twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அன்பின் வழியது உயிர்நிலை - ஒரு விடுகதை ஒரு தொடர்கதை

    By Shankar
    |

    - கவிஞர் மகுடேசுவரன்

    'நாயகன் அவன் ஒருபுறம் அவன் விழியில் மனைவி அழகு...
    நாயகி அவள் மறுபுறம் அவள் வானில் இரண்டு நிலவு...' என்னும் பாடலைக் கேட்டிருப்பீர்கள். நானும் இப்பாடலைப் பன்முறை விரும்பிக் கேட்டிருக்கிறேன். இவ்வரிகளின் பொருள் எனக்குப் பிடிபடவில்லை. ஆண் பெண் இணைப்பாடலில் 'மணக்கும்வரை பூக்கடை... மணம் மாறினால் அது சாக்கடை' என்று கடுமையான சொல்லாடல்களும் வருகின்றன. இந்தப் பாடல் இடம்பெற்ற படத்தைத் தேடினேன். 'ஒரு விடுகதை ஒரு தொடர்கதை' என்ற படத்தில் இடம்பெற்ற இணைப்பாடலாம் இது. படத்தையும் தேடிப்பிடித்துப் பார்த்தேன். மனித உறவுச் சிக்கல்களைத் தரங்குறையாமல் எளிமையாக விளக்கி நகர்ந்த அருமையான படம். இப்படத்தின் இசையமைப்பாளர் கங்கை அமரன்.

    Oru Vidukathai Oru Thodarkathai, a classic from 70's

    மாநகரத்திற்குத் தன் தங்கையைக் கல்லூரியில் சேர்ப்பிக்க விஜயன் வருகிறார். தங்கையின் கல்லூரிப் படிப்புக்காக அந்நகரத்திற்கே பணிமாற்றல் பெற்றுக்கொண்டு வந்திருப்பவர். ஒரு நிறுவனத்தின் கிளை நிர்வாகியாக அவர் பணியாற்றுகிறார். அவரின்கீழ் சிலர் பணியாற்றுகின்றனர். அந்த அலுவலகத்தின் தட்டச்சினர் ஷோபா. ஷோபாவின் கணவன் அவரை மனைவியாகவே மதிக்காதவன். தன்னிடமுள்ள சொத்துக்கு ஆசைப்பட்டு ஷோபாவின் தந்தை தன் தந்தையாரைப் பேசி மடக்கி மணம் செய்துவிட்டதாக அவன் கருதுகிறான். அதனால் அவன் ஷோபாவுடன் எந்த உறவையும் வைத்துக்கொள்ளவில்லை. அவனுடைய புறக்கணிப்பால் ஷோபாவும் கண்ணீர் சிந்தவில்லை. அவன் என்றாவது மனம் மாறக்கூடும் என்ற நம்பிக்கையில் அவனுக்கு எல்லாப் பணிவிடைகளையும் செய்கிறார். அதைச் சாக்காக வைத்துக்கொண்டு அடிக்கடி பெண் தோழமையை மாற்றிக்கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்கிறான் ஷோபாவின் கணவன்.

    புதிய நிர்வாகி அலுவகத்திற்கு வரும் ஒரு நாள். கணவனின் ஏச்சு பேச்சுகளோடு போராடி அள்ளிச் செருகிக்கொண்டு அலுவலகத்திற்கு வந்து சேரும் ஷோபாவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அங்கே நிர்வாகிச் சுழல் நாற்காலியில் அமர்ந்திருக்கும் விஜயன் தன் முன்னாள் காதலன். இருவரும் ஒருவையொருவர் பார்த்துக்கொள்கையில் காட்சித் தொடர் பின்னோக்கிச் செல்கிறது. தட்டச்சுக் கூடத்தில் விஜயனும் ஷோபாவும் அச்சுத்தட்டுகிறார்கள். ஷோபாவைக் காதல் பார்வை பார்ப்பதும் அவர் பெயரையே தட்டச்சு செய்வதுமாக இருக்கும் விஜயன் அக்கூடத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார். பிறகு இருவரும் காதல் வயப்படுகிறார்கள்.

