'சினிமாவுல பாடினதால வேலைக்கு கூப்பிட மாட்டேங்கிறாங்க..' அட்டப்பாடி நஞ்சம்மா அப்செட்!
கொச்சி: சினிமாவில் பாடியதால், வேலைக்கு அழைக்க மறுக்கிறார்கள் என்று அட்டப்படி நஞ்சம்மா தெரிவித்துள்ளார்.
பிருத்விராஜ், பிஜு மேனன் நடித்து வெளியான மலையாள படம், அய்யப்பனும் கோஷியும்.
சச்சி இயக்கி இருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து இந்தப் படம் பல்வேறு மொழிகளில் ரீமேக் ஆகிறது.

தமிழ் ரீமேக்
தெலுங்கில் இதன் ரீமேக்கில் ராணாவும் பவன் கல்யாணும் நடிக்கின்றனர். இந்தியில் இந்தப் படத்தை ஜான் ஆப்ரஹாம் ரீமேக் செய்கிறார். தமிழில் இதன் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் வாங்கி இருக்கிறார். சசிகுமார், பார்த்திபன் உட்பட சிலர் இதில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.

களக்காத்த சந்தனமேரம்
இன்னும் முடிவாகவில்லை. அய்யப்பனும் கோஷியும் படத்தில் இடம்பெற்ற, களக்காத்த சந்தனமேரம் வெகுவேகா பூத்திருக்கு என்ற மலையாளப் பாடல் பட்டிதொட்டிங்கும் ஹிட்டானது. யூடியூப், ஃபேஸ்புக், டிக் டாக் என சமூக வலைதளங்களில் கன்னாபின்னா வைரல் ஆனது. மலையாளம் தாண்டி மற்ற மொழிகளிலும் இந்தப் பாடல் வரவேற்பை பெற்றது.

ஆடு மேய்ப்பவர்
இந்தப் பாடலை பாடியவர் தமிழக, கேரள எல்லையான அட்டப்பாடி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த நஞ்சம்மா. படத்தில் அவர் அந்தப் பாடல் காட்சியில் நடித்தும் இருக்கிறார். அட்டப்பாடி பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் இவர் பல மேடை நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறார்.

தங்களுக்கு அவமானம்
இந்தப் பாடல் ஹிட்டானதை அடுத்து மேலும் சில வாய்ப்புகள் வந்துள்ளன. இதுபற்றி நஞ்சம்மா கூறும்போது, 'சினிமாவில் பாடியதற்கு பிறகு வேலை வாய்ப்புக் கிடைக்கவில்லை. இதற்கு முன் வேலை பார்த்த கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில், உங்களை வேலைக்கு அமர்த்தினால், அது தங்களுக்கு அவமானம் என்று கூறிவிட்டார்கள்.

தேவையான பணம்
இதனால் என் வாழ்க்கை தேவையை பார்க்க வேண்டி இருக்கிறது. இதற்காக அடுத்து சினிமாவில் நடிக்க அழைப்பவர்களிடம் தேவையான பணத்தைக் கேட்கிறேன். சினிமாவுக்கு நடிக்க சென்றால், என்னுடைய அனைத்து வேலைகளை விட்டுவிட்டுதான் செல்கிறேன். அதனால் பணம் கேட்கவில்லை என்றால் என்னால் வாழ முடியாது' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











