8 வாரங்கள் டைம்.. ஓடிடி விஷயத்தில் கறாரான முடிவெடுத்த திரையரங்க உரிமையாளர் சங்க கூட்டமைப்பு!
சென்னை: இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் திரையரங்க பிசினஸ் என்பது எப்போதுமே ஏறுமுகமாக தான் இருந்து வருகிறது. ஆனால் இதில் பெரும் சிக்கலை உருவாக்க கூடியது என்றால் அது ஓடிடி தளங்களின் தலையீடு தான். ஒரு படம் தியேட்டரில் வெளியாகி ஆண்டுக்கணக்காக ஓடிய காலம் எல்லாம் மலையேறிப் போய், தற்போது இரண்டு வெள்ளிக்கிழமைகள் தாண்டுமா? நான்கு வெள்ளிக்கிழமைகள் தாண்டுமா? என்ற நிலைக்கு ஆளாகி விட்டது. இன்னும் சொல்லப் போனால் வெள்ளி விழாவை டார்கெட் செய்த தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் இப்போது வெள்ளிக்கிழமைகள் மீதுதான் கண்ணாக உள்ளார்கள்.
ஓடிடி தளங்களின் வருகையால் படங்களை நினைத்த தேதியில் வெளியிட முடியாமல் தயாரிப்பு நிறுவனங்கள் பெரிய சிக்கலை எதிர்கொண்டு வருகிறார்கள். பொங்கல், தீபாவளி போன்ற நாட்களை குறிவைத்து படத்தை தியேட்டரில் வெளியிடலாம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டு இருந்தால், ஓடிடி தளங்கள் எங்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கான வெள்ளிக்கிழமை ஸ்லாட்கள் நிறைந்துவிட்டன, நீங்கள் உங்கள் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றுங்கள் என்று உத்தரவிடும் இடத்திற்கு வந்துவிட்டார்கள்.

வட்டிக்கு பணம் வாங்கி, படத்தை தயாரிக்கத் தொடங்கி, படப்பிடிப்பு காலத்தில் ஏற்படும் பல பிரச்னைகளை சரி செய்து, படத்தை எடுத்து, மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தி, ரிலீஸ் நேரத்தில் வரும் திடீர் சிக்கல்களையும் தீர்த்து படத்தை ரிலீஸ் செய்தால், படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, அவை தியேட்டரில் பிக்-அப் ஆகும் போது படம் ஓடிடி தளங்களில் வெளியாகிவிடுகிறது. இதனால் தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாவே குறைந்து விடுகிறது. இதில் தயாரிப்பாளர்களுக்கான நேரடி வருவாய் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், திரையரங்க உரிமையாளர்களுக்கு கிடைக்கும் பங்குத் தொகையும் வேண்டிய அளவு கிடைக்காமல் போகிறது.
கால அவகாசம்: பெரிய நடிகர்களின் படங்களுக்கு 8 வார கால அவகாசம் கொடுக்கும் ஒடிடி தளங்கள் சிறிய பட்ஜெட் படங்களுக்கு அந்த அவகாசத்தை கொடுப்பதில்லை. அதுவும் பான் இந்தியா படங்களுக்கு 8 வார கால அவகாசமும் பிராந்திய மொழிப் படங்களுக்கு 4 வார கால அவகாசமுமே கொடுக்கப்படுகிறது. அதேபோல் சிறிய பட்ஜெட் படங்கள் பலவும் ரசிகர்கள் மத்தியில் தியேட்டர்களில் நல்ல வரவேற்பை பெற்றாலும் நான்கு வாரங்கள் முடிவின் போது ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது.
தீர்மானம்: இதை தவிர்க்கவும், அனைத்து படங்களுக்கும் 8 வார கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் அதாவது, படம் வெளியாகி 8 வாரங்கள் முடிந்த பின்னரே ஓடிடி தளங்களில் படம் வெளியாக வேண்டும் என்று, தென்னிந்திய திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மேலும் இதை வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஓடிடி தளங்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குள்ளேயே பேசி முடிவு எட்டப்படுமா? அல்லது மத்திய அரசு செவி சாய்க்குமா என்ற கேள்வி பலரது மத்தியில் உள்ளது.



Click it and Unblock the Notifications











