twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒற்றைப் பாடகரின் செல்வாக்கு - அன்றும் இன்றும்

    By Magudeswaran G
    |

    - கவிஞர் மகுடேசுவரன்

    ஒவ்வோர் இசையமைப்பாளரும் பெண்குரலுக்கென்று ஒரு பாடகியைச் சார்ந்திருந்தார்கள். விசுவநாதன் இராமமூர்த்தியின் பாடல்களைச் சுசீலாவின் குரலில்லாமல் நினைத்துப் பார்க்க முடியாது. படங்கள்தோறும் பாடல்கள்தோறும் சுசீலாவைப் பாட வைத்தனர். இளையராஜாவின் பாடல்களுக்கு வலுச்சேர்த்தது ஜானகியம்மாவின் குரல். அதனை யாரும் மறுக்க மாட்டார்கள். முதற்பாடலான “அன்னக்கிளி உன்னைத் தேடுதே…” என்பதிலிருந்து தொடர்ந்து பாடி வந்தவர் அவர். மனோஜ் - கியான் என்னும் இரட்டை இசையமைப்பாளர்கள் கொஞ்சமே இசையமைத்திருந்தாலும் அவர்கள் சசிரேகா என்ற பாடகியரின் குரலைப் பரவச் செய்தனர். தனித்த இனிமையான குரலை உடையவர் வாணி ஜெயராம். அவரைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்ட இரட்டை இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ். ஒவ்வோர் இசையமைப்பாளர்க்கும் தம் படைப்பு இத்தகைய குரலால் வெளிப்பட வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்தக் கனவினை விட்டுத்தரவே மாட்டார்கள். இந்தப் பாட்டின் உள்ளழகினை யார் பாடினால் வெளிக்கொணர்வார்கள் என்பதைத் துல்லியமாகக் கணிப்பார்கள். தாங்கள் உருவாக்கும் பாடல்களின் பெண்மொழியை அவ்வாறு ஒரு குறிப்பிட்ட பாடகியின் குரலால் வெளிப்படுத்துகிறார்கள் என்று கொள்ளலாம்.

    one singer domination

    பாடுவதைத் தொழிலாகக்கொண்ட ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒரு குரல் வாய்க்கும். இளமையில் வாய்த்த குரல் நடுக்காலத்தில் சற்றே மாறுபடும். முதுமையின்போது அந்தக் குரலுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், இளமையில் வாய்த்த அதே குரலோடு முதுமையிலும் பாட இயல்வது அரிதுதான். எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் குரல் இளமையில் ஒருவாறும் இடைக்காலத்தில் ஒருவாறும் வெளிப்பட்டதை அறிவோம். முதுமையில் அவருடைய குரல் பெரிதாக மாற்றமடையவில்லை. அவர் இன்றைக்கும் தொடர்ந்து விரும்பப்படுவதற்கு அதுவும் காரணம்.

    டி. எம். சௌந்தரராஜனின் குரல் அவருடைய இளமையில் துல்லியமும் துலக்கமுமாய் இருந்தது. நடுக்காலத்தில் அதன் கணீர்த்தன்மை மிகுந்தது. இளையராஜா இசையமைத்த மென்மைச் செம்மையான பாடல்களுக்கு சௌந்திரராஜனின் கணீரென்ற ஒலிப்பு பொருந்தவில்லை. படுக்கையறையில் ஆணும் பெண்ணும் இழைந்தபடி பாடுமாறு மென்முனகல் தன்மையோடு அமைந்தது “நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத…” என்னும் பாடல். சௌந்திரராஜனின் கணீரென்ற ஆண்குரல் அப்பாடலின் பள்ளியறைத் தன்மைக்குப் பொருந்தவில்லை. அதன் பிறகு இளையராஜாவின் பாடல்களில் அவர்க்கான தேவைப்பாடு குறைந்தது. குரலின் மாறுபாடு இப்படியெல்லாம் ஒரு பாடகரைப் பின்னுக்குத் தள்ளிவிடும். உண்பதிலிருந்து கழுத்தை முறையான சாய்ப்பில் வைத்துத் தூங்குவதுவரை விழிப்பாக இருந்து தத்தம் குரலைக் காத்து வரவேண்டும்.

    அறிமுகமாகிய 'ரோஜா’ திரைப்படத்தில் இரகுமானுக்குப் பெயர்பெற்றுத் தந்தது “சின்ன சின்ன ஆசை” என்னும் பாடல். அந்தப் பாடல் அதன் பெண்குரலுக்காகவும் விரும்பப்பட்டது. மின்மினி என்னும் அந்தப் பாடகி தொடர்ந்து அவருடைய இசையில் பல பாடல்களைப் பாடியும் வந்தார். எதிர்பாராத வகையில் மின்மினியின் குரல் கம்மிப் போயிற்று. தொண்டையில் ஏற்பட்ட ஒரு குறையின் காரணமாக அவர் பாட முடியாதவரானார். நாடெங்கும் ஓரிடம் தவறாமல் ஒலித்த பாடலைப் பாடிய பாடகிக்கு அப்படியொரு போகூழ் அமைந்துவிட்டது.

    ஒரு பாடகர் தாம் பிடித்த அவ்வளவு எளிதில் விட்டுத்தரமாட்டார். எம்ஜிஆர் சிவாஜிக்குத் தாம் ஒருவரே பாடிக்கொண்டிருந்த நிலையில் “அடிமைப்பெண்” திரைப்படத்தில் “ஆயிரம் நிலவே வா” பாடலைப் புதியவர் பாலு பாடினார். எம்ஜிஆருக்குப் புதியவர் ஒருவர் பாடுகிறார் என்ற செய்தியைத் திரையுலகம் நம்பவேயில்லையாம். அவ்வாறே சௌந்திரராஜனும் நம்பியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அது நடந்தது. அந்த முயற்சியின்மீது பல திக்குகளிலிருந்தும் நிறைவின்மைச் சொற்கள் எழுந்தமையால் திரும்பவும் சௌந்திரராஜனுக்கே அடுத்த பாடலைப் பாடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. “இதுநாள்வரைக்கும் அவருக்கு நான்தான் பாடுவேன் என்ற நிலைமை இருந்தது. அதனால ரொம்பக் காலமா ஒரு பாட்டுக்கு எப்பவும் வாங்கற ஐந்நூறு வாங்கிட்டிருந்தேன். இப்ப புதுசா வர்றவங்களும் அவருக்குப் பாடத் தொடங்கிட்டாங்க. திரும்பவும் நான் வந்து பாடணும்னா எனக்கு ஆயிரத்தைந்நூறு கொடுங்க…” என்று கேட்டாராம் சௌந்திரராஜன். அத்தொகையும் தரப்பட்ட பிறகே அவர் பாட முன்வந்தார். இந்நிகழ்வினை சௌந்திரராஜனே தம் நேர்காணலொன்றில் கூறியிருக்கிறார். ஒரு பாடகர் தம் திரைப்பாடல் வாழ்வில் பற்றியிருக்க வேண்டிய இடம் அவ்வளவு உறுதியானது என்பதை விளக்கவே இதனைக் கூறினேன்.

    பாலசுப்பிரமணியத்திற்கு மாற்றாக மனோவைக் கொண்டுவர இளையராஜா என்ன பாடு பட்டிருப்பார் என்பதையும் கணிக்க முடிகிறது. பூவிழி வாசலிலே, வேலைக்காரன் போன்ற படங்களில் பாடி ஓரளவு அறியப்பட்டிருந்த பாடகர் மனோவை ஏற்றுக்கொள்ளாத இயக்குநர்களும் இருந்தனர். அவர்களுடைய ஒரே தேர்வு எஸ்.பி. பாலசுப்பிரமணியம்தான். தம்மால் முடிந்த இடங்களிலெல்லாம் மனோவுக்கும் அருண்மொழிக்கும் இளையராஜாதான் வாய்ப்பு கொடுத்துக்கொண்டிருந்தார். ஆர். வி. உதயகுமார் போன்ற இயக்குநர்கள் மனோவை ஏற்றுக்கொள்ளவே இல்லை. எஜமான் படப்பாடல் பதிவு பாலசுப்பிரமணியத்தின் வருகைத் தாழ்ச்சியால் காலம் தள்ளிக்கொண்டே போனது. மனோவைப் பாடவைத்துப் பதிவாக்கித் தருகிறேன் என்று இளையராஜா கூறியபோதும் உதயகுமார் முனைந்து மறுத்துவிட்டார். பிறகு ஒருவாறு பாலசுப்பிரமணியத்தை அழைத்து வந்து அப்பாடல்களைப் பதிந்தனராம். ஒரு புதுக்குரல் உள்ளே வருவதற்கும் நிலைப்பதற்கும் நிலைத்த பின்பும் வளர்ந்து செழிப்பதற்கும் ஆயிரம் தடைகள் இருக்கின்றன.

    திரையுலகில் நெடுநாள்களாக வழக்கிலிருந்த “ஒற்றைக்குரல் மேலாண்மை” தற்காலத்தில் மொத்தமாகத் தகர்ந்து போய்விட்டது எனலாம். யார்யாரோ புதியவர்கள் தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால், இன்றும் ஒவ்வோர் இசையமைப்பாளரின் அணுக்கத்தைப் பெற்றுப் பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால், பழைய ஒற்றைத் தனியாட்சி நிலையை அவர்கள் எய்துவது மிகக்கடினம்.

    English summary
    Cinema article about one singer domination
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X