ஆஸ்கர் 2023.. களைகட்டிய விருந்து - உற்சாகத்தில் மிதக்கும் டாம் க்ரூஸ்
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மார்ச் மாதம் நடக்கவிருக்கும் சூழலில் நேற்று விருந்து கோலாகலமாக நடந்தது. இதில் டாம் க்ரூஸ், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திரையுலகின் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். அந்த விருதை பெற்றால் மிகப்பெரிய கௌரவம் என்று திரையுலகினர் நினைக்கின்றனர். இதற்காகவே பிரத்யேகமாக படங்களும் தயாரிக்கப்படுவதும் உண்டு. இந்த வருடத்திற்கான ஆஸ்கர் விருதுக்கும் பல படங்கள் நாமினேஷன் சென்று இறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

மார்ச் 12ல் ஆஸ்கர் விருது வழங்கும் விழா
இந்த வருடத்திற்கான (95ஆவது ஆஸ்கர்) ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் மார்ச் 12ஆம் தேதி நடக்கவிருக்கின்றன. இந்த வருடம் எந்தெந்த படங்கள், எந்தெந்த கலைஞர்கள் விருதுகள் பெறப்போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே இப்போதே எழுந்திருக்கிறது. பல்வேறு படங்கள் நாமினேஷனில் இடம்பெற்றிருக்கின்றன.

நாமினேஷனில் இருக்கும் எதிர்பார்ப்புக்குரிய படங்கள்
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் - தி வே ஆஃப் வாட்டர், பிளாக் பாந்தர் என பாக்ஸ் ஆஃபிஸில் சக்கைப்போடு போட்ட படங்கள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிடுகின்றன. அதேபோல் டாம் க்ரூஸ் நடித்து தயாரித்த டாப் கன் - மேவ்ரிக் படமும் இடம்பெற்றுள்ளது.

ஆஸ்கர் 2023 - களைகட்டிய விருந்து
இந்நிலையில் ஆஸ்கர் 2023 விருதுகள் வழங்கும் விழா மார்ச் 12ஆம் தேதி நடக்கவிருக்கும் சூழலில் நேற்று விருது பட்டியலில் இடம்பெற்றிருக்கும் திரைக்கலைஞர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு நடந்தது. அங்கு விதவிதமான உணவுகளுடன் விருந்தும் களைகட்டியது. இதில் டாம் க்ரூஸ், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உள்ளிட்ட 182 பேர் கலந்துகொண்டனர்.

பெருமிதப்பட்டுக்கொண்ட நடிகர் டாம் க்ரூஸ்
விருந்தில் கலந்துகொண்டபோது பேசிய டாம் க்ரூஸ், "டாப் கன் - மேவ்ரிக் படத்தை மக்கள் திரையரங்குகளில் வந்து பார்க்கத்தான் படம் எடுத்தேன். ஆனால் இப்போது ஆஸ்கர் ரேஸில் டாப் கன் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என பெருமிதம் கொண்டார். இதனையடுத்து ஆஸ்கர் அகாடமி விருதின் தலைவர் பேசுகையில், கடந்த வருடம் வில் ஸ்மித் மேடையில் இருந்தவரை அறைந்தது ஏற்றுக்கொள்ளமுடியாதது. அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையும் உகந்தது அல்ல" என்றார்.

ஆஸ்கர் ரேஸில் இந்திய படங்கள்
முன்னதாக இந்தியாவிலிருந்து தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் ஆஸ்கர் நாமினேஷனுக்கு சென்றது. ஆனால் அந்தப் படம் அதிலிருந்து நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலும் ஆஸ்கர் ரேஸில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்தப் பாடலுக்காக மரகதமணிக்கு கோல்டன் குளோப் விருது சமீபத்தில் கிடைத்தது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications