twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமாவை உலகமே பெருமையாகப் பேசுகிறது!- கே.பாலச்சந்தர்

    By Shankar
    |

    ஒரு காலத்தில் ஏதோ ஒரு மாநில மொழிப் படமாக இருந்த தமிழ் சினிமாவை இன்று உலகமே கொண்டாடுவது பெருமையாக உள்ளது, என்று இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் பேசினார்.

    பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் முதல் முறையாக இயக்கியுள்ள படம் ஆரோகணம். விஜி சந்திரசேகர், மாரிமுத்து, உமா உள்பட ஏராளமானோர் நடித்துள்ள இந்தப் படத்தை மலையாளத்தில் பல படங்களைத் தயாரித்துள்ள அனூப் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. ஜேஎஸ்கே பிலிம்ஸ் வெளியிடுகிறது.

    படத்தின் இசை வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை மாலை சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது.

    இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் விழாவுக்கு தலைமை தாங்கினார். மூத்த இயக்குநரும் பல விருதுகள் பெற்றவருமான இயக்குநர் கேஎஸ் சேதுமாதவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

    தமிழ் திரையுலகப் பிரமுகர்கள் இயக்குநர்கள் மிஷ்கின், வசந்த், பாண்டிராஜ், ஈரம் அறிவழகன், தயாரிப்பாளர் டி சிவா, நடிகர் தலைவாசல் விஜய், பின்னணி பாடகி சின்மயி, படத்தின் நாயகி விஜி, வடிவுக்கரசி, நடிகை சச்சு, நடிகர் ஏஆர்எஸ் உள்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.

    விழாவில் இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் பேசுகையில், "லட்சுமியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆரோகணம் படத்தை நானும் பார்த்தேன். ரொம்ப நீட்டான, கச்சிதமான படம். மேக்கிங் எல்லாம் அருமை.

    நானும் கூட அந்தக் காலத்தில் படம் எடுத்தேன். அக்னி சாட்சி. அதே சாயல் கதைதான். ஆனால் இந்தப் படம் அளவுக்கு விஞ்ஞான வார்த்தைகளை அதில் நான் பயன்படுத்தவில்லை. எனக்கு அது தெரியவில்லை.

    படத்தின் பட்ஜெட் பற்றி சொன்னார்கள். நான் ஆச்சர்யப்பட்டுவிட்டேன். இவ்வளவு பட்ஜெட்டில் படம் எடுக்க முடியும் என்றால், நான் கூட ஒரு கதையை தயார் பண்ணி எடுக்கலாமே... சும்மாதானே இருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படும் அளவுக்கு எனக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்துவிட்டது ஆரோகணம் படம்.

    முன்பெல்லாம் தமிழ் சினிமாவுக்கு மாநில மொழிப்படம் என்ற அந்தஸ்துதான். ஆனால் இன்று தமிழ் சினிமாவை உலகமே கொண்டாடுகிறது. எந்த நாட்டுக்குப் போனாலும் தமிழ் சினிமாவை பெருமையாகப் பேசுகிறார்கள். இந்தப் படம் உலகம் பேசும் அளவுக்கு உள்ளது. எடுத்துக் கொண்ட கதை, அதை சொல்லியிருக்கும் விதம் எல்லாமே சிறப்பாக உள்ளது.

    இன்னொன்று படம் ஒன்றரை மணி நேரம்தான். அது நன்றாக உள்ளது. வயசாயிடுச்சி வேற... ரொம்ப நேரம் உட்கார்ந்து படம் பார்க்க முடியறதில்ல. பல காட்சிகளில் நெளிந்து கொண்டிருக்க வேண்டும். அப்படியெல்லாம் எதுவும் இல்லாமல், ரொம்ப சுருக்கமா, கச்சிதமா இருக்கு இந்தப் படம்.

    பாடல்கள், இசை கூட அருமை. குறிப்பா அந்த தப்பாட்டம் பாட்டு எனக்கு பிடிச்சுப் போச்சு. தப்புத்தாளங்கள் படம் எடுத்தவனில்லையே... அந்த மாதிரி வரும் பாடல்கள் எனக்குப் பிடிக்கும்.

    லட்சுமி ராமகிருஷ்ணன் இதுபோல 100 படங்களை எடுக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

    இந்தப் படத்தில் நடித்துள்ள விஜி (சரிதாவின் தங்கை)யை நான்தான் தில்லுமுல்லு படத்தில் அறிமுகம் செய்தேன். அவரது நடிப்பைப் பார்த்தபோது, எனக்கு சரிதாவைப் பார்ப்பது போலவே இருந்தது. ரொம்ப சிறப்பா நடிச்சிருக்காங்க. இது அவங்களுக்கு இன்னொரு தொடக்கம். சிறப்பாக வர வாழத்துகிறேன்," என்றார்.

    சேதுமாதவன்...

    பல வெற்றிப் படங்கள் - விருதுப் படங்களைத் தந்த இயக்குநர் கே எஸ் சேதுமாதவன் பேசுகையில், "சிறு பட்ஜெட் படங்களைத்தான் நானும் எடுத்திருக்கிறேன். ஒரு படம் பேசப்படுவது பட்ஜெட்டை வைத்தல்ல.. எடுத்துக் கொள்ளும் கதை. சொல்லும் விதத்தை வைத்துதான். அந்த வகையில் ஆரோகணம் ஒரு சர்வதேசத் தரத்திலான சிறந்த படம்.

    பொதுவாக முன்பெல்லாம், தமிழ்ப் படங்கள் என்றதும், அங்கே பாட்டு, விதவிதமான லொகேஷன்கள், பொழுதுபோக்குச் சமாச்சாரங்கள் என அலங்காரங்கள் அதிகமாக இருக்கும். அழுத்தமில்லாமல் இருக்கும்," என்று சொல்வார்கள். இந்தப் படம் பார்க்கும்போது, அது பொய் என்று நிரூபணமாகிவிட்டது. சிறந்த நடிப்பு, அருமையான படமாக்கம். வசூல், விருதுகள் இரண்டும் குவிய வாழ்த்துகள்," என்றார்.

    இயக்குநர் வசந்த் தனது வாழ்த்துரையில், "தமிழ் சினிமாவில் வெற்றிப் படம் தந்த முதல் பெண் இயக்குநர் என்ற பெருமை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு சேரும்," என்றார்.

    என் இரண்டாவது தாய் - மிஷ்கின்

    இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், "லட்சுமி ராமகிருஷ்ணன் தன் நடிப்பை, தொழிலை காதலிப்பவர். அவர் அளவுக்கு அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவரைப் பார்க்க முடியாது. நான் இயக்கிய யுத்தம் செய் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் நதியா. ஆனால் தலையை மொட்டை அடிக்க வேண்டும் என்றதும், அவர் டூப் போட்டுக்கலாம் என்றார். நான் வந்துவிட்டேன். அப்போது வேறு ஒரு சின்ன வேடத்துக்காக வந்திருந்த லட்சுமியிடம், மொட்டை போட்டுக் கொள்ள முடியுமா? என்று கேட்டபோது, கேரக்டருக்கு தேவை என்றால் போட்டுக் கொள்கிறேன் என்றார். கதை கேட்டார், மொட்டையும் போட்டார்.

    ஒரு பெண் மொட்டை போடுவது சாதாரண விஷயமல்ல. அது சங்க காலங்களில் நடந்திருக்கலாம். ஆனால் நிஜத்தில் 30 -40 வருடங்கள் வளர்த்த கூந்தலை மழித்துக் கொள்ள யாரும் விரும்புவதில்லை. லட்சுமி இதைச் செய்த போது, அவரது காலைத் தொட்டுக் கும்பிட நினைத்தேன்.

    அவரது இந்த முதல் முயற்சி பெரும் வெற்றி பெற, நான் இரண்டாவது தாயாகக் கருதும் அவரையே வேண்டிக் கொள்கிறேன்," என்றார்.

    லட்சுமி ராமகிருஷ்ணன்...

    படத்தின் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது நன்றியுரையில், "ஒரு குழந்தை தப்புத் தப்பா, ஒருவித அறியாமையுடன் (Ingnorance) செய்த தயாரிப்பை பாராட்டுவதுபோல, குறைகளைப் பொறுத்துக் கொண்டு என் படத்தைப் பாராட்டியமைக்கு சாதனை இயக்குநர்கள், சக கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இதே அறியாமையுடன் தொடர்ந்து படங்கள் செய்ய விரும்புகிறேன். காரணம் அறியாமை தருகிற துணிச்சல்தான் புதிய முயற்சிகளைச் செய்ய வைக்கிறது. நான் அப்படியே இருக்க விரும்புகிறேன்.

    இந்தப் படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தனர். சம்பளம்கூட வாங்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்," என்றார்.

    முன்னதாக படத்தின் இசை குறுந்தகடை இயக்குநர்கள் கே பாலச்சந்தர், கேஎஸ் சேது மாதவன் வெளியிட, இயக்குநர் மிஷ்கின் மற்றும் இயக்குநர் அறிவழகன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

    English summary
    Veteran Tamil director K Balachandar says that the world is now praising Tamil cinema on its quality making and content. In the audio launch of Laksmi Ramakrishnan's Aaroganam movie, the thespian wished the entire team for making a good film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X