Oscars 2023: அவர்கள் இசை கேட்டேன் இன்று ஆஸ்கருடன் நிற்கிறேன் - மேடையில் கெத்து காண்பித்த கீரவாணி
நியூயார்க்: சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை நாட்டு நாட்டு பாடல் வென்றது. இதனையடுத்து மேடை ஏறிய இசையமைப்பாளர் கீரவாணி தனது நன்றியை பாடலாக பாடிய சம்பவம் வெகுவாக ரசிக்கப்பட்டது.
95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் இருக்கும் டால்பி தியேட்டரில் தொடங்கியது. இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய விழாவை ஹாலிவுட் நடிகர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். இதில் இந்தியா சார்பில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் நாமினேஷன் ஆகியிருந்தது. இதனால் ஆஸ்கர் விருதை நாட்டு நாட்டு பாடல் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு பலரிடம் இருந்தது.

ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல்
இந்நிலையில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை நாட்டு நாட்டு பாடல் வென்றது. இதனையடுத்து பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கீரவாணிக்கும், அந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியர் சந்திரபோஸுக்கும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இந்தியாவிலிருந்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடுத்ததாக இசையமைப்பாளர் என்ற முறையில் கீரவாணி ஆஸ்கர் விருது வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடலிலேயே நன்றி சொன்ன கீரவாணி
விருதை பெற்றுக்கொண்ட பிறகு மேடையில் பேசிய எம்.எம்.கீரவாணி, "அமெரிக்காவில் இருக்கும் பிரபல இசைக்கலைஞர்களான தி கார்ப்பெண்ட்டர்ஸின் இசையை கேட்டு நான் வளர்ந்தவன். இப்போது இங்கு ஆஸ்கர் விருதுடன் நிற்கிறேன்" என பெருமிதம் கொண்டார். இதனையடுத்து படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு பாடலாக பாடி தனது நன்றியை தெரிவித்த அவர், இதை சாத்தியமாக்கிய அனைவருக்குமே நன்றி என கூறினார். பாடலாசிரியர் சந்திரபோஸ், நமஸ்தே என்பதோடு மட்டும் முடித்துக்கொண்டார்.

கோல்டன் குளோப் வென்ற நாட்டு நாட்டு பாடல்
ஆஸ்கர் விருதுக்கு முன்னதாக நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதுகளிலும் நாமினேஷன் ஆனது. சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் போட்டியிட்ட நாட்டு நாட்டு பாடலுக்காக கீரவாணி கோல்டன் குளோப் விருதையும் வென்றார். அதேபோல் பாடலாசிரியர் சந்திரபோஸும் கோல்டன் குளோப் விருதை வென்றார். இப்போது இருவரும் இதே பாடலுக்காக ஆஸ்கர் வென்றிருக்கின்றனர். அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர்
பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த ராஜமௌலி இயக்கிய படம்தான் ஆர்.ஆர்.ஆர். இதில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சுதந்திர போராட்ட வீரர்களின் நட்பை மையப்படுத்தியும், சுதந்திர போராட்டத்தை மையப்படுத்தியும் இந்தப் படமானது உருவாக்கப்பட்டிருந்தது. பான் இந்தியா படமாக வெளியான ஆர்.ஆர்.ஆர் 1000 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அமெரிக்காவில் ஒரு திரையரங்கில் இந்தப் படம் திரையிடப்பட்டபோது படத்தை பார்த்தவர்கள் இயக்குநர் ராஜமௌலியை வெகுவாக பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











