Oscar 2024 nomination list: ஆஸ்கர் விருது இறுதி பரிந்துரை பட்டியல்.. வெளியானது லிஸ்ட்!
சென்னை: 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் மாதம் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. இதையொட்டி இன்றைய தினம் ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது. கோல்டன் குளோம் விருதுகளில் அதிக விருதுகளை பெற்ற ஓபன்ஹெய்மர் மற்றும் பார்பி உள்ளிட்ட படங்களே இந்த ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலிலும் அதிகமான இடங்களை பிடித்துள்ளன. கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான ஓபன்ஹெய்மர் படத்தில் கிலியன் மர்ஃபி, எமிலி ப்ளண்ட் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.
ஓபன்ஹெய்மர் படம் சிறந்த திரைப்படம் சிறந்த நாயகன், சிறந்த நடிகை, சிறந்த துணை கதாபாத்திரம் உள்ளிட்ட 13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனிடையே சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை போன்ற பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது.

ஆஸ்கர் விருதுகள் 2024: சினிமாவில் மிகப்பெரிய சாதனையாக ஆஸ்கர் விருதுகள் பார்க்கப்படுகின்றன. இந்த விருதுகளை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டவர்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து ஆர்ஆர்ஆர், The elephant whisperers ஆவணப்படம் ஆகியவை ஆஸ்கர் விருதுகளை வென்று பெருமை சேர்த்தன. இந்நிலையில் 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் மாதம் 10ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. இந்த விருதுகளுக்கான இறுதிக்கட்ட பரிந்துரை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை இந்திய படங்கள் இறுதிக்கட்டத்திற்கு தேர்வாகாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஆஸ்கர் பரிந்துரை பட்டியல்: கோல்டன் க்ளோப் விருதுகளை வென்ற திரைப்படங்கள் தற்போது ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலிலும் இடம்பெற்றுள்ளன. கடந்த ஜனவரி 8ம் தேதி நடைபெற்ற 81வது கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் ஓபன்ஹெய்மர், கில்லர்ஸ் ஆப் தி ப்ளவர் மூன், பார்பி, புவர் திங்ஸ் உள்ளிட்ட படங்கள் ஏராளமான விருதுகளை தட்டிச் சென்றன. கிறிஸ்டோபர் நோலன், கிலியன் மர்பி, எம்மா ஸ்டோன், லில்லி கிளாட்ஸ்டோன் உள்ளிட்டோர் விருதுகளை வென்றனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஆஸ்கர் பரிந்துரை பட்டியலிலும் இவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சிறந்த திரைப்படங்களுக்கான பரிந்துரை பட்டியல்: சிறந்த திரைப்படங்களுக்கான பரிந்துரை பட்டியலில் அமெரிக்கன் ஃபிக்சன், அனாடமி ஆஃப் ஃபால், பார்பி, தி ஹோல்டோவர்ஸ், கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன், மாஸ்ட்ரோ, ஓபன்ஹெய்மர், பாஸ்ட் லைவ்ஸ், புவர் திங்ஸ், தி சோன் ஆஃப் இன்டரஸ்ட் ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன. இதனிடையே இந்த ஆண்டில் சிறந்த படம் கேட்டகரியில் 3 பெண் இயக்குநர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது. இதனிடையே பார்பி படத்தை இயக்கிய பெண் இயக்குநர் கிரேட்டா கெர்விக்கின் பெயர் சிறந்த இயக்குநருக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெறாததும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.
ஆவணப்படம்: இந்த பரிந்துரை பட்டியலில் ஓபன்ஹெய்மர் 13 விருதுகளுக்கும் புவர் திங்ஸ் படம் 11 விருதுகளுக்கும் கில்லர்ஸ் ஆஃப் தி ப்ளவர் மூன் படம் 10 விருதுகளுக்கும் பார்பி 8 விருதுகளுக்கும் மேஸ்ட்ரோ 7 விருதுகளுக்கும் தேர்வாகியுள்ளன. இந்திய வம்சாவளியை சேர்ந்த இயக்குநர் நிஷா பஹுஜாவின் To kill a Tiger என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்பட பிரிவில் இடம்பெற்றுள்ளது. கனடா நாட்டு தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப் படம் ஜார்கண்டை சேர்ந்த இந்திய விவசாயியின் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த முறை The elephant whisperers ஆவணப்படம் ஆஸ்கர் வென்ற நிலையில் இந்தப் படம் ஆஸ்கர் வெல்லுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications