twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வரிவிலக்குக்கு ஒரு கோடி கட்டிங்? அலறும் தயாரிப்பாளர்கள்!

    |

    ஜிஎஸ்டி வரி விதிப்பு என்ற உடன் அலறும் சினிமாக்காரர்கள் வரிவிலக்கு என்ற பெயரில் ரசிகனுக்கு செல்ல வேண்டிய பணத்தை கொள்ளையடிப்பதும், அந்த வரிவிலக்குக்காக கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுப்பதும் தெரிய வந்துள்ளது.

    ஆட்சியாளர்கள் ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் அதில் கண்டிப்பாக சுயலாபம் இருக்கும். தமிழ் கலாசாரத்தை வலியுறுத்தும், தமிழில் டைட்டில் வைக்கப்படும், சென்சாரில் 'யு' சான்றிதழ் பெறும் படங்களுக்கு வரிவிலக்கு என்று அரசு அறிவித்திருக்கிறது. இது திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகும் தொடர்கிறது. ஆனால் சமீபகாலமாக இந்த எந்த கண்டிஷனிலும் வராத படங்களெல்லாம் வரிவிலக்கு பெற்று விடுகின்றன. எப்படி என்று விசாரித்தால் பகீர் உண்மைகள் வெளிவருகின்றன.

    One crore bribe for tax free

    முதல் கண்டிஷன் தமிழில் பெயர் வைப்பது... இது நடைமுறையிலேயே இல்லை. தமிழில் பெயர் வைக்கப்பட்ட உதயநிதியின் படங்களுக்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டதை நாம் அறிவோம். ரெமோ போன்ற ஆங்கில டைட்டில் படங்களுக்கு வரிவிலக்கு கிடைக்கிறது. அடுத்து யு சர்டிஃபிகேட்... இங்கே யு சர்டிஃபிகேட் வாங்கி வரிவிலக்கு பெற்ற படங்கள் வெளிநாடுகளில் யு/ஏ சர்டிஃபிகேட் பெறுகிறது. தமிழ் சென்சாரின் லட்சணத்தை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

    நாம் விசாரித்த வரை முழுக்க முழுக்க கட்டிங்தான் வரிவிலக்கை நிர்ணயிக்கிறதாம். பட்ஜெட்டை பொறுத்து சின்ன படங்களுக்கு என்றால் இருபத்தைந்து லட்சத்தில் இருந்து ஐம்பது லட்சம் வரையிலும், பெரிய பட்ஜெட் படமாக இருந்தால் ஒரு கோடி வரையிலும் கூட கட்டிங் வெட்ட சொல்கிறார்களாம் வரிவிலக்கு பெறும் இடத்தில். இந்த கட்டிங்கில் பெரும்பங்கு மேலிடத்துக்கு போவதாக சொல்லப்படுவதால் தயாரிப்பாளர்களும் அமைதியாக கொடுத்துவிடுகிறார்கள். சில தயாரிப்பாளர்கள் எங்களுக்கு வரிவிலக்கே வேண்டாம்... வரியாகவே அரசுக்கு போகட்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.

    சின்ன தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்டது அவர்களுக்கே எதிராக திரும்பியது எப்படி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சொல்கிறார்...

    "வரிவிலக்கு என்பதே தேவையில்லாதது. இதனால் சினிமா வளரும் என்றோ, நல்ல படங்கள் வரும் என்றோ எதிர்பார்க்க முடியாது. அதற்கு பதிலாக எல்லா படங்களுக்குமே பத்து சதவீதம் வரி என்று பாரபட்சமின்றி விதிக்கலாம். வரிவிலக்கால் சின்ன படங்களுக்கு எந்த பயனும் இல்லை. வேண்டுமானால் பெரிய படங்கள் இதனால் கோடிக்கணக்கில் லாபம் பெறுகின்றன. வரிவிலக்குக்காக கொடுக்கப்படும் தொகை அளவுக்கு கூட அந்தந்த படங்கள் வசூலிப்பதில்லை. எனவே பத்து சதவீதம் வரியை அறிவித்துவிட்டு, இதற்கு முன்னர் அளித்துக்கொண்டிருந்த்து போல சின்ன படங்களுக்கு மான்யம் வழங்கலாம். அதுதான் சின்ன படங்களை, நல்ல கருத்துள்ள படங்களை தயாரிப்பவர்களுக்கு பலன் அளிக்கும். அந்த மானியத்தை நிறுத்திவிட்டார்கள். கேட்டால் அதுதான் வரிவிலக்கு கொடுக்கிறோமே என்று காரணம் சொல்கிறார்கள்.

