பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம்.. ஒருவர் பலி.. ஒருவர் படுகாயம்
அமராவதி: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பவன் கல்யாண். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சினிமாவில் நடித்தது மட்டுமின்றி ஜன சேனா கட்சியின் நிறுவனராகவும் இருக்கும் அவர் ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சராகவும் இருந்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் தனது 53ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவர் மட்டுமின்றி கட்சி தொண்டர்களும் விமரிசையாக கொண்டாடினார்கள். அந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு தொண்டர்களில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்; ஒருவர் படுகாயமடைந்திருக்கிறார்.
தெலுங்கு திரையுலகில் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் பவன் கல்யாண். அவருக்கென்று ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவரது படம் ரிலீஸானால் திருவிழா போல் அதனை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். நடிகராக மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் திகழ்ந்துகொண்டிருக்கிறார் பவன் கல்யாண். ஜனசேனா என்ற கட்சியை தொடங்கியிருக்கும் அவர் அரசியல் ஆளுமையாகவும் திகழ்கிறார். மேலும் ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார்.

விநோதய சித்தம் ரீமேக்: அவரது நடிப்பில் கடைசியாக ப்ரோ படம் வெளியானது. இந்தப் படம் தமிழில் வெளியாகி ஹிட்டடித்த விநோதய சித்தம் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கிலும் சமுத்திரகனியே இயக்கியிருந்தார். பவன் கல்யாணுடன் அவருடைய உறவினரான சாய் தரம் தேஜு நடித்திருந்தார். கடந்த வருடம் ஜூலை வெளியாகி படம் மெகா ஹிட்டடித்தது. அதுமட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடி ரூபாயை வசூலித்ததாக கூறப்படுகிறது.
புதிய படம்: ப்ரோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பவன் கல்யாண் தே கால் ஹிம் ஓஜி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை சாஹோ படத்தை இயக்கிய சுஜீத் இயக்கியிருக்கிறார். பவன் கல்யாணுடன் ப்ரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். ஓஜி படம் தவிர்த்து ஹரி ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங் உள்ளிட்ட படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். ஒருபக்கம் அரசியல், மறுபக்கம் சினிமா என படுபிஸியாக வலம் வந்துகொண்டிருக்கிறார் பவர் ஸ்டார்.
பிறந்தநாள்: சூழல் இப்படி இருக்க பவன் கல்யாண் நேற்று தனது 53ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்த நாளை கட்சியினரும், ரசிகர்களும் வெகு விமரிசையாக கொண்டாடினார்கள். ரத்த தான முகம், மரக்கன்று நடுதல், அன்னதானம் என களைகட்டியது பவனின் பிறந்தநாள் கொண்டாட்டம், ஆனால் அந்தக் கொண்டாட்டத்தில் ஒரு சோகமான நிகழ்வும் நடந்திருக்கிறது.
என்ன நடந்தது: அதாவது சந்திரகிரி தொகுத்திக்குட்பட்ட அனுபல்லே கிராமத்தில் ஜனசேனா கட்சி தொண்டர்களான கோபி மற்றும் மது என்ற இரண்டு பேர் பவன் கல்யாண் பிறந்தநாளையொட்டி பேனர் வைத்தனர். அந்த பேனரை கட்டியபோது தவறுதலாக மின்சார கம்பியை தொட்டுவிட்டனர். இதனால் மின்சாரம் தாக்கி கோபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மது படுகாயமடைந்து திருப்பதியில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தை அடுத்து உயிரிழந்த கோபியின் குடும்பத்துக்கு ஜனசேனா கட்சியின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் மதுவுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடமும் கட்சி சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