    Oru Vidukathai Oru Thodarkathai, a classic from 70's

    ஊரின் இருவேறு பகுதிகளுக்கிடையே இருக்கும் அவர்கள் அன்றாடம் ஒரு கடிதம் எழுதிக்கொள்கிறார்கள். விஜயனை வந்தடையும் ஷோபாவின் கடைசிக் கடிதம் ஓர் அதிர்ச்சிச் செய்தியைக் கூறுகிறது. தன் தந்தையார் வீட்டைக் காலிசெய்து தில்லிக்குக் கிளம்பிக்கொண்டிருப்பதாகவும் கடிதம் கண்டவுடனே வரும்படியும் அதில் இருக்கிறது. அடித்துப் பிடித்துக்கொண்டு ஷோபாவின் வீட்டுக்குச் சென்று பார்த்தால் வீடு பூட்டியிருக்கிறது. இருவர் தொடர்பும் முறிந்தது.

    இதற்கிடையே விஜயனுக்குத் திருமணமாகி குறையில்லாத இல்லறம் நடக்கிறது. அவ்வமயம் அவ்வூரில் கூடைப்பந்தாட்டப் போட்டி நடக்கிறது. அதில் விஜயனின் இளமைத் தோழன் விஜயபாபு பங்குகொள்ளும் அணியும் போட்டியிடுகிறது. அக்கூடைப் பந்துப் போட்டியைக் காணுமாறு விஜயபாபுவிடமிருந்து விஜயனுக்கு அழைப்பு வருகிறது. போட்டியைக் கண்டுகளித்த விஜயன் தம்பதியர் விஜயபாபுக்கு விருந்தழைப்பு விடுக்கிறார்கள்.

    Oru Vidukathai Oru Thodarkathai, a classic from 70's

    வீட்டுக்கு வரும் விஜயபாபு விஜயனின் மனைவி அழகில் மயங்கிவிடுகிறார். விஜயனின் மனைவிக்கும் அவன்மீது பயிர்ப்பில்லாப் பார்வைதான். இன்னொரு வாய்ப்பில் மூவரும் சேர்ந்து திரைப்படம் பார்க்கக் கிளம்புகிறார்கள். அவ்வமயம் விஜயனின் அலுவலகத்திலிருந்து ஓர் இடர்ப்பாடு குறித்த தொலைபேசி வருகிறது. அவர்கள் இருவரையும் திரையரங்குக்குச் செல்லும்படியும் தாம் படம் தொடங்குவதற்குள் வந்து சேர்ந்து கொள்வதாகவும் கூறிச்செல்கிறார் விஜயன்.

    திரையரங்கில் விஜயபாபினையும் விஜயன் மனைவியையும் சேர்ந்து காணும் கூட்டம் அவரிடம் நினைவொப்பம் பெற்றுக்கொண்டு "உங்க மனைவி அழகாக இருக்காங்க... நல்ல சோடிப்பொருத்தம்" என்று வாழ்த்துகின்றனர். அது ஒரு தொடக்கம்.

    இன்னொரு வாய்ப்பில் விஜயன் அலுவலகப் பணியாக தில்லிக்குக் கிளம்புகிறார். திரும்பி வர ஒருவாரம் ஆகும். விமான நிலையத்திற்கு விஜயன் கிளம்பிச் சென்றதும் வீட்டுக்கு வரும் விஜயபாபு விஜயனின் மனைவியைப் பெங்களூருக்கு அழைக்கிறான். அங்கே சென்று ஒருநாள் தங்கியிருந்து துய்த்துவிட்டு வரலாம், யார்க்கும் தெரியாது என்று அழைத்துச் செல்கிறான். விஜயனின் தில்லி விமானம் பெங்களூரில் இணைப்பு விமானம் பெற்றுச் செல்வது. தில்லி விமானம் காலந்தாழ்த்தியமையால் அதன் பயணியர் ஒரு விடுதியில் தங்க வைக்கப்படுகிறார்கள். அதே விடுதிக்குத்தான் விஜயனின் மனைவியை அழைத்துக்கொண்டு விஜயபாபு வந்து சேர்கிறார். தற்செயலாக இருவர் அறைகளும் அடுத்தடுத்து அமைந்துவிடுகிறது.

    Oru Vidukathai Oru Thodarkathai, a classic from 70's

    விஜயனின் எண்ணத்தில் மனைவியைப் பற்றிய இன்ப நினைவுகள் எழுகின்றன. அடுத்த அறையில் இருக்கும் அவளோ இன்னோர் உறவில் திளைத்திருக்கிறாள். அந்தச் சூழ்நிலையில் படத்தில் இடம்பெறுகின்ற பாடல்தான் மேலே சொன்னது. இப்போது அந்த பாட்டு வரிகளை நினைவிற்கொணர்க. இவன் விழியில் மனைவியழகு. அவள் வானில் இரண்டு நிலவு. யாரை இங்குக் குற்றம் சொல்வது ? விதியின் வழி வாழ்க்கை செல்வது.

    பாடல் முடிவில் காவலர் சோதனை நடைபெறுகிறது. விஜயனின் மனைவியும் விஜயபாபும் அறைக்கு வெளியே காவலரின் ஐயவளைவுக்குள் வினவப்படுவதை விஜயன் பார்த்துவிடுகிறார். காதலர்கள் இருவரும் விஜயனை அங்கே பார்த்து அதிர்ந்து நிற்க காவலர்களை அடையும் விஜயன் சொல்வது இதுதான் : "இன்ஸ்பெக்டர்... நான் ஒரு கம்பெனியோட மேனேஜர்... இவுங்க புதுசா திருமணம் ஆனவங்கதான். போன வாரம்தான் இவங்க திருமணத்துக்குப் போயிருந்தேன்," என்று கூறிக் காப்பாற்றுகிறார்.

    Oru Vidukathai Oru Thodarkathai, a classic from 70's

    அவர்கள் இருவரும் காலில் விழுந்து கதற, "எங்காவது போய் நல்லபடியாக இருங்க...," என்று வாழ்த்திச் சென்றுவிடுகிறார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்த நிலையில், விஜயபாபு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாகிவிட, அவர்களைத் தற்செயலாகக் காணும் விஜயன் குடும்ப நிலையுணர்ந்து எல்லா உதவிகளையும் செய்கிறார். பக்கவாதம் குணமாக நல்ல மருத்துவத்துக்கான ஏற்பாடும் நடக்கிறது. அக்குடும்பத்திற்கு விஜயன் வந்து போய்க்கொண்டிருப்பதை அலுவலகக் கடைநிலை ஊழியர் ஷோபாவிடம் போட்டுக்கொடுக்க அவரிடம் எல்லா உண்மைகளையும் விஜயன் சொல்கிறார். விஜயனின் நிலையை எண்ணி ஷோபா கண்ணீர் வடிக்கிறார்.

    இதற்கிடையில் கல்லூரியில் பயிலும் விஜயனின் தங்கையைக் காதல் வலையில் வீழ்த்தி கருவுறச் செய்திருப்பான் ஷோபாவின் கணவன். தங்கையிடம் உண்மை உணர்ந்து அவளைக் கெடுத்தவனைத் தேடிச் செல்கையில் அவ்வீட்டில் ஷோபா இருப்பார். ஷோபாவின் வாழ்க்கையைப் பறிப்பது தகாது என்று கிளம்புகையில் "நீ மனைவியை விட்டுக் கொடுத்தாய்... நான் கணவனை விட்டுத் தருகிறேன்..." என்று கதறுவார். அதை விஜயன் ஏற்காதபோது ஷோபா தற்கொலை செய்துகொள்ள, அங்கே ஒரு முடிவு ஏற்படுகிறது. ஷோபாவின் கதை விடுபடும்கதை. விஜயனின் கதை தொடர்கதை.

    எம்.ஏ. காஜா என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இவர் விஜயனை நாயகனாக்கி எண்ணற்ற படங்களை எடுத்திருக்கிறார் போலும். தலைக்குமேலே கத்தி தொங்குகின்ற இது போன்ற கதையை எடுப்பதற்கு வேறுவகைத் துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் காஜாவிடம் இருந்திருக்கிறது. காஜாவைப் பற்றி எந்தச் செய்தியும் அறியக்கிடைக்கவில்லை. அந்தப் படத்தில் பங்கு பெற்றிருந்த பலர் இன்றைக்கு உயிரோடு இல்லை.

    இப்படத்தின் இரண்டாம் நாயகன் விஜயபாபு ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார் : "எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் தமிழ் சினிமாவுல பரபரப்பான ஹீரோவா இருந்தவங்க சார் நாங்க... நானு, சுதாகர், விஜயன், சரத்பாபு... எல்லாருமே பெரிய ரவுண்டு வந்தோம் சார். வருசத்துக்கு நாங்க ஹீரோவா நடிச்சு அஞ்சாறு படங்கள் வரும் சார்... அந்தக் காலம் எல்லாம் போச்சு சார்..."

    Read more about: classic ஷோபா
    English summary
    A nostalgia on MA Kaja's classic drama Oru Vidukathai Oru Thodarkathai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X