A.R.R:இங்கிலாந்தில் பறக்கும் ஏ.ஆர். ரகுமான் கொடி.. 5 வருசத்துக்கு அவருதான் தலைவர்.. எதற்கு தெரியுமா?
இங்கிலாந்து: இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தமிழ் திரையுலகில் இருந்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி இருந்தாலும், இன்றைக்கு உலகமே கவனிக்கும் இசைக் கலைஞராக வளர்ந்து நிற்கின்றார். இரண்டு ஆஸ்கார் பட்டங்களை அவர் வென்றது, இந்தியாவுக்கே கவுரவம் சேர்த்தது. மேலும் இவரது கச்சேரிகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்றது. அதேபோல் இவர் தற்போது இங்கிலாந்தில் உள்ள, உலகப் புகழ் பெற்ற, லண்டன் டிரினிட்டி லாபன் கன்சர்வேட்டரியின் கௌரவத் தலைவராக அடுத்த 5 ஆண்டுகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் செய்திகளும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
தமிழ் சினிமாவில் இருந்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய ஏ.ஆர். ரகுமான், தனது முதல் படத்திலேயே தேசிய விருதினை வென்றார். இது பலரது கவனம் அவர் மீது குவிய பெரும் காரணமாக இருந்தது. தொழில் நுட்பகாலம் வளர்ந்து கொண்டு இருந்தபோது, தனது இசையில் அந்த தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தி அதன் மூலம் இசையில் பல பரிமாணங்களைக் கொண்டு வந்து அசத்தியவர். இதனாலே இவரது இசை மற்ற இசை அமைப்பாளர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது.

ஸ்லம்டக் மில்லினர் படத்திற்காக இவர், இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றபோது, ஒட்டுமொத்த இந்திய நாடுமே அவரால் பெருமை பெற்றது. தற்போது இவரது இசையில் வெளியான ஆடு ஜீவிதம் படத்தின் பின்னணி இசை ஆஸ்கார் நாமினேசனில் உள்ளது. ஆஸ்கார் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. அப்படி ஆடு ஜீவிதம் படத்திற்காகவும் இவர் ஆஸ்கார் வாங்கினால், அது ஏ.ஆர். ரகுமானின் 3வது ஆஸ்கார் விருதாக அமையும்.
ஏ.ஆர். ரகுமான்: இப்படியான நிலையில், ஏ.ஆர் ரகுமான் லண்டனில் உள்ள உலகப் புகழ் பெற்ற, டிரினிட்டி லாபன் கன்சர்வேட்டரியின் கௌரவத் தலைவராக அடுத்த 5 ஆண்டுகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட பின்னர், ’இந்தப் பொறுப்பினை ஏற்றுக் கொள்வது என்பது எனக்கு கிடைத்த பாக்கியமாகவும் மரியாதையாகவும் கருதுகின்றேன். இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஆக்கப்பூர்வமான உறவுகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படுவதில் நான் இருப்பதால் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இந்த கௌரவத் தலைவர் பதவி மூலம் எதிர்காலத்தில் மேலும் புதுமையானவற்றை ஒன்றாக ஆராய முடியும் என்று நான் நம்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். இவர் இந்த லண்டன் டிரினிட்டி லாபன் கன்சர்வேட்டரிக்கு கடந்த ஆண்டு சென்றிருந்தார்.

திறமை: அப்போது அவர், உலகின் சிறந்த இசையை, கலையை வளர்ப்பதற்கு, உருவாக்குவதற்காக மிகவும் தீவிரமாக செயல்பட்டு வரும் டிரினிட்டி லாபன் கன்சர்வேட்டரியின் செயல்பாடுகளைப் பார்த்து பாராட்டினார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது, டிரினிட்டி லாபன் கன்சர்வேட்டரியின் கலை இயக்குனரான அலெக்சாண்டர் ஸ்ராம் பேசியது பலரது கவனத்தினை ஈர்த்தது. அதாவது, ’உலகம் முழுவதிலும் உள்ள இசைத் திறமைகளை அரவணைப்பது ஒரு சிறந்த கலைக் கல்விக்கு இன்றியமையாதது என்று நாங்கள் நம்புகிறோம்’ எனக் கூறினார்.
விவாகரத்து: ஏ.ஆர். ரகுமான் கடந்த மாதத்தில் தனது மனைவி சாய்ரா பானுவைப் பிரிவதாக அறிவித்தார். கிட்டத்தட்ட 30ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து இவர்ககள் வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. விவாகரத்து அறிவித்த காலத்தில் இவர்களது குழந்தைகள் இவர்களுக்கு உறுதுணையாக நின்றனர்.


Click it and Unblock the Notifications











