நாட்டு நாட்டு சிறந்த பாடலா? சர்ச்சையை கிளப்பிய கீரவாணியின் தந்தை!
சென்னை : நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை பெற ராஜமௌலி பல கோடி செலவு செய்ததாக தகவல் பரவி வரும் நிலையில், கீரவாணியின் தந்தை நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடல் இல்லை என்று கூறியுள்ளார்.
எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியானத் திரைப்படம் ஆர்ஆர்ஆர். இத்திரைப்படம் வெளியாகி ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து வரலாற்று சாதனை படைத்தது.
இத்திரைப்படத்தில், ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன்,ஸ்ரேயா சரண் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆஸ்கர் விருது
95வது அகாடமி விருது விழாவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. இப்பாடலை பாடலாசிரியர் சந்திரபோஸ் எழுத, பிரபல இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்து இருந்தார். கால பைரவா மற்றும் ராகுல் சிப்லிகஞ்ச் இணைந்து இப்பாடலை பாடி இருந்தனர்.

கீரவாணியின் தந்தை பேட்டி
'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினர் ஆஸ்கர் விருது வென்றதை நாட்டின் பிற பகுதியினரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கீரவாணியின் தந்தையும், மூத்த பாடலாசிரியருமான கோடூரி சிவ சக்தி தத்தா, 'நாட்டு நாட்டு பாடல் தனது மகன் இசையமைத்த சிறந்த பாடல் என்று சொல்லிவிட முடியாது என்று கூறியுள்ளார்.

பல சிறப்பான பாடல்கள் உள்ளன
மகன் ஆஸ்கர் விருது வாங்கியதை நினைத்து பெருமிதம் கொள்வதாகவும், ஆனால், 'நாட்டு நாட்டு' பாடலை விட சிறப்பான பல டியூன்கள் மற்றும் பாடல்களை அவர் படைத்திருக்கிறார் என்றார். மேலும், கீரவாணிக்கு மூன்று வயதாக இருக்கும் போதே அவரை இசை பள்ளிக்கு அனுப்பி இருக்கிறேன். அவருடைய அசாத்திய திறமையைக் கண்டு பல முறை வியந்து இருக்கிறேன். ஆனாலும், நான் நாட்டு நாட்டு பாடலுக்கு ரசிகன் இல்லை.

அவர்களால் தான் இது சாத்தியம்
நாட்டு நாட்டு பாடலின் நடன இயக்குனர் பிரேம் ரக்ஷித்தின் அபாரமான நடன அமைப்பு, ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரணின் டான்ஸ் நிச்சயம் பாராட்டப்பட வேண்டும். அவர்களால் தான் இந்த ஆஸ்கர் விருது சாத்தியமானது என்றார். ஆஸ்கர் நாயகன் கீரவாணி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம்,கன்னடம் ஆகிய மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
ஆஸ்கர் விருது தேர்வுக்காக ஆர்ஆர்ஆர் படக்குழு மிகப்பெரிய தொகையை செலவு செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கீரவாணியின் தந்தையே, நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடல் இல்லை என கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோபல் விருதை வென்றது குறிப்பிடத்தககது.


Click it and Unblock the Notifications











