல் எனக்கும் அமையசெய்யேன்

    ஸ்ரீ வரலக்ஷ்மி நமோஸ்துதே...

    என தனது பாணியான நக்கல் மற்றும் கிண்டலுடன் மன்மதன் அம்பு படத்திற்காக த்ரிஷாவுடன் இணைந்து கமல் பாடிய கவிதை இது.

    Not only Acting, also a legendary Poet, Happy Birthday Kamal Haasan

    மனித வணக்கம்

    தாயே, என் தாயே!
    நான்
    உரித்த தோலே
    அறுத்த கொடியே
    குடித்த முதல் முலையே,
    என் மனையாளின்
    மானசீகச் சக்களத்தி, சரண்.

    தகப்பா, ஓ தகப்பா!
    நீ என்றோ உதறிய மை
    படர்ந்தது கவிதைகளாய் இன்று
    புரியாத வரியிருப்பின் கேள்!
    பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

    தமயா, ஓ தமயா!
    என் தகப்பனின் சாயல் நீ
    அச்சகம் தான் ஒன்றிங்கே
    அர்த்தங்கள் வெவ்வேறு!

    தமக்காய், ஓ தமக்காய்!
    தோழி, தொலைந்தே போனாயே
    துணை தேடி போனாயோ?

    மனைவி, ஓ காதலி!
    நீ தாண்டாப் படியெல்லாம்
    நான் தாண்டக்குமைந்திடுவாய்
    சாத்திரத்தின் சூட்சுமங்கள் புரியும்வரை.

    மகனே, ஓ மகனே!
    என் விந்திட்ட விதையே
    செடியே, மரமே, காடே
    மறுபிறப்பே
    மரண சௌகர்யமே, வாழ்!

    மகளே, ஓ மகளே!
    நீயும் என் காதலியே
    எனதம்மை போல..
    எனைபிரிந்தும் நீயின்பம் காண்பாயா?
    இல்லை,
    காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?

    நண்பா, ஓ நண்பா!
    நீ செய்த நட்பெல்லாம்
    நான் செய்த அன்பின் பலன்
    இவ்விடமும் அவ்விதமே.

    பகைவா, ஓ பகைவா!
    உன் ஆடையெனும் அகந்தையுடன்
    எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
    நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
    உனதம்மணத்தின் விளம்பரங்கள்.

    மதமென்றும், குலமென்றும்
    நீ வைத்த துணிக்கடைகள்
    நிர்மூலமாகி விடும்
    நிர்வாணமே தங்கும்.

    வாசகா, ஓ வாசகா!
    என் சமகால சகவாசி,
    வாசி!
    புரிந்தால் புன்னகை செய்.

    புதிரென்றால் புருவம் உயர்த்து.
    பிதற்றல் எனத்தோன்றின்
    பிழையும் திருத்து.
    எனது கவி உனதும்தான்.

    ஆம்,
    நாளை உன் வரியில் நான் தெரிவேன்.

    கோவையில் நடைபெற்ற வானம்பாடிக் கவிஞர் புவியரசு அவர்களின் கவிதைநூல் வெளியீட்டு விழாவில் கமல் வாசித்த கவிதை இது. தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றிலும், கமல் இந்த கவிதை வாசித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகின.

    அந்த மனசு

    உலகில் உள்ள அத்தனை அனாதை குழந்தைகளின் மனசாட்சியாய் நின்று குமுறும் கமலின் இந்த கவிதை நிச்சயம் அவரது உச்சகட்ட சிந்தனையின் வெளிப்பாடு என்றே சொல்லலாம்.

    அனாதைகள்
    அனாதைகள் கடவுளின்
    குழந்தைகள் என்றல்
    அந்த கடவுளுக்கும்
    அவசியம் வேண்டும்
    குடும்பக்கட்டுப்பாடு...!

     நீ பெரும் கலைஞன்.. நிரந்தர இளைஞன்.. ரசணை மிகுந்த ரகசிய கவிஞன்.. உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு! நீ பெரும் கலைஞன்.. நிரந்தர இளைஞன்.. ரசணை மிகுந்த ரகசிய கவிஞன்.. உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு!

    English summary
    Mr Haasan, who has starred in nearly 200 films in Tamil, Telugu, Kannada, Malayalam and Hindi is also a multi-talented personality apart from being a successful screenwriter and filmmaker.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X