World Hunger Day - உலக பட்டினி தினம்.. மக்கள் பசி போக்கும் விஜய் மக்கள் இயக்கம் - ரசிகர்கள் பாராட்டு
சென்னை: World Hunger Day (உலக பட்டினி தினம்) உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒருவேளை மதிய உணவு வழங்கப்பட்டது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
உலக பட்டினி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒருவேளை மதிய உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், " உலகம் முழுவதும் மே 28ஆம் தேதி அன்று "உலக பட்டினி தினம்" அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் நீண்டகால பட்டினியால் வாடும் மக்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.

எதனால் இந்தத் திட்டம்:
"தளபதி" அவர்களின் சொல்லுக்கிணங்க, உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு பசி எனும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக "தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்" திட்டம் மூலம் வருகின்ற 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல:
மேலும் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள "தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக "பட்டினி தினத்தை" முன்னிட்டு ஒரு நாள் மதிய)உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பசியினை போக்கும் விழிப்புணர்வு:
இதன் மூலம் பசியால் வாடும் மக்களுக்கு இயன்றவரை உணவளித்து பசியினை போக்கும் விழிப்புணர்வினை சமுதாயத்தில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் "தளபதி விஜய் மக்கள் இயக்கம்" இந்த நலப்பணி செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்தார்.
ஒருவேளை மதிய உணவு:
விஜய் மக்கள் இயக்கம் அறிவித்த அறிவிப்பின்படி இன்று தமிழ்நாடு முழுவதும் ஒருவேளை மதிய உணவு வழங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் நடந்த இந்த நிகழ்வில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மக்களுக்கு உணவை பரிமாறினார். சிக்கன் பிரியாணி உள்ளிட்ட உணவுகளை மக்கள் ருசித்து சாப்பிட்டனர். விஜய் மக்கள் இயக்கத்தின் இந்த செயல்பாடு பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

லியோ, தளபதி 68:
விஜய் இப்போது லியோ படத்தில் நடித்துவருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ஒருபக்கம் திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் இதுபோன்ற பொது சேவைகளிலும் விஜய் ஆர்வத்துடன் கவனம் செலுத்திவருவது குறிப்பிடத்தக்கது. மேலும், இது விஜய்யின் அரசியல் மூவை உணர்த்துவதாகவும் சில தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











