ஜாம்பவான் கவுண்டமணியை தியேட்டரில் பார்ப்பதே சூப்பர்.. ஒத்த ஓட்டு முத்தையா பப்ளிக் விமர்சனம்!
சென்னை: சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தை பார்த்த பொதுமக்கள் கவுண்டமணியை மீண்டும் திரையில் பார்ப்பதே மகிழ்ச்சியாக உள்ளது. அவர் ஏன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் நடிக்காமல் விட்டுவிட்டார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கவுண்டமணி, செந்தில், வடிவேலு காமெடி காட்சிகளை எல்லாம் வைத்துக் கொண்டு இன்றும் பல நகைச்சுவை சேனல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவர்கள் ஏன் பழையபடி படங்கள் பண்ணுவதில்லை என்றும் அவர்களை இயக்குநர்கள் சரியாக பயன்படுத்தாதது ஏன் என்கிற கேள்விகள் தான் மக்கள் மத்தியில் உள்ளது.

ஒத்த ஓட்டு முத்தையா படம் வெளியான நிலையில், அந்த படத்தை பார்த்த மக்கள் படத்திற்கு பாசிட்டிவான கருத்துக்களையும் கலவையான விமர்சனங்களையும் கொடுத்துள்ளனர்.
காமெடி ஜாம்பவான்: நாகேஷுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை நடிப்பால் பல கோடி மக்களை சிரிக்க வைத்த நபர் என்றால் அது காமெடி ஜாம்பவான் கவுண்டமணி தான். கவுண்டமணி மற்றும் செந்தில் இணைந்து செய்த அத்தனை காமெடிகளையும் எப்போது வேண்டுமானால் போட்டு பார்த்து நம்முடைய கவலைகளை எல்லாம் மறந்து சிரிக்கலாம். அவரை மீண்டும் திரையில் பார்ப்பதே மகிழ்ச்சியாக உள்ளது. கவுண்டமணியின் வசன உச்சரிப்பு மற்றும் காமெடி கவுன்ட்டர், அரசியல் நய்யாண்டி எல்லாம் ஒத்த ஓட்டு முத்தையா படத்தில் சிறப்பாக உள்ளது என ரசிகர் ஒருவர் கூறியுள்ளார்.
அரசியல்வாதிகளின் தில்லு முள்ளு: சமகால அரசியலில் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் ஓட்டுக்காக மட்டுமே அரசியல் நடத்துவதையும் மக்களுக்குத் தேவையான எந்தவொரு முன்னேற்றத்தை பற்றியும் அவர்கள் கவலைப்படாமல் இருப்பதையும் தோலுரித்துக் காட்டியுள்ளனர். காமெடி படமாகவும், அரசியல் படமாகவும் கமர்ஷியல் படமாகவும் இந்த ஒத்த ஓட்டு முத்தையா உள்ளதாக இன்னொரு ரசிகர் கூறியுள்ளார்.
செந்திலுடன் மட்டுமல்ல: கவுண்டமணி செந்திலுடன் மட்டும் தான் நடிப்பார் என பார்த்தால் யோகி பாபு, மொட்டை ராஜேந்தர் என பல காமெடி நடிகர்களுடன் இணைந்து தன்னால் கலக்கலான காமெடி நடிப்பை கொடுக்க முடியும் என இந்த படத்தில் நிரூபித்துள்ளார். படம் பார்க்கும்படித்தான் இருக்கிறது என இன்னொரு ரசிகை பேசியுள்ளார்.
நல்லா எடுத்திருக்கலாம்: படத்தில் உள்ள கதைக்கு தேவையான அளவுக்கு பட்ஜெட் செலவு செய்து யோகி பாபுவின் மண்டேலா படம் போல எடுத்திருந்தால் நல்லா இருந்திருக்கும். ஆனால், சீரியல் போல இருப்பது தான் கொஞ்சம் கடுப்பாக உள்ளது. கவுண்டமணியை வைத்து இன்னமும் நல்ல படம் எடுக்கலாம் என இன்னொரு ரசிகர் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











