எஸ்.ஜே.சூர்யாவின் கில்லர்.. ஷூட்டிங்கில் பெரிய விபத்து.. ஒருவர் உயிரிழப்பு.. என்ன நடந்தது
சென்னை: தமிழ் சினிமாவின் சீனியர் இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. அவர் கடைசியாக 2015ஆம் ஆண்டு இசை படத்தை இயக்கினார். அதற்கு பிறகு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திவந்த சூர்யா; இப்போது மீண்டும் இயக்க தொடங்கியிருக்கிறார். அந்தவகையில் அவர் கில்லர் படத்தை இயக்கிவருகிறார். இந்நிலையில் பெரம்பூரில் நடந்த ஷூட்டிங்கில் பெரிய விபத்து நிகழ்ந்திருக்கிறது.
கோலிவுட்டின் திறமை வாய்ந்த இயக்குநர்களில் ஒருவர் எஸ்.ஜே.சூர்யா. அவர் இதுவரை இயக்கிய வாலி, குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை ஆகிய படங்கள் வெவ்வெறு ஜானரில் வந்தவை. அவற்றில் அன்பே ஆருயிரே திரைப்படமும், இசை திரைப்படமும் தோல்வியை சந்தித்தாலும் வித்தியாசமான அட்டெம்ப்ட் என்ற பெயரை பெற்றன. விமர்சன ரீதியாக அந்தப் படங்கள் கொண்டாடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
நடிப்பில் பிஸி: சூர்யாவை பொறுத்தவரை சினிமாவில் நடிப்பதற்காகத்தான் வந்தார். கால சூழ்நிலை அவரை இயக்குநராக மாற்றிவிட்டார். இயக்குநர் ஆனாலும் நடிப்பை விடாத அவர்; ஒருகட்டத்தில் முழுக்க முழுக்க இயக்கத்துக்கு முழுக்கு போட்டுவிட்டு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினார். இயக்கத்தில் எப்படி தரமான செய்கைகளை செய்தாரோ அதேபோல் நடிப்பிலும் பின்னியெடுக்கிறார். பல படங்கள் ஹிட்டடித்திருக்கின்றன. பல படங்களை கைகளில் வைத்திருக்கிறார்.

மீண்டும் இயக்கம்: அவர் என்னதான் நடித்தாலும் மீண்டும் இயக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் ஆசையாக இருந்தது. அவர்களது ஆசைக்காகவும், தனக்காகவும் மீண்டும் இயக்குநராகியிருக்கிறார் சூர்யா. அந்தவகையில் அவர் கில்லர் என்ற படத்தை இயக்கிவருகிறார். த்ரில்லர் ஜானரில் இந்தப் படம் உருவாகும் என தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைப்பாளராக கமிட்டாகியிருக்கிறார்.
விறுவிறு ஷூட்டிங்: பான் இந்தியா படமாக இப்படம் வெளியாகவிருக்கிறது. பல வருடங்கள் கழித்து சூர்யா இயக்குநராகியிருப்பதால் இப்படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. கண்டிப்பாக அவரது ட்ரேட் மார்க் ஸ்டைல் இந்தப் படத்தில் இருக்கும் என்றும்; ரசிகர்களை நிச்சயம் ஆச்சரியப்படுத்துவார் என்றும் திரைத்துறையினர் நம்பிக்கையோடு கூறிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு தளத்தில் விபத்து: இந்நிலையில் கில்லர் படத்தின் ஷூட்டிங் பெரம்பூர் பின்னிமில்லில் நடந்தது. அப்போது அங்கே இருந்த சிலிண்டர் வெடித்ததில் நான்கு நபர்கள் காயமடைந்தார்கள். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையும் வழங்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மதுரவாயலை சேர்ந்த மதன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சியை எடுப்பதற்காக சிலிண்டரில் கேஸ் நிரப்பியபோது இந்த விபத்து நிகழ்ந்திருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த சம்பவம் திரைத்துறையில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications