Test Blue Sattai Maran Review: பொறுமை இருந்தா பாருங்க.. அருமையா இருக்குமாம்.. டெஸ்ட் பட விமர்சனம்!
சென்னை: சசிகாந்த் இயக்கத்தில், மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் டெஸ்ட். இந்த படம் தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று அதாவது ஏப்ரல் 4ஆம் தேதி மதியம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. வழக்கமாக ஒரு படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார்கள் என்றால் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடுவார்கள். ஆனால் இந்த படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளதால், நண்பகல் 1.30 மணிக்கு வெளியானது.
படம் பார்த்த பலரும் நயன், மீரா ஜாஸ்மின் மாதவன் மற்றும் சித்தார்த் நடிப்புக்காகவே படத்தை பார்க்கலாம் என கூறி வருகிறார்கள். இப்படியான நிலையில் இந்த படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் என்ன மாதிரியான விமர்சனத்தை கொடுத்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் இருந்தது. இந்நிலையில், அவர் படத்தின் விமர்சனம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். டெஸ்ட் படத்திற்கு அவர் என்ன மாதிரியான விமர்சனம் கொடுத்துள்ளார் என்பது குறித்து பார்க்கலாம்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " மாதவனும் நயன் தாராவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு பல ஆண்டுகளாக குழந்தைகள் இல்லை. செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள ரூபாய் 5 லட்சம் வேண்டும். இதில் மாதவன் மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கும் விஞ்ஞானி, அவர் மாற்று எரிபொருள் கண்டுபிடித்துவிட்டார். மாற்று எரிபொருள் கண்டுபிடிக்க, மாதவன் சுமார் 50 லட்சம் கடன் வாங்கி விட்டார். மாதவன் கண்டுபிடித்த எரிபொருளை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றால், அதற்கு லஞ்சமாக ரூபாய் 5 கோடிகள் கேட்கிறார் அமைச்சர்.

கதை: இன்னொரு பக்கம் பார்த்தால், ஒரு பெரிய கிரிக்கெட் வீரர் (சித்தார்த்), ஆனால் அவர் இப்போது பார்மில் இல்லை. அடுத்து நடக்க உள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றால், அவரை இந்திய அணியில் இருந்து தூக்கி வீசி விடுவார்கள். கிரிக்கெட்டில் மேட்ச் ஃபிக்சிங் செய்யக் கூடிய நபர்கள் சித்தார்த்தை அணுகுகிறார்கள். சித்தார்த்துக்கும் மாதவனுக்கும் ஒரே எதிரிதான். அதாவது, மாதவனுக்கு ரூ.50 லட்சம் கொடுத்ததும், சித்தார்த்தை மேட்ச் ஃபிக்சிங்கிற்கு அழைப்பதும் ஒரே ஆள்தான். அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
ரசிக்க முடியல: இந்த படத்தை திரில்லர் கலந்த ஸ்போர்ட்ஸ் டிராமா என்று கூறலாம். ஸ்போர்ட்ஸ் டிராமைவைப் பொறுத்தவரையில் கதை சுமாராக இருந்தாலும் படத்தில் அவ்வப்போது வரும் ஸ்போர்ட்ஸ் காட்சிகளை பரபரப்பாக காட்டி, திரைப்படத்தை சுவாரஸ்ய படுத்திவிட முடியும். ஆனால் இந்த படத்தின் மைய கதையும் சரியில்லை ஸ்போர்ட்ஸ் காட்சிகளும் மொக்கையாக இருந்தது.ஸ்போர்ட்ஸ் காட்சிகளை ரசிக்க முடியவில்லை, மிகவும் மோசமாக எடுத்து வைத்திருந்தார்கள்.

பொறுமை: மேட்ச் ஃபிக்சிங் என்பது மிகவும் சுவாரஸ்யமான ஏரியா, படத்தில் அது குறித்து சுவாரஸ்மாக பேசாமல், மேட்ச் ஃபிக்சிங் என்பதை சும்மா வாய் வார்த்தையாகவே சொல்லிக் கொண்டு உள்ளார்கள். மாதவன் டிப்ரஸன் ஆகிவிட்டார் எனக் காட்டும் காட்சிகள் எனக்கு ஒட்டவே இல்லை. இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றுதான் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தில் காட்டப்பட்ட ஸ்போர்ட்ஸ் காட்சிகள் போர் அடிக்கிறது. உங்களுக்கு பொறுமை இருந்தால் வீட்டில் உட்கார்ந்து பாருங்கள், அருமையாக இருக்கும்" எனக் கூறியுள்ளார். இவரது விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











