Jailer - ஜெயிலர் ஃபீவர்.. சென்னை, பெங்களூரில் விடுமுறை.. மாஸ் காட்டும் ரஜினிகாந்த்
சென்னை: Jailer (ஜெயிலர்) ஜெயிலர் படம் வெளியாவதையொட்டி ஆகஸ்ட் 10ஆம் தேதி ஒரு நிறுவனம் விடுமுறையை அறிவித்திருக்கிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த படம் வெளியானது. சிறுத்தை சிவா இயக்கியிருந்த அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். வரிசையாக இரண்டு தோல்வி படங்களை கொடுத்ததால் ரஜினிகாந்த்தும், பீஸ்ட் படம் தோல்வியடைந்ததால் நெல்சனும் இந்தப் படத்தை கவனத்துடன் கையாண்டிருக்கின்றனர்.

ட்ரெய்லர், பாடல்கள்: படத்தின் பாடல்கள் வெளியாகி மெகா ஹிட்டாகின. அதேபோல் ட்ரெய்லரும் வெளியாகி இது ரஜினி - நெல்சன் திலீப்குமாரின் பெரும் சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையோடு கூறிவருகின்றனர். மேலும் ரஜினிக்கு இயல்பாகவே காமெடி நன்றாக வரும் என்பதால் நெல்சன் ஸ்டைல் காமெடியை ரஜினி எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை காண்பதற்கு ஆர்வத்துடன் இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
டிக்கெட் புக்கிங்கில் மாஸ்: படத்துக்கான டிக்கெட் புக்கிங் சில நாட்களுக்கு முன்னதாகவே அமெரிக்காவில் தொடங்கியது. அதனையடுத்து ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டை புக் செய்ய ஆரம்பித்தனர். முக்கியமாக இந்திய மதிப்பில் பல லட்சம் ரூபாய்க்கு டிக்கெட் புக்கிங் நடந்துவிட்டதாகவும் இது பெரும் சாதனை; இதிலும்கூட ரஜினிகாந்த் தான் ஒரு மாஸ் நடிகர் என்பதை உணர்த்திவிட்டதாக தலைவர் ரசிகர்கள் அலப்பறையை கிளப்பினர்.
இந்தியாவில் டிக்கெட் புக்கிங்: இந்தச் சூழலில் இந்தியாவில் இன்று ஜெயிலர் படத்துக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கியது. வெளிநாட்டில் எப்படி மாஸ் காட்டினாரோ அதேபோல் இந்தியாவிலும் டிக்கெட் புக்கிங்கில் ரஜினி மாஸ் காட்டிவருவதாகவே தெரிகிறது. பலரும் ஜெயிலர் படத்தின் ஓப்பனிங் காட்சியை பார்த்துவிட ஆர்வமாக இருக்கின்றனர். முதல் காட்சி ஆகஸ்ட் பத்தாம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் ஃபீவர்: இப்படி ஜெயிலர் ஃபீவர் தீவிரமாக அடிக்க ஆரம்பித்திருக்கிறது. நேற்றுக்கூட ஜெயிலரின் நான்காவது சிங்கிள் வெளியானது. இந்நிலையில் உச்சக்கட்டமாக ஜெயிலர் படத்தை முன்னிட்டு யூனோ ஆக்வா கேர் என்ற நிறுவனம் சென்னை, பெங்களூரு, திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் கிளைகளுக்கு விடுமுறையை அறிவித்திருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து தலைவர் தரிசனத்தை விமரிசையாக கொண்டாட ரசிகர்கள் தயாராகியுள்ளனர்.
சூப்பர் ஸ்டார்: இதற்கிடையே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என குரல்கள் எழுந்திருக்கின்றன. அந்தக் குரல்களை ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினி ஆஃப் செய்வாரா என்ற கேள்வி எழுந்திருப்பதால் ரஜினியின் மற்ற படங்களுக்கு இருந்த எதிர்பார்ப்பைவிட பன்மடங்கு இதற்கு உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