    பெரிய படங்கள் மாதம் ஐந்து முதல் பத்து தான் வருகின்றன. 95 சதவீதம் சின்ன படங்கள்தான். கபாலிக்கெல்லாம் வரிவிலக்கு நியாயமா? இங்கே யு சர்டிஃபிகேட் தரப்பட்ட கபாலிக்கு வெளிநாடுகளில் யு/ஏ தரப்பட்டது. ஒரு ஏ சர்டிஃபிகேட் படத்துக்கு யு சர்டிஃபிகேட் கொடுத்து வரிவிலக்கு தர வழிவகை செய்திருக்கிறார்கள். அதேபோல் ரெமோ என்பது ஆங்கில தலைப்பு என்பது அப்பட்டமாக தெரிகிறது. அந்த படத்துக்கு வரிவிலக்கு தரப்பட்டிருக்கிறது. இந்த முறைகேடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்''

    இந்த வரிவிலக்கு அரசியலால் அதிகம் பாதிக்கப்பட்டது உதயநிதி ஸ்டாலினின் படங்கள் தான். அவரிடமே பேசினோம்.

    "ஆறு ஆண்டுகளாக இது நடந்துகொண்டிருக்கிறது. இப்போதாவது நீங்கள் இதுபற்றி எழுதுகிறீர்களே... இண்டஸ்ட்ரியில இருக்கும் எல்லோருக்குமே இது தெரியும். ஒரு நல்ல நோக்கத்தோடு திமுக அரசு கொண்டு வந்தது இது. ஆனால் ஆறு ஆண்டுகளாக போராடிக்கொண்டிருக்கிறேன். இப்போதுகூட கோர்ட்டில் வழக்கு சென்றுகொண்டிருக்கிறது. மற்ற சினிமாக்காரர்களின் நிலை எனக்கு புரிகிறது. எனக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் அவர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே தான் நான் நீதிமன்றத்தை நாடினேன். ஆனால் அங்கேயும் வாய்தா மேல் வாய்தா வாங்கி இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக அரசிடம் இருந்து எனக்கு நியாயம் கிடைக்காது என்பது தெரியும். ஏனென்றால் எனக்கு நடப்பது பழிவாங்கும் நடவடிக்கை. ஆனால் இதனால் எல்லா தயாரிப்பாளர்களுமே பாதிக்கப்படுகிறார்கள். மற்றவர்களுக்காவது காசை வாங்கிக்கொண்டு வரிவிலக்கு தருகிறார்கள். எனக்கு அதுவும் இல்லை. அதேபோல் சென்சார் கமிட்டி. எந்த தகுதியும் இல்லாத, முதல்வருக்கு நண்பர்கள் எந்த ஒரே தகுதியில் சென்சாரில் இருக்கிறார்கள். அவர்களும் ஒரு வகையில் அரசின் பகடைக்காய்களே... எனக்கு சென்சாரில் பிரச்னை இல்லை. என் எல்லா படங்களுமே யு படங்கள் தான். ஆனால் கண்டிப்பாக வரிவிலக்கு கிடைக்காது என்று தெரியும். கெத்து தமிழ் வார்த்தை என்று நிரூபித்தேன். அதற்கே அப்பீல் கொடுத்திருக்கிறார்கள். மனிதன் என்பதே தமிழ் வார்த்தை இல்லை என்று சொல்பவர்களை என்ன செய்வது?'' என்று வேதனைப்பட்டுக்கொண்டார்.

    ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை விட்டு அதிகாரிகளின் லஞ்ச, ஊழலுக்காகவே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதனால் யாருக்குமே பயனில்லை. சில பெரிய தயாரிப்பாளர்களையும், அதிகாரிகளையும் தவிர.
    முன்பெல்லாம் வரிவிலக்கு பெற்ற படங்கள் என்றால் அந்தந்த படங்களின் டிக்கெட் விலை குறைவாக இருக்கும். வரிவிலக்கு என்றால் அந்த பலன் ரசிகர்களுக்கு டிக்கெட் விலையில் தானே சலுகையாக போய் சேரவேண்டும்? தயாரிப்பாளர்களுக்கு ஏன் சேர்கிறது? இதுதானே ஊழலுக்கும் லஞ்சத்துக்கும் வழிவகுத்த்து?

    - ஆர்ஜி

    English summary
    Authentic sources say that the govt officials demanding more than one crore rupees for giving tax free for movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X