Jana Nayagan : One Last Dance.. One More Time.. முதலமைச்சர் விஜய்யின் நாளைய கமிட்மெண்ட் இதுதானா?
சென்னை: நடிகராக இருந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக உயர்ந்துள்ள விஜயின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாள் முதல் காட்சியிலேயே உலகம் முழுவதும் ரசிகர்கள் திரையரங்குகளை திருவிழாவாக மாற்றிய நிலையில், தற்போது படத்தை முதலமைச்சர் விஜய் நாளை பார்க்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
'ஜனநாயகன்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது. இது விஜயின் 69-வது படமாக மட்டுமல்லாமல், அவர் அரசியலுக்கு முழுமையாக கவனம் செலுத்துவதற்கு முன் நடித்த கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உணர்வுப்பூர்வமான வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் முதல் நாள் காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆனது.

இந்த நிலையில், நாளை காலை 11.30 மணிக்கு வடபழனியில் உள்ள கியூப் தியேட்டரில் 'ஜனநாயகன்' திரைப்படத்தை முதலமைச்சர் விஜய், படத்தின் நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பார்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
படக்குழுவினருடன் முதலமைச்சர்: படம் வெளியான நாளிலேயே ரசிகர்களின் கொண்டாட்டம் உச்சத்தை தொட்ட நிலையில், தற்போது படக்குழுவினருடன் விஜய் இணைந்து படத்தை பார்க்க உள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால், அந்த சிறப்புக் காட்சி குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில், இந்த தகவல் குறித்து படக்குழு அல்லது தமிழக அரசு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும், சினிமா வட்டாரங்களில் இந்த தகவல் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

ஒன் லாஸ்ட் டைம்: ஒருவேளை இந்த சிறப்புக் காட்சி நடைபெறும் பட்சத்தில், நீண்ட நாட்களுக்குப் பிறகு 'ஜனநாயகன்' படக்குழுவினர் அனைவரும் ஒரே இடத்தில் முதலமைச்சர் விஜய்யுடன் இணையும் நிகழ்வாக அது அமையும். இதனால் அந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தற்போது இந்த தகவலே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications