40 கோடி இல்லையாம்.. புஷ்பா படத்தின் முதல் நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!
ஹைதராபாத்: இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் மிரட்டலாக வெளியாகி உள்ள புஷ்பா படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்திய படமாக உலகம் முழுக்க வெள்ளிக்கிழமை புஷ்பா திரைப்படம் வெளியானது.
உலகளவில் படத்தின் வசூல் 40 கோடி ரூபாய் கலெக்ட் செய்திருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், படத்தின் மொத்த வசூல் அதை விட அதிகம் என்கிற அறிவிப்பு அல்லு அர்ஜுன் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.

கலவையான விமர்சனங்கள்
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள புஷ்பா தி ரைஸ் முதல் பாகம் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. முதல் பாதி நல்லா இருந்ததாகவும் இரண்டாவது பாதி இழுவை என்றும் கலவையான விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.

கேஜிஎஃப் காப்பி
சாதாரண ஒருத்தன் அடியாளாக இருந்து டான் ஆகி பில்லாவாகும் கதை ஏகப்பட்ட படங்களில் பார்த்து புளித்துப் போன நிலையில், புஷ்பா படமும் அதே கதையாக உருவாகி இருப்பது தான் படத்தின் பிரச்சனையே என்கின்றனர். இதே கதைக்களத்துடன் வந்த கேஜிஎஃப் திரைப்படம் ஸ்க்ரீன் பிளேவில் கலக்கிய நிலையில், கேஜிஎஃப் படத்தை காப்பி அடித்து எடுத்துள்ளனர் என புஷ்பா படம் மீது ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

வசூலுக்கு பஞ்சமில்லை
ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்துக்கும் விமர்சன ரீதியாக பெரும் எதிர்ப்பு கிளம்பினாலும் வசூல் ரீதியாக அந்த படம் ஹிட் அடித்தது. அதே போல அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தின் முதல் நாள் வசூலும் ஆந்திரா, தமிழ்நாடு, வட மாநிலங்கள் மற்றும் சர்வதேச அளவில் மிகப்பெரிய லாபத்தை பார்த்துள்ளதாக கூறுகின்றனர்.

40 கோடி வந்திருக்கும்
இந்தியளவில் அண்ணாத்த திரைப்படம் 30 கோடி முதல் நாளில் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது. அக்ஷய் குமாரின் சூர்யவனிஷி 26 கோடி ரூபாயை முதல் நாளில் வசூல் செய்தது. இந்த வாரம் வெளியான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் திரைப்படம் முதல் நாளில் 32 கோடி ரூபாயை இந்தியாவில் வசூலித்தது. இந்நிலையில், இந்தியளவில் புஷ்பா படத்தின் முதல் நாள் வசூல் 30 கோடி என்றும் உலகளவில் 40 கோடி ஈட்டியிருக்கும் என டிராக்கர்கள் கணித்து இருந்தனர்.

71 கோடி வசூல்
ஆனால், உலகளவில் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் முதல் நாளில் மட்டும் 71 கோடி ரூபாயை வசூலித்து மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதை நம்பலாமா
புஷ்பா படம் போஸ்டரில் பெத்த கலெக்ஷன் என்றும் நிஜத்தில் கலெக்ஷன் குறைவு என்றும் இரண்டாம் பாகத்திற்கான ஹைப்பை கூட்டவே தயாரிப்பு நிறுவனமே இப்படியொரு பொய்யான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை போடுவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

2 நாட்களில் 100 கோடி
தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக முதல் நாளில் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் 71 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவித்துள்ள நிலையில், 2 நாட்களில் 100 கோடி வசூல் ஈட்டிய படமாக புஷ்பா மாறி உள்ளதாக அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு இந்திய சினிமாவில் அதிகம் வசூல் ஈட்டிய படமாக புஷ்பா மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications