‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’... களத்தில் குதிக்கும் இன்னொரு குத்துச் சண்டை படம்!
தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு ஏனோ குத்துச் சண்டை மீது அலாதி ஆர்வம் வந்துவிட்டது.
எங்கே பார்த்தாலும் யாராவது ஒருவர் யாரையாவது குத்திக் கொண்டே இருக்கிறார். சமீபத்தில்தான் சிவகார்த்திகேயன் மான் கராத்தே என்ற படத்தில் குத்துச் சண்டை போட்டார்.
விரைவில் ஜெயம் ரவியின் குத்துச் சண்டைப் படம் பூலோகம் வரப் போகிறது.
இதோ அடுத்த குத்துச் சண்டைப் படம் நாங்கெல்லாம் ஏடாகூடம், களத்தில் குதிக்கப் போவதை பிரஸ் மீட் வைத்து அறிவித்துள்ளனர்.

நாங்கல்லாம் ஏடாகூடம்
குருந்துடையார் புரொடக்ஷன்ஸ் சார்பாக நிர்மல் தேவதாஸ் தயாரிக்கும் படம் ‘நாங்கெல்லாம் ஏடாகூடம்'. ஆர் விஜயகுமார் இயக்கத்தில் சார்லஸ் மெல்வின் இசையமைப்பில் மனோஜ் தேவதாஸ், வீணா நாயர், ஜார்ஜ் விஜய், விசாகர், ராஜேஷ், பாலாஜி, ஹென்சா, மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் இயக்குனரான விஜயகுமார், இயக்குனர்கள் வடிவுடையான், நகுலன் பொன்னுசாமி, சிவா ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்.

ஹீரோவோட கேரக்டர் அப்படி..
படம் பற்றி இயக்குனர் கூறுகையில், "நாங்கெல்லாம் ஏடாகூடம்' என தலைப்பு வச்சதுக்குக் காரணம் ஹீரோவோட கேரக்டர்தான். ஹீரோ எதை செஞ்சாலுமே ஏடா கூடமாவே செய்வாரு. அவர் குருநாதர் என்ன சொல்றாரோ, என்ன நினைக்கிறாரோ அதைச் செய்யாம, அதுக்கு ஏடாகூடமா செய்வாரு. அதுதான் படத்தோட தலைப்புக்குக் காரணம்.

வட சென்னை
முழுக்க முழுக்க வட சென்னையிலயே நடக்கிற கதை. சென்னை மக்கள் அதிகமா பயன்படுத்தற வார்த்தை ‘ஏடாகூடம்'. அதுவும் படத்துக்குப் பொருத்தமா அமைஞ்சிருக்கு (அது ஏன் பாக்சிங் என்றதும் எல்லோரும் வட சென்னைக்கே ஓடுகிறார்கள்?) .

பாக்சிங்
‘பாக்சிங்' விளையாட்டுதான் படத்தோட மையக் கரு. வட சென்னையில நடந்த ஒரு பாக்சிங் மாஸ்டரோட உண்மைக் கதைதான் இந்த படம். பொதுவா, பாக்சிங்ல ஜெயிச்சி பெரிய ஆளாகிட்டாங்கன்னா, அவங்களைப் பார்த்து ஊரே பயப்படும். ஆனால், அதை பலரும் ரவுடியிசத்துக்குத்தான் பயன்படுத்துவாங்க.
ஆனால், படத்துல வர்ற பாக்சிங் மாஸ்டர், பாக்சிங்கை ஒரு விளையாட்டால் பார்க்காம ஒரு கலையா பார்க்கிறாரு, தர்மமா பார்க்கிறாரு. இந்த கலை பலருக்குப் போய்ச் சேரணும்னு நினைக்கிறாரு. வாழ்க்கையில எவ்வளவோ பிரச்சனைகள் வந்தாலும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் இந்த பாக்சிங் கத்துக் கொடுக்கும்னு சொல்றவரு.

வீணா நாயர்
படத்துல ஹீரோயினா நடிக்கிறவங்க வீணா நாயர். இவங்க கேரளாவுல பிரபலமான விளம்பர மாடல். படத்துல ஒரு சாப்ட்வேர் இன்ஜினயரா நடிக்கிறாங்க.
இந்த படத்துக்காக வட சென்னை பகுதியான ராயபுரம், காசிமேடு, எர்ணாவூர், திருவொற்றியூர் ஆகிய இடங்கள்ல படப்பிடிப்பு நடந்தது. யாருமே போகாத பல இடங்களுக்குப் போயி படமாக்கியிருக்கிறோம்.

க்ளவுஸ் இல்லாம சண்டை
அது மட்டுமில்லாம பாக்சிங், வட சென்னை பகுதியில எப்படி நடந்ததோ அதை அப்படியே யதார்த்தமா படமாக்கியிருக்கிறோம். உதாரணமா பாக்சிங்ல கலந்துக்கிறவங்களுக்கு கையில கிளவுஸ் கூட இருக்காது. வெறும் ‘காடாத் துணியை'தான் கிளவுஸ் மாதிரி சுத்திக்கிட்டு சண்டை போடுவாங்க. இப்படிப் பல விஷயங்களை பார்த்துப் பார்த்து செஞ்சிருக்கோம்," என்கிறார் இயக்குனர் விஜயகுமார்.


Click it and Unblock the Notifications











