Rajinikanth: ரஜினிகாந்த் பிறந்தநாளில் ரிலீசாகும் மழையில் நனைகிறேன் படம்.. சூப்பர்ஸ்டார் வீடியோ பதிவு
சென்னை: ரெமோ, சோலோ, தம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மலையாள நடிகர் அன்சன் பால் நடிப்பில் தமிழில் 5வது படமாக உருவாகியுள்ளது மழையில் நனைகிறேன். டி சுரேஷ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அன்சன் பால் முதல் முறையாக ஹீரோவாக நடித்துள்ளார்.
ரொமாண்டிக் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ராஜஸ்ரீ வென்சர்ஸ் சார்பில் பி ராஜேஷ்குமார் மற்றும் ஸ்ரீவித்யா ராஜேஷ் தயாரித்துள்ளனர். விஷ்ணு பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் அன்சன் பாலிற்கு ஜோடியாகியுள்ள ரெபோ மோனிகா லேடி லீடாக நடித்துள்ளார். பக்கா காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் மழையும் முக்கியமான கேரக்டராக சித்தரிக்கப்பட்டுள்ளது.

மழையில் நனைகிறேன் படம்: நடிகர் அன்சன் பால் தமிழில் அடுத்தடுத்து ரெமோ, சோலோ, 90 எம்எல், தம்பி போன்ற படங்களில் நடித்துள்ள நிலையில், அவர் முதல் முறையாக தமிழில் ஹீரோவாக நடித்துள்ள படம் மழையில் நனைகிறேன். படத்தில் அவருக்கு ஜோடியாக ரெபோ மோனிகா நடித்துள்ளார். பக்கா காதல் கதையை இந்தப் படத்தில் கதைக்களமாக எடுத்துக் கொண்டுள்ளார் இயக்குநர் டி சுரேஷ்குமார். இந்தப் படத்தில் முதலில் விஜய் சேதுபதிதான் ஹீரோவாக நடிக்கவிருந்ததாகவும் ஆனால் சூழ்நிலைகள் சரியாக அமையாததால் அவரால் நடிக்க முடியவில்லை என்றும் இயக்குநர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மழையும் ஒரு கேரக்டர்: ரொமாண்டிக் ஜானரில் மழையின் நனைகிறேன் படம் உருவாகியுள்ள நிலையில் நிராகரிக்கப்பட்ட காதலையும் அதற்கான காரணத்தையும் அது எப்படி சரி செய்யப்பட்டது என்பதையும் இந்தப் படத்தில் தான் கதைக்களமாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும் இயக்குநர் கூறியுள்ளார். இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மிகச்சிறப்பாக ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தில் மழையும் ஒரு கேரக்டராகவே மாறியுள்ளதாகவும் மழையில் துவங்கி மழையில் நிறைவடையும் வகையில் இந்தப் படத்தின் காட்சி அமைப்புகள் இருப்பதால் மழையில் நனைகிறேன் என்று இந்தப் படத்திற்கு டைட்டில் வைத்துள்ளதாகவும் சுரேஷ்குமார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் வாழ்த்து: இந்தப்படத்தில் தன்னுடைய காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் கேரக்டரில் ரெபோ மோனிகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஒருதலை காதலை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் இருந்தாலும் நாயகிக்கு தொந்தரவு கொடுப்பது உள்ளிட்ட காட்சிகள் படத்தில் இருக்காது என்றும் குடும்பத்துடன் படத்தை பார்க்கும் வகையில் கதைக்களம் அமைந்துள்ளதாகவும் இயக்குநர் மேலும் கூறியுள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்பதால் படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
ரஜினியின் தீவிர ரசிகர்: படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், இயக்குநர் உள்ளிட்டவர்களை குறிப்பிட்டு அவர் இந்த வீடியோவில் பேசியுள்ளார். படம் சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளில் அதாவது வரும் டிசம்பர் 12ம் தேதி சர்வசே அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ்குமார் ரஜினியின் தீவிர ரசிகராக பலஆண்டுகளாக பயணித்து வருகிறார். அவரது முத்து படம் வெளியானபோது ரஜினியின் அதே கெட்டப்புடன் கையில் சாட்டையுடன் இவர் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்துள்ளார். அந்த அளவிற்கு இவர் ரசிகராக உள்ள நிலையில், ரஜினிகாந்த் தற்போது படத்தின் வெற்றிக்காக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











