அசிங்கம்.. தலைவலியுடன் ரசிகர்களை வெளியே அனுப்பக் கூடாது.. கங்குவாவை எச்சரித்த ரசூல் பூக்குட்டி!
சென்னை: கங்குவா படத்துக்கு தேசிய விருது வென்ற தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில், ஆடியோ வெளியீட்டு விழாவில் ஓவர் பில்டப்பாக அவரை பற்றி சூர்யா மற்றும் சிறுத்தை சிவா உள்ளிட்டோர் பேசினர். புஷ்பா படத்துக்காக தேசிய விருதினை தேவி ஸ்ரீ பிரசாத் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கங்குவா திரைப்படத்தை பார்த்த பலரும் முக்கியமாக அந்த படத்தை கெடுத்ததே தேவி ஸ்ரீ பிரசாத் தான் என்றும் சமையல் அறை தட்டு முட்டு சாமான்களை எல்லாம் வைத்து இசையமைத்துள்ளார் என ப்ளூ சட்டை மாறன் மீம் எல்லாம் போட்டு பங்கமாக கலாய்த்து வருகிறார்.

இந்நிலையில், ரசிகர்கள் தொடர்ந்து தியேட்டரை விட்டு வரும் போது தலைவலியுடன் வருகிறோம் என போட்டு பொளந்து வரும் நிலையில், ஆஸ்கர் வென்ற ரசூல் பூக்குட்டி தனது சோஷியல் மீடியா பக்கத்தில் கங்குவா படத்தை கழுவி ஊற்றியுள்ளார்.
சிங்கம் படத்தில் இருந்து கத்தும் சூர்யா: சூர்யா அமைதியாக நடித்த அயன், வாரணம் ஆயிரம், காக்க காக்க, சில்லுன்னு ஒரு காதல், சூரரைப் போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்தாலும் போரடிக்காத படங்களாக உள்ளன. ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம், ஆறு, வேல் உள்ளிட்ட படங்களில் கத்த ஆரம்பித்த சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் நேற்று வெளியான கங்குவா படத்தில் படம் முழுவதும் கத்திக் கொண்டே இருப்பது ரசிகர்களை சோதித்துவிட்டது.
தேவி ஸ்ரீ பிரசாத் சொதப்பல்: தேசிய விருது வாங்கிய தேவி ஸ்ரீ பிரசாத்திடம் கங்குவா படத்தின் இசையமைக்கும் பணியை சிறுத்தை சிவா ஒப்படைத்த நிலையில், படம் முழுக்க இரைச்சல் சத்தத்தை பயன்படுத்தி ரசிகர்களின் காதுகளை செவிடாக்கியுள்ளார் என்றும் தலைவலி மாத்திரையுடன் வந்து படத்தை பாருங்கள் என தாய்மார்களே திட்டிவிட்டு செல்லும் அளவுக்கு மோசமான இசையை கொடுத்திருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.

ரசூல் பூக்குட்டி விளாசல்: தியேட்டருக்கு வந்து பார்க்கும் ரசிகர்கள் தியேட்டரை விட்டுச் செல்லும் போது சந்தோஷமாக செல்ல வேண்டும். தலைவலியுடன் செல்லக் கூடாது. இதற்காக மியூசிக் டைரக்டரை மட்டும் திட்டுவது சரியில்லை. கடைசி நேரத்தில், அவர்கள் மீது போடப்படும் பிரஷர் மற்றும் சாதாரண நடிகர்களை யுக புருஷர்களாக காட்ட சத்தம் மட்டுமே ஒரு வழியென நினைக்கும் கருத்துக் கொண்டவர்களின் செயல் தான் இதுபோன்று இசை மீது மோசமான விமர்சனம் வரக் காரணமே என கங்குவா படத்தின் இசை விமர்சனத்தை சுட்டிக்காட்டி தனது கருத்தை வெளிப்படையாகக் கூறி விளாசியுள்ளார் ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி.
சத்தத்தை குறைப்பார்களா?: கங்குவா படத்தில் நீளம் பெரிய பிரச்சனை இல்லை. ஏற்கனவே எடிட்டரே போட்டுப் பார்த்து 2.30 மணி நேரம் இருந்தால் படம் தப்பிக்கும் என்று சொல்லியிருப்பார் போலத் தெரிகிறது. புரமோஷனுக்கு செய்த செலவில் பாதி செலவு படத்தின் பிஜிஎம்முக்கு செலவு செய்திருந்தாலே இசை நல்லா வந்திருக்கும் என்கின்றனர். கொஞ்சம் டெசிபிளை குறைத்து படத்தை ரசிகர்கள் முதலில் பார்க்க செய்தால் தான் முதல் வாரமாவது படத்தை ஓட வைக்க முடியும் என்றும் படக்குழு அதை செய்யுமா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











