ஒடிசா ரயில் விபத்து.. இந்திய வரலாற்றின் மாபெரும் துயரம்.. கமல்ஹாசன் இரங்கல்!
சென்னை : ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலானது ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணியளவில் தடம் புரண்டு பயங்கர விபத்தை ஏற்படுத்தியது.

கோர விபத்து : இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து சரிந்து, அருகில் இருந்த அடுத்த தண்டவாளத்தில் விழுந்தது. அடுத்த சில நிமிடங்களில் அதே வழித்தடங்களில் வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ரயில் பயணிகள் ரயில் மீது மோதி தடம் புரண்டது. படுபயங்கரமான இந்த விபத்தில் பயணிகளின் கூச்சல் சத்தம் கேட்டு உள்ளூர் மக்கள் விரைந்து வந்து உதவியுடன் ரயில் பெட்டிக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.
12 மணி நேரம் மீட்பு பணி : இதையடுத்து, ரயில் விபத்து குறித்த தகவல் பரவி தேசிய, மாநில மீட்பு படையினருடன் விமானப்படையினர் விபத்து பகுதிக்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். மீட்புப்பணி 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. விடிய விடிய நடந்த மீட்பு பணியில் இதுவரை 288 பேர் பலியாகியுள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கமல் இரங்கல் : உலகையே உலுக்கிய இந்த கோர விபத்திற்கு பிரதமர், குடியரசு தலைவர், பல்வேறு மாநில முதல்வர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

288 பேர் பலி : அதில், ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 288க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது.
பெரும் துயரம் : உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைகிறேன். உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள தேச மக்கள் அனைவரும் துணை நிற்போம் என கமல் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











